பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan Family Tree

பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள்

பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan
  1. வாணர்குலத்து வல்லவரையன் வந்தியத்தேவன்
  2. அருள்மொழி வர்மன் என்கிற இராசராச சோழர்
  3. ஆழ்வார்க்கடியான் நம்பி என்கிற திருமலையப்பன்
  4. குந்தவை பிராட்டியார் (சுந்தரசோழரின் மகள்)
  5. பெரிய பழுவேட்டரையர்
  6. நந்தினி
  7. சின்ன  பழுவேட்டரையர்
  8. ஆதித்த கரிகாலர்
  9. சுந்தர சோழர்
  10. செம்பியன் மாதேவி
  11. கடம்பூர் சம்புவரையர்
  12. சேந்தன் அமுதன்
  13. பூங்குழலி
  14. குடந்தை சோதிடர்
  15. வானதி
  16. மந்திரவாதி ரவிதாஸன்(பாண்டியனுடைய ஆபத்துதவிகளின் தலைவன்)
  17. கந்தமாறன்(சம்புவரையர் மகன்)
  18. கொடும்பாளூர் வேளார்
  19. மணிமேகலை(சம்புவரையர் மகள்)
  20. அநிருத்த பிரம்மராயர்
  21. மதுராந்தக சோழர்

வந்தியத் தேவன் Vandhiyathevan

வந்தியத்தேவன் கதாபாத்திரத்தினை வீரம் மிகுந்தவனாகவும், முன்யோசனையின்றிச் செயலில் இறங்குபவனாகவும், குந்தவை மீதான காதலில் இன்புறுபவனாகவும் கல்கி வடிவமைத்துள்ளார்.

ஆதித்த கரிகாலனின் நண்பர்களில் ஒருவனாகவும் தூதுவனாக வந்தியத்தேவன் குந்தவையை சந்தித்து தன்பணி முடிவடைந்ததைத் தெரிவிக்க பழையாறைக்குச் செல்கிறான். பழையாறைக்கு செம்பியன் மாதேவியை காண செல்லும் மதுராந்தகத் தேவனை ஏமாற்றி, நிமித்தக்காரன் போல மாளிகைக்குள் நுழைகிறான். குந்தவையைக் காண வந்தியத்தேவன் முயலும் போது, பினாகபாணி பழுவூர் வீரர்களுடன் வந்து வந்தியத்தேவனை ஒற்றன் என்று கூறி கைது செய்யக் கூறுகிறான். அந்த வேளையில் ஆழ்வாா்க்கடியான் எனப்படும் திருமலையப்பன் வந்தியத் தேவனை நிமித்தகாரன் என்று ஊரார் நம்பும்படி செய்து குந்தவையை சந்திக்க வைக்கிறான்.

ஈழத்திற்கு சென்று இளவரசரை சந்தித்தது, பின் கப்பலில் ரவிதாசனிடம் மாட்டிக் கொண்டது, தன்னை காப்பாற்ற வந்த இளவரசா் அருள்மொழி வா்மரும் தானும் கடலில் சுழிகாற்றில் மாட்டிக் கொண்டது என்று அனைத்தினையும் வந்தியத்தேவன் குந்தவை தேவியிடம் கூறுகிறான். குந்தவையின் கட்டளைப்படியே, இளவரசரை சூடாமணி விகாரத்தில் சேந்தன் அமுதனும் சென்றிருப்பதை தெரிவிக்கிறான். இதற்குள் இளவரசர் இறந்துவிட்டதாக வதந்தி பரவி மக்கள் பழையாறை அரண்மனையில் கூடுகிறார்கள். அவர்களை சமாதானம் செய்யும் பொருட்டு மீண்டும் நிமித்தகாரன் போல நடிக்கிறான் வந்தியத்தேவன். அதைக் கண்ட பினாகபாணி வந்தியத்தேவனை நந்தினியின் ஒற்றன் என்கிறான். அதனால் கோபமடைந்த வந்தியத்தேவன் பினாகபாணியுடன் சண்டையிடுகிறான். அந்நேரத்தில் பழையாறைக்கு வருகைதரும் அநிருத்தர் தன் காவலர்களை விட்டு பினாகபாணியையும், வந்தியத்தேவனையும் சிறைபிடிக்கிறார். பின்பு குந்தவையுடன் பேசி, காஞ்சிக்கு சென்று ஆதித்த கரிகாலனுக்கு பாதுகாப்பாக இருக்க வந்தியத்தேவனை அனுப்ப திட்டமிடுகிறார். வந்தியத்தேவனுடன் திருமலையப்பனையும் உடன் அனுப்புகிறார்.

வந்தியத்தேவன் திருமலைக்காக காத்திருக்கும்போது, வானதி தேவி பல்லக்கில் செல்வதை காண்கிறான். திருமலை தன்னிடம் தேவையில்லாத காரியங்களில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்த காரணத்தால் வானதிதேவியை கண்டுகொள்ளாமல் குடந்தை சோதிடரிடம் செல்கிறான் வந்தியத்தேவன். அங்கு வந்தியத்தேவனைத் தொடர்ந்து வந்த வானதிதேவி இளவரசர் நாகைப்பட்டிணத்தில் இருப்பதை வந்தியத்தேவன் மூலம் அறிகிறார். குடந்தை சோதிடர் வீட்டிலிருந்து சென்ற வானதியை சில காளாமுக சைவா்கள் பிடித்துக் கொண்டார்கள்.

அருள்மொழிவர்மன் Arulmozhi Varman

சுந்தர சோழரின் மகனாகவும், ஆதித்த கரிகால சோழன் மற்றும் குந்தவை தேவியின் தம்பியாகவும் அருள்மொழிவர்மன் வருகிறார். ஓவிய, சிற்ப கலைகளை அலாதியான விருப்பம் கொண்டவராகவும், யானைகளின் மொழியை புரிந்தவராகவும், மதம் கொண்ட யானையை இலகுவாக கட்டுப்படுத்தும் திறன் வாய்த்தவராகவும் இருக்கிறார். அரச காரியங்களில் ஈடுபடும் போது நண்பர்களின் கருத்துகளையும், மந்திரிகளின் ஆலோசனைகளையும் அறிந்து முடிவெடுப்பவராகவும், பெரியவர்களின் சொற்படி நடப்பவராகவும் அருள்மொழிவர்மனின் கதாப்பாத்திரத்தினை கல்கி அவர்கள் செதுக்கியுள்ளார்.

ஆழ்வார்க்கடியான் நம்பி Aalvar Adiyan Nambi

திருமலை எனும் இயற்பெயர் கொண்டவர் என்றாலும் வைணவ சமயத்தினை பாடல்களால் வளர்த்த ஆழ்வார்களின் மேல் பற்று கொண்டு தன் பெயரை ஆழ்வார்க்கடியான் நம்பி என்று மாற்றிக் கொண்டார். உடல் முழுவதும் திருநாமம் இட்டுக் கொண்டும், கையில் எப்போதும் தடியுடன் இருப்பவர். அரசாங்க காரியங்களில் ஈடுபட்டிருந்தாலும், நிதானமாக செயல்படும் தன்மையுடையவர். வைணவத்தின் மீதான பற்றினால் சைவர்களை காணும் பொழுதெல்லாம் சண்டையிடுகின்றவர். பொன்னியின் செல்வன் கதைமுழுவதும் சைவர்கள் நிரம்பியிருக்கும் போதும், வைணவத்தின் சார்பாக வந்து சமன்செய்கிறவர். நகைச்சுவை ததும்ப பேசுவதும், அறிவுப்பூர்வான ஆலோசனைகள் சொல்வதிலும் வல்லவர்.


குந்தவை Kundavai Pirattiyar

சுந்தர சோழரின் மகளாகவும், ஆதித்த கரிகால சோழனின் தங்கையாகவும் அருள்மொழிவர்மனின் தமக்கையாகவும் வருகிறாள். செம்பியன் மாதேவி கோவில்களுக்குத் திருப்பணி செய்வதைப் போல, மருத்துவ சாலைகள் அமைப்பதற்கும், பராமரிப்பதற்குமான உதவிகளைக் குந்தவை செய்கிறாள். இதற்கு சுந்தர சோழர் நோயுற்று இருந்தமையினால் குந்தவை மனதில் ஏற்பட்ட மாற்றமாக இருக்கலாம் என்று பொன்னியின் செல்வனில் கல்கி கூறுகிறார். சுயமாக வாழவும், சுதந்திரமாக இருக்கவும் விரும்பும் பெண் என்பதால் பழையாறையில் செம்பியன் மாதேவியோடு வசிக்கிறாள். வானதியை அருள்மொழிவர்மனுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவெடுப்பதையும், நந்தினியின் சதிகளை முறியடிக்க சிரத்தை எடுப்பதையும் பார்க்கையில் குந்தவையை நவீன பெண்ணியத்தின் குறியீடாக கல்கி செதுக்கியிருப்பது தெரிகிறது. பராந்தக சுந்தரசோழா் செம்பியன் மாதேவி அநிருத்தா் அருள்மொழி உள்ளிட்ட அரசகுலத்தோா் மட்டுமல்லாமல் சோழ நாட்டு மக்கள் அனைவாின் அன்பையும் பெற்றவள்.


பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பின்னணி

பொன்னியின் செல்வன் புதினம் கற்பனையோடு கலந்து எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம்; என்றாலும் பொன்னியின் செல்வன் நிகழும் காலகட்டத்தில் வாழ்ந்த நிகழ்கால வரலாற்றுக் கதாப்பாத்திரங்களைச் சுற்றி சுழல்வதாக அமைந்தது.

விஜயாலய சோழன்(கி.பி 847 - 871) பல்லவர்களும் பாண்டியர்களும் பலமாக இருந்த காலத்தில் அவர்களை வென்று சோழர்களின் பொற்கால ஆட்சியை தோற்றுவித்த பெருமைக்குரியவர். அவருடைய மகன் ஆதித்த சோழனும் பல்லவர்களையும் கொங்கு நாட்டையும் வென்று விஜயாலய சோழன் தோற்றுவித்த சோழர் பேரரசை விரிவாக்கினார். அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஆதித்த சோழனின் மகன் முதலாம் பராந்தக சோழன்(கி.பி 907 - 955) ஈழத்திலும் பாண்டிய நாட்டிலும் பெற்ற வெற்றிகளே, பிற்காலச் சோழ மன்னர்களின் புகழ்பெற்றவர்கள் இராஜராஜ சோழனுக்கு, இராஜேந்திர சோழனுக்கும், முதலாம் குலோத்துங்க சோழனுக்கு சோழ சாம்ராஜ்ஜியத்தை தென்னிந்தியாவின் முதல் பேரரசாக விரிவுபடுத்த பெரிதும் உதவியது.

முதலாம் பராந்தக சோழன் தன்னுடைய இறப்பிற்கு முன்னால் பெற்ற வெற்றிகளையும் அதனால் விரிவடைந்த சோழ சாம்ராஜ்ஜியத்தைப் பற்றிய விவரங்களும் தெளிவாக கல்வெட்டுக்கள் மூலம் கிடைக்கின்றன. முதலாம் பராந்தக சோழனின் ஆட்சிக்காலத்தின் இறுதியில் மூன்றாம் கிருஷ்ணன் தலைமையிலான இராஷ்டிரகூடர்களுடனான போரில் சோழ இளவரசன் இராஜாதித்தன் தக்கோலத்தில் இறந்ததோடு மட்டுமல்லாது தொண்டை நாட்டையும் இராஷ்டிரகூடர்கள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தனர். இதன் காரணமாக சோழர்களின் அரசின் வட எல்லை தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி அளவிலேயே நின்றது.

இந்தக் காலகட்டத்திற்குப் பிறகான சோழ மன்னர்கள் ஐந்து பேரின் பெயர்கள் தெளிவாகக் கிடைக்கின்றன ஆனால் அவர்களது ஆட்சிக்காலம் அவர்களைப் பற்றிய குறிப்புக்கள் தெளிவாக இல்லை. கண்டராதித்தர், அரிஞ்சய சோழர், இரண்டாம் பராந்தக சோழர், ஆதித்த கரிகாலன், மதுராந்தக சோழர் ஆகிய ஐவரே அந்த சோழ அரசர்கள். இதில் மதுராந்த சோழர் என்ற உத்தம சோழரைப் பற்றிய வரலாறு மட்டும் கிடைக்கிறது. இதில் ஆதித்த கரிகாலன் இராஷ்டிரகூடர்கள் முதலாம் பராந்தகனின் கடைசிக் காலத்தில் கைப்பற்றிய தொண்டை மண்டலத்தை மீண்டும் போரிட்டு கைப்பற்றினான் என்று தெரிகிறது. இரண்டாம் பராந்தகனின் இறப்பிற்குப் பின்னோ அல்லது ஆதித்த கரிகாலனின் இறப்பிற்குப் பின்னோ சோழ நாட்டில் அடுத்த பட்டத்திற்கான மன்னரைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பம் இருந்திருக்கிறது. ஆதித்த கரிகாலன் கடம்பூரில் கொல்லப்பட்ட இடம் தற்போது மேலக்கடம்பூர் என அழைக்கபடுகிறது.காட்டுமன்னார்கோயில் அருகில்

பொன்னியின் செல்வன் திருவாலங்காட்டுச் செப்பேடுகள்

"விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான்(காணாமற் போனான்) கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளைப் போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகுமாறு அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் க்ஷத்ர தருமத்தை நன்கு அறிந்த அருண்மொழி அரசபதவியை விரும்பவில்லை என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரச பதவியை விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி அரசபதவியை மறுத்துவிட்டான் என்று தெரிவிக்கின்றன.

இந்தக் காலகட்டத்தைத்தான் கல்கி தன்னுடைய பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்திற்கான கதைக்களமாகத் தேர்ந்தெடுத்தார். பொன்னியின் செல்வன் என்பது இராஜராஜ சோழனுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர்களுள் ஒன்று, அருள்மொழிவர்மருடைய பெயராக கல்வெட்டுக்களில் காணப்படுவது இராஜகேசரி வர்மன் அல்லது மும்முடி சோழ தேவன் என்பது. பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தின் கதாநாயகனாக வாணர் குல வீரன் வல்லவரையன் வந்தியத்தேவனைக் கல்கி அவர்கள் தேர்ந்தெடுத்தார்; வந்தியத்தேவனைப் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் தஞ்சைப் பெரிய கோயில் கிடைக்கின்றன. இராஜராஜ சோழரின் தமக்கையும் வல்லவரையர் வந்தியத்தேவரின் மனைவியுமான ஆழ்வார் பராந்தகை குந்தவையார் என்று கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. கல்கி மேலும் K.A. நீலகண்ட சாஸ்திரியின் சோழர்கள் புத்தகத்தையும், T.V. சதாசிவப் பண்டாரத்தாரின் பிற்காலச் சோழர் சரித்திரத்தையும் மையமாக வைத்து பொன்னியின் செல்வனை எழுதினார். இதில் பிற்காலச் சோழர் சரித்திரத்தில் வந்தியத்தேவனைப் பற்றிய ஐந்து வரிகள் காணப்படுகின்றன. இதனை மையமாக வைத்தே வந்தியத்தேவனை பொன்னியின் செல்வனின் கதாநாயகனாக கல்கி வைத்தார்.

தமிழ் வரலாற்றில் பொன்னியின் செல்வனின் பங்கு.

இந்த நூல் தமிழில் வரலாற்று புதினங்களுக்கு ஒரு முன்னோடியாகவே அமைந்தது. இக்கதையின் முடிவுரையில், கல்கி குறிப்பிட்டு இருப்பது போல், விக்ரமன், சாண்டில்யன் போன்றவர்கள் தமிழ் வரலாற்றை புதினங்களாக்கிக் கொடுக்க முயன்று இருக்கிறார்கள். டாக்டர் எல். கைலாசம் பொன்னியின் செல்வனுக்கு முன் நடந்த நிகழ்வுகளை தனது புதினமான மலர்சோலை மங்கையில் கொடுத்துள்ளார். எனினும் பொன்னியின் செல்வனுக்கு இணையாக இன்று வரை ஒரு புதினமும் சிறப்பாக வரவில்லை என்ற பரவலான அபிப்பிராயம் உள்ளது.



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments