தமிழ் இலக்கிய நயம் சிலப்பதிகாரம் (கானல்வரி) Silapathikaram Canalvari Grade - 11

Silapathikaram Canalvari Grade - 11

கானல்வரி (சிலப்பதிகாரம்)

கோவலன் இறந்த செய்திகேட்ட கண்ணகி சீறி எழுந்தாள் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.

அரசனிடம் நீதி கேட்கப் புறப்பட்டாள். கண்ணகி பத்தினித் தெய்வம் உரைசார் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்

சிலப்பதிகாரத்தின் பெருமை

சிலப்பதிகாரம் தமிழினத்தின் அடையாள இலக்கியம். தமிழ் இனத்தின் வரலாறு, வாழ்வியல் இரண்டுக்குமான தொன்மைச் சான்று என்று சிலம்பைக் கருதலாம். நூற்றாண்டுகள் பல கடந்த பின்பும் அது தமிழின் உயிர்ப்பாக விளங்குகின்றது.

எந்த ஓர் இலக்கியம் அடுத்தடுத்த தலைமுறைகளால் போற்றப்பட்டும் புதுப்பிக்கப்பட்டும் வருகிறதோ, அந்தளவுக்கு அது உயிருள்ள இலக்கியம் என்று பொருள். சிலம்பினை அடிப் படையாகக் கொண்டு கோவலன் - கண்ணகி வரலாறு திகழ்கின்றது. சிலப்பதிகாரம் ஐம்பெரும் காப்பியத்தில் ஒன்று. சோழநாட்டில் பூம்புகார் மிகவும் புகழ்பெற்ற ஊர். இங்கே மாநாய்கள் என்ற பெரும் செல்வனின் மகள் கண்ணகி பூம்புகாரின் மற்றொரு வணிகன் ஒரேயொரு மகன் கோவலன். இருவருக்கும் சிறப்பாகத் திருமணம் நிறைவேறியது. பூம்புகாரில் சித்திராபதிக்கு மகளாக மாதவி பிறந்தாள். இவள் இயற்கையாகவே ஆடல் பாடல் கலைகளில் முழுமையாகத் தேறியிருந்தாள். மாதவியின் ஆடல் பாடல்களால் கரவப்பட்ட கோவலனின் செல்வச் செழுமை, கலை உணர்வு என்பன மாதவியை விடுதல் அறியா விருப்பினனாக அவளை மணக்க அவன் மனம் இசைந்தது. ஆயிரத்து எட்டு கழஞ்சு பொன் கொடுத்து வாங்கி அவளை மணந்தான். கண்ணகியைச் சிலகாலம் மறந்தான்; மாதவியுடன் தங்கி இன்புற்றான். பூம்புகாரில் இந்திரவிழா நிகழ்ந்தது. இது சீர்மிகு பெருவிழா. இவ்விழாக்களில் கோவலனும், மாதலியும் பங்கு பற்றித் தம் திறமையை வெளிப்படுத்தினர்.

கானல்வரிப் பாடல்

இந்திராவிழா முடிந்ததும் நகரத்தில் உள்ள அனைவரும் கடலிற் சென்று நீராடுவார்கள். மகிழ்ச்சியாக இருப்பார்கள். கோவலனும், மாதவியும் கடலுக்குச் சென்று நீராடி மகிழ்ந்தனர். கரையில் உள்ள புன்னை மர நிழலில் ஒரு மஞ்சத்தில், மாருதம் (தென்றல் காற்று) வீச அமர்ந்திருந்தனர். மாதவி அருகில் இருந்த யாழை எடுத்தாள். சுருதி கூட்டினாள். நரம்புகளை ஒழுங்குபடுத்திய பின்பு கோவலன் கையில் அதைக் கொடுத்தாள். அவன் அதை மீட்டினான். கானல்வரிப் பாடல்களைப் பாடினான்.

கோவலன் மாதவி பிரிவு

மாதவியை மகிழ்விக்க வேண்டும் என்பது கோவலனது நோக்கம். ஆனால் அவனையும் அறியாமல் அவனது உள்மன ஏக்கம் பாட்டில் வெளிப்பட்டுவிட்டது. கோவலன் மனத்தில் இன்னதென்று அறியாத சிறுவெறுப்பு குடி கொண்டது. இந்திர விழாவில் பலர் முன்னிலையில் மாதவி ஆடியதுதான் அதற்குக் காரணமாக இருக்கலாம். அவன் வேறொரு பெண்ணின் மீது அன்பு செலுத்துவது போன்ற குறிப்பு பாடிய அப்பாடலில் இருந்தது. இருப்பினும் காவிரியைப் பற்றி வரிப் பாடல்களைப் பாடினான்.

இந்திராவிழா முடிந்ததும் நகரத்தில் உள்ள அனைவரும் கடலிற் சென்று நீராடுவார்கள். மகிழ்ச்சியாக இருப்பார்கள். கோவலனும், மாதவியும் கடலுக்குச் சென்று நீராடி மகிழ்ந்தனர். கரையில் உள்ள புன்னை மர நிழலில் ஒரு மஞ்சத்தில், மாருதம் (தென்றல் காற்று) வீச அமர்ந்திருந்தனர். மாதவி அருகில் இருந்த யாழை எடுத்தாள். சுருதி கூட்டினாள். நரம்புகளை ஒழுங்குபடுத்திய பின்பு கோவலன் கையில் அதைக் கொடுத்தாள். அவன் அதை மீட்டினான். கானல்வரிப் பாடல்களைப் பாடினான்.

மாதவி அந்தப் பாடல் குறிப்பை விளையாட்டாகத் தான் எடுத்துக் கொண்டாள். இருப்பினும் உள்ளத்தே ஊடுதல் கொண்டாள் பின்விளைவை எதிர்பாராது அதே போன்று தானும் வேறோர் குறிப்பினை உடையவள்போல் விளையாட்டாகப் பாட எண்ணினாள்.

கோவலன் கையிலிருந்த யாழை வாங்கித் தானும் விளையாட்டாகப் பாட எண்ணினாள். தாள் வேறொரு ஆடவனிடம் அன்பு செலுத்துவது போன்ற குறிப்புத் தோன்ற சில பாடல்களைப் பாடினாள். அதைக் கேட்ட கோவலன் சினமடைந்தான். அவன் மனம் இருந்த வேதனையில் இப்பாடல்கள் எரிகிற தீயில் எண்ணெய் விட்டதென ஆகியது.

மாதவிக்குத் தன்மீது இருந்த அன்பு மாறிவிட்டது எனக் கோவலன் நினைத்தான். அவள் வேறு யார் மீதோ அன்பு செலுத்துகிறாள் என்று தவறாக எண்ணினான். கோபத்துடன் எழுந்தான். தனியாக நடக்கத் தொடங்கினான். விளையாட்டு வினையாகி விட்டது. கோவலன், மாதவியை விட்டுப் பிரிந்து சென்று விட்டான். நெடுநேரம் அங்கிருந்த மாதவி, கோவலன் வராமை கண்டு பணிப்பெண்களுடன் வீட்டுக்குச் சென்றாள். இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வந்தவர்கள் தனித்தனியாகப் பிரிந்து வீட்டுக்குச் சென்றார்கள். இதுதான் விதியின் செயல்.

 சிலம்புக்காவியம்

மலர் விரியக் கிடந்து

கானல் சோலை

கடல் விளையாடச்

சென்றிட்ட காலை

ஊடிப் பிரிந்தனன்

கோவலன் காளை

கூடியே செல்லாது

தன்னில்லம் வந்தனள்

அக்கணத்து வேளை

நீலமலர் நெடுங்கண்

மாதவி வாலை

இளங்கோவடிகள்

இளங்கோ அடிகள் சங்கமருவிய காலத்தில் தமிழகத்தில் பிறந்தவர். இவர் சமண சமயத்தைத் தழுவி, துறவறத்தைப் பின்பற்றியதாக அறியப்படுகிறது. இக்காலத்தில் போரின் சீர்கேடுகளால் தமிழகம் பாதிப்புற்றது. எனவே அறம் போற்றும் நூலான இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரம்' எழுந்து அறம் போதித்தது என்பர்.

'அரசியல் பிழைத்தோர்க்கு அறங் கூற்றாகும்.....' 

'உரைசார் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்.....' 

'ஊழ்வினை வந்துருத்தும்....'

என்ற அறக்கருத்துக்கள் இந்நூலில் வலியுறுத்தப்பட்டன. சிலப்பதிகாரம் புகார்க காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என மூன்று காண்டங்களைக் கொண்டது.

கானல்வரிப் பாடல் பாடிய சந்தர்ப்பம்

கோவலன் கண்ணகி கதையைக் கூறும் இக்காப்பியத்தின் புகார்க் காண்டத்தி கானல் வரி இடம் பெறுகிறது. கண்ணகியைப் பிரிந்து மாதவியுடன் கோவலன் வாழ்ந்து வரும் காலத்தில் இந்திர விழாக் காணச் சென்ற இடத்தில் மாதவியின் வேண்டுதலால் அவன் காவிரியை விளித்துப் பாடுகிறான். இப்பாடலைக் கேட்ட மாதவியும் எதிர்ப் பாட்டுப் பாடுகிறாள். இறுதியில் ஊழ்வினைப் பயனால் கோவலன் மனம் மாறுகிறது. மாதவியை விட்டுப் பிரிகிறான் இவ்வித கானல்வரிப் பாடல்களில் இருந்து கீழ்வரும் இப்பாடல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவை.

ஐம்பெருங் காப்பியங்கள் - சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவகசிந்தாமணி என்பன.

காவிரியை நோக்கிக் கோவலன் பாடிய பாடல் -01

திங்கள் மாலை வெண்குடையான் 

சென்னி செங்கோல் அது ஓச்சிக் 

கங்கை தன்னைப் புணர்ந்தாலும்,

புலவாய்; வாழி, காவேரி! 

கங்கை - தன்னைப் புணர்ந்தாலும் 

புலவாது ஒழிதல், கயற் கண்ணாய்! 

மங்கை மாதர் பெருங் கற்பு என்று 

அறிந்தேன்; வாழி காவேரி

கருத்துரை

திங்கள் மாலை -மாலை அணிந்த முழுமதி போல்; வெண் குடையான் சென்னி - புகழ் பெற்ற வெண்கொற்றக் குடையை உடையவன் சோழன்; (சென்னி தலை, முடி, சிறப்பு, . சோழன் - கழக அகராதி); செங்கோலது ஓச்சி - அவன் தன் செங்கோலைச் செலுத்தி; கங்கை தன்னை கங்கை நதியை; புணர்ந்தாலும் சென்று கூடினாலும்; புலவாய் - நீ அவளை வெறுப்பதில்லை; வாழி காவேரி - அதனால் நீ வாழ்வாயாக காவேரி! கங்கை தனைப் புணர்த் தாலும் (கூடினாலும்); புலவாது ஒழிதல் அவனை வெறுக்காமல் இருப்பதற்குக் காரணம்; கயற்கண்ணாய் கயல் போன்ற கண்களைக் கொண்டவளே; மங்கை மாதர் மங்கை மாதரின்; பெருங் கற்பென்று அறிந்தேன் - நிலைபெற்ற திண்ணிய கற்பின் திறன் என்பதனை அறிந்து கொண்டேன்; வாழி காவேரி - வாழ்வாயாக காவேரி.

பொழிப்புரை

மாலையை அணிந்த முழுமதியைப் போல வெண்கொற்றக் குடையை உடையவன் சோழன், (சென்னி - தலை, முடி, சிறப்பு, சோழன் - கழக அகராதி) அவன் தனது செங்கோலைச் செலுத்திக் கங்கையைக் கூடினாலும் (புனர்ந்தாலும்) நீ அவளை வெறுப்பதில்லை. அதனால் நீ வாழ்வாயாக காவேரி கங்கையை அவன் கூடினாலும் (புணர்ந்தாலும்) வெறுக்காமல் இருப்பதற்குக் காரணம், கயல் மீன் போன்ற அழகிய கண்களைக் கொண்ட மங்கையே! பெண்களின் நிலைபெற்ற திண்ணிய கற்பின் தன்மையே என்பதனை நான் அறிந்து கொண்டேன். வாழ்வாயாக காவேரி.

விளக்கவுரை

சோழ மன்னன் செங்கோல் செலுத்துபவன்.

மாதவியை மகிழ்விக்க வேண்டும் என்பதே கோவலனின் நோக்கம். ஆனால் அவனை அறியாமலே அவனது உள்மன ஏக்கம் பாட்டில் வெளிப்பட்டுவிட்டது.

அவன் வேறொரு பெண்ணின்மீது அன்பு செலுத்துவது போன்ற குறிப்பு அப்பாடலில் இருந்துள்ளது.

யான் வேறொருத்தியைக் கூடினாலும் வெறுக்கமாட்டாய்

....கங்கை தன்னைப் புணர்ந்தாலும்

புலவாது ஒழிதல் கயற்கண்ணாய்....."

என்று பாடுவது மாதவிக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க இடமுண்டு.

எந்தப் பெண்ணும் தனது கணவள் வேறொரு மங்கையிடம் காதல் கொள்வதை விரும்ப மாட்டாள் என்பது நியதி.

பெண்களிடம் நிலைபெற்ற பெருங் கற்பின் தன்மை இருப்பதை அறிந்து கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.

அதனால் வேறொரு பெண்ணைக் கூடினாலும் நீ வெறுக்க மாட்டாய் என்ற தொனி மாதவிக்குப் பிரச்சினைக் குரியதாயிற்று.

அருஞ் சொற்களுக்கான கருத்துரை

  • திங்கள் - சந்திரன்; 
  • சென்னி - சோழன்; 
  • புணர்ந்தாலும் கூடினாலும்; 
  • ஓச்சி - செலுத்தி; 
  • புல்வாய் - வெறுப்பதில்லை; 
  • புலவாது ஒழிதல்-வெறுக்காமல் இருப்பதற்கு; 
  • கயற்கண்ணாய் - கயல் மீன் போன்ற அழகிய கண்களையுடையவளே.

கயற்கண் - உவமைத்தொகை, உவமை உருபு இல்லை.

காவிரியை நோக்கிக் கோவலன் பாடிய பாடல் -02

மன் மாலை வெண்குடையான் 

வளையாச் செங்கோல், அது ஓச்சிக் 

கன்னி தன்னைப் புணர்ந்தாலும் 

புலவாய் வாழி காவேரி!

கன்னி தன்னைப் புணர்ந்தாலும் 

புலவா தொழிதல் கயற்கண்ணாய்! 

மன்னுமாதர் பெருங்கற்பென்று 

அறிந்தேன் வாழி காவேரி

கருத்துரை

மன்னு மாலை நிலைபெற்ற புகழ் மாலை சூடிய; வெண் குடையான் - வெண்கொற்றக்குடையை உடையவன் சோழ மன்னன் (அவன்); வளையா - என்றும் வளையாத (நீதி தவறாத); செங் கோலது ஓச்சி - செங்கோலைச் செலுத்தி; கன்னி தன்னை குமரியான ஒருத்தியை (கன்னியா குமரி எனக் கொள்க); புணர்ந்தாலும் - கூடினாலும்; புலவாய் - (நீ அவனை) வெறுக்காமலிருக் கிறாய்! வாழி காவேரி - அதனால் நீ நீடுவாழ்வாயாக காவேரி; கன்னி தன்னை - கல்லியா குமரியை: புணர்ந்தாலும் - சோழன் கூடினாலும்; புலவா தொழிதல் - நீ அவனை வெறுக்காமல் இருப்பதற்குக் காரணம்; கயற்கண்ணாய் - கயல் போன்ற அழகிய கண்களையுடையவளே! மங்கை மாதர் பெருங்கற்பென்று மாதரின் நிலைபெற்ற பெருங்கற்பின் தன்மையே என்று, அறிந்தேன் -நான் அறிந்து கொண்டேன்; வாழி காவேரி - காவேரியே நீ வாழ்க.

பொழிப்புரை

நிலைபெற்ற புகழ் மாலையைச் சூடிய வெண்கொற்றக் குடையையுடையவன் சோழ மன்னன் அவன் என்றும் முறை திறம்பாது செங்கோலைச் செலுத்திக் குமரியைப் புணர்ந்தானாயிலும் (கூடினானாயினும்) நீ அவனை வெறுக்காமல் இருக்கிறாய்! அதனால் நீ வாழ்வாயாக காவேரி கன்னியாகிய குமரியை அவன் புணர்ந்தாலும் (கூடினாலும்) நீ அவனை வெறுக்காமல் இருப்ப தற்குக் காரணம் கயல் போன்ற கண்ணினை உடையோய், மாதரின் நிலைபெற்ற பெருங் கற்பின் தன்மையே அவ்விதமானது என்பதனை நாள் அறிந்து கொண்டேன்; வாழி காவேரி.


விளக்கவுரை

சோழ மன்னன் என்றும் முறை திறம்பாது செங்கோல் செலுத்துபவன் என்பது காட்டப் பட்டுள்ளது.

'வளையா செங்கோலது ஓச்சி.......!'

குமரியுடன் கூடினாலும் நீ அவனை வெறுக்காது இருக்கிறாய், அவ்விதம் வெறுக்காமல் இருப்பதற்குக் காரணம் மாதரின் நிலைபெற்ற பெருங்கற்பின் தன்மையே எனக் கூறுகின்றான்.

இப்பாடலின் குறிப்பும் வேறொரு பெண்ணைக் கோவலன் மனத்தில் இருத்திக் காதலிப் பதாகவே அமைகின்றது. கயற்கண் உவமைத்தொகை.

இதுவும் மாதவியில் மனத்தைப் பாதிப்பதாகவும் அவள் எதிப்பாடல்பாட வழிவகுத்தாகவும் அமைகின்றது;

இங்கே மாதவியை மகிழ்விக்கப் பாட்டுப்பாட எண்ணிய கோவலன் அவனது உள்மன ஏக்கத்தால் இவ்விதம் வேறொரு பெண்ணைக் காதலிக்கும் குறிப்புத் தோன்றப் பாடியமை விளையாட்டு விளையாகி விட்டமைக்குக் காரணமாயிற்று.

காவிரியை நோக்கிக் கோவலன் பாடிய பாடல் -03

உழவர் ஓதை; மதகோதை; 

உடைநீர் ஓதை; தண்பதங்கொள் 

விழவர் ஓதை சிறந்தார்ப்ப 

நடந்தாய்; வாழி காவேரி! 

விழவர் ஓதை சிறந்தார்ப்ப 

நடந்த எல்லாம் வாய்காவா 

மழவர் ஓதை வளவன் தன்

வளனே வாழி காவேரீ!

கருத்துரை

உழவர் ஓதை - புதுப் புனல் பெருகி வந்தது கண்டு உழவர்கள் மகிழ்ச்சியால் ஆர்ப்பரிக்கும் ஏர் மங்கல ஓசையும்: மதகு ஓதை - நீர் மதகினூடாகச் செல்வதால் உண்டாகும் ஓசையும்; உடைநீர் ஓதை கரைகளையும், வரப்புகளையும் உடைத்துப் பாய்கின்ற நீரின் ஓசையும்; தண்பதங்கொள் விழவர் ஓதை - புதுப்புனல் விழாக் கொண்டாடும் மக்களின் மகிழ்ச்சி ஆரவாரபலவகை ஓசையும்; சிறந்தார்ப்ப - மிகுதியாக இருபக்கமும் சிறந்து ஒலிக்க: நடந்தாய் -நீ நடந்து வருகின்றாய் வாழி காவேரி ஆதலால் நீ வாழ்வாயாக! காவேரி!: விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப - விழாக்கொண்டாடும் மக்களின் பலவகை ஓசையும் இருபக்கமும் சிறந்து ஒலிக்க, நடந்த எல்லாம் - நீ அவ்வாறு நடந்த செயல்களெல்லாம்; வாய்காவா - அரணிடத்தைக் காவல் செய்யவும் காரணமான; மழவர் ஓதை வீர மறவர்களின் போர் ஒழுக்கத்தையுடைய; வளவன்தன் வளனே சோழ வேந்தனின் ஆட்சிச் சிறப்பேயாகும் என்பதனை நான் அறிந்தேன்; நீயும் அறிவாயாக; வாழி காவேரி - நீடுவாழ்வாயாக காவேரி,

பொழிப்புரை

புதுப்புனல் பெருகி வந்தது கண்டு உழவர்கள் மகிழ்ச்சியால் ஆர்ப்பரிக்கும் (சத்தம் செய்யும்) ஓசையும், நீர் மதகினூடாகச் செல்வதால் உண்டாகும் ஓசையும், கரைகளையும், வரப்புகளையும் உடைத்துப் பாய்கின்ற நீரின் ஓசையும், புதுப்புனல் விழாக் கொண்டாடும் மக்களின் பலவகை ஓசையும் இருபுறமும் சிறந்து ஒலிக்க, நீ நடந்து (ஊர்ந்து) செல்பவள். ஆதலினால் நி வாழ் வாயாக! காவேரி! மக்களின் பலவகை ஓசையும் இருபக்கமும் சிறந்து ஒலிக்க நீ அவ்வாறு நடந்த செயலெல்லாம் அரணிடத்தைக் காவல் செய்யும் வேண்டாமைக்குக் காரணமான வீரனின் போர் ஒழுக்கத்தையுடைய சோழ வேந்தனின் ஆட்சிச் சிறப்பே ஆகும் என்பதனை நான் அறிந்தேன். நீயும் அறிவாயாக! வாழி காவேரி!.

விளக்கவுரை

இங்கே பலவகை சத்தங்களும் சிறந்து ஆர்ப்பரிப்பதனை முதலில் காட்டுகின்றார். (ஓதை - சத்தம், ஆர்ப்பரிப்பு).

உழவர் ஓதை,மதகோதை, உடை நீரோதை, விழவரோதை எனக் காட்டுகின்றார். 

இவ்வித ஓசைகள் இருபுறமும் சிறந்து ஒலிக்க நீ நடந்து செல்பவள் என முதலில் காவேரியை (ஆற்றை) பெண்ணாக உருவகித்துச் சிறப்பிக்கின்றார். 

இச் சிறப்பித்தலானது கோவலன் தான் காதலிக்கும் வேறொரு பெண்ணின் சிறப்புகளையும், பெருமைகளையும் கூறுவதாக அமைந்துள்ளதால் மாதவிக்கு, கோவலன் வேறொரு பெண்ணின் மேல் விருப்பமுற்றுக் காதலிக்கின்றான் எனச் சந்தேகமாக எண்ண இடமளித்தது. இதுவே மாதவியும், காவிரியை நோக்கிப் பாடல் பாட வழிவகுத்தது.

காவேரி! (பெண்ணே!) நீ முன்னர் நடந்த செயலெல்லாம் (புணர்ந்தமையானது) வேண்டா மைக்குக் காரணமான போர் ஒழுக்கத்தை உடைய சோழ வேந்தனின் ஆட்சிச் சிறப்பே யாகும் என்பதனை நான் அறிந்தேன் என்கிறான்.

இவ்விதம் கோவலன் பாடியமையானது கோவலன் வேறொரு பாவையின் மேல் எண்ணம் கொண்டுள்ளான் என மாதவியின் நெஞ்சம் வருத்தமடைய வழிவகுத்தது எனலாம். விளையாட்டு வினையாக மாறுகின்றது.

மாதவி தன்னுடன் கலந்து இருந்த தன்மையை இழந்தான் கோவலன் என எண்ண வைத்தது. இதனால் அவளின் உள்ளத்து எழுந்தது ஊடல் (தற்காலிக கோபம்) ஆனால் அதனை மாதவி காட்டவில்லை; தன் முகத்தின் வாடலையே காட்டினாள் என்பது தெரிகின்றது.

அப்பொழுது மாதவி என்ன செய்கிறாள்;

கோவலன் கரத்து 

யாழினை வாங்கினாள்!

தானும் வேறோர் 

எண்ணத்தில் ஏங்கினாள்! 

என்பதைப் போலக் 

குறிப்பினைத் தாங்கும் 

கானல் வரியை 

மாதவி பாடினாள்!"

பாதிப்படைந்த, மனம் நொந்த மாதவி கோவலன் கரங்களில் இருந்து யாழினை வாங்குகின்றாள்.

தானும் வேறோர் எண்ணத்தில், தான் வேறு ஓர் ஆடவனிடம் அன்பு செலுத்துவது போன்ற குறிப்புத் தோன்ற கோவலன் பாடியமைக்குப் பதிலுக்குப் பதிலாகப் பாடத் தொடங்கினாள்.

இதுவே கோவலன், மாதவி பிரிவுக்குக் காரணமாகவும், விளையாட்டு வினையாக மாறி அமையவும் காரணமாயிற்று.

எனவே காவிரியை நோக்கி, மாதவி பாடத் தொடங்கினாள். இவ்வாறு யாழிசைத்துக் கோவலன் பாடிய கானல் வரிப் பாடல்களை மாதவி கேட்டாள். அவள் உடனே. 'இவன் உள்ளத்தே வேறோர் மாதினைப் பற்றிய குறிப்புள்ளது; இவன் என்னோடு கலந்த தன்மையில் இன்று வேறுபட்டான்" எனத் தவறாக முடிவு செய்து மாதவி, காவிரியை நோக்கி இவ்வாறு பாடினாள்.


காவிரியை நோக்கி மாதவி பாடிய பாடல் - 01

மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ வாடை அது போர்த்துக் 

கருங்க யல்கண் விழித்தொல்கி நடந்தாய் வாழி காவேரி 

கருங்க யற்கண் விழித்து ஒல்கி நடந்த வெல்லாம் நின் கணவன் 

திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி

கருத்துரை

மருங்கு வண்டு இருபக்கத்தும் வண்டுகள்; சிறந்து ஆர்ப்ப - ரீங்காரம் மிக்கு ஒலிக்க; மணிப்பூ ஆடை அழகிய பூஆடையைப்; போர்த்து - போர்த்துக் கொண்டு; கருங்கயல்கண் கருங்கயல் மீன் போன்ற கண்களை விழித்து ஒல்கி - விழித்து அசைந்து நடந்தனை; வாழி காவேரி - காவேரி நீ வாழ்வாயாக! கருங்கயற் கண் விழித்து - கருங்கயல் மீன் போன்ற கண்களை விழித்து; ஒல்கி நடந்த வெல்லாம் அங்ஙனம் நளினமாக அசைந்து நடக்குக் செயல்களுக்கெல்லாம் காரணம்; நின் கணவன் உனது கணவனான சோழ வேந்தனின்; திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் முறை திறம்பாத செங்கோல் வளையாமையே என்பதனை அறிந்தேன்; வாழி காவேரி - காவேரி நீ வாழ்வாயாக!

இங்கே மாதவி காவிரி ஆற்றை ஒரு பெண்ணாக உருவகித்து; அவள் கண் விழித்து நடப்பது அவன் கணவனின் செம்மையான ஒழுக்க முறை என்றும் மாறாமல் இருப்பதற்காகவே எனவும் புனைந்து பாடுகிறாள். ஆடவர் எப்பொழுதும் செம்மை நெறியில் நின்றால்த் தான் பெண்ணின் கற்புச் சிறக்கும் என்பதனை விளக்கிப் பாடினாள்.

பொழிப்புரை

இரு பக்கமும் வண்டுகள் மிக்கு ஒலிக்க, அழகிய பூவாடை போர்த்து கரியசுயல் போலும் கண் விழித்து அசைந்து நடந்தனை! காவேரி நீ வாழ்வாயாக! கருங்கயல் போலும் கண்களை விழித்து அங்ஙளம் நளினமாக அசைந்து நடக்கும் செயலுக்கெல்லாம் காரணம் நின் கணவனான சோழ வேந்தனின் முறை திறம்பாத செங்கோல் வளையாமையே என்பதனை அறிந்தேன்! காவேரி நீ வாழ்வாயாக!

விளக்கவுரை

இங்கே மாதவி, கோவலன் பாடிய பாட்டுக்கு எதிர்ப் பாட்டாகக் காவிரி ஆற்றை விளித்துப் பாடுகின்றாள்.

ஆடவர் செம்மை நெறியில் (ஒழுக்க நெறியில்) நின்றால்த்தான் பெண்ணின் கற்பும் சிறக்கும் என்பதனை விளக்கிக் காவிரியைப் பெண்ணாக உருவகித்துப் பாடுகின்றாள்.

கன்னியாகிய குமரியைச் செங்கோல் வளையா சோழ வேந்தன் கூடிநின்றானாயினும் நீ அவளை வெறுக்காமல் இருப்பதற்குக் காரணம் மாதரின் நிலைபெற்ற கற்பின் தன்மையே மாதர் பெருங் கற்பென்று அறிந்தேன்....) எனக் காவேரியைப் பெண்ணாக உருவகித்துப் பாடிய கோவலனின் மாதரின் நிலைபெற்ற கற்பின் தன்மைக்காக, மாதவியால் இவ்விதம் பாடப்பட்டது.

மாதரின் கற்பின் தன்மை நிலைக்க வேண்டின் ஆடவன் ஒழுக்க நெறியில் நின்றால்த்தான் கற்பும் சிறக்கும் என்றாள் மாதவி. இங்கே தனக்கு அமைந்த ஆடவன் ஒழுக்க நெறியில் நில்லாது வேறொரு பெண்ணுடன் காதல் கொள்ள முடியுமாயின் பெண்ணுக்கும் அது முடியும் தான் வேறொரு ஆடவன்பால் காதல் கொள்வது போன்று பாடுகின்றாள். இங்கே கற்புச் சிறக்கவில்லை என்பது மாதவியின் கூற்றாக அமைகிறது.

காவிரியை நோக்கி மாதவி பாடிய பாடல் - 02

பூவார்சோலை மயில் ஆடப் புரிந்து குயில்கள் இசைபாடக் 

காமர் மாலை அருகசைய நடந்தாய் வாழி காவேரி 

காமர் மாலை அருகசைய நடந்த எல்லாம் நின் கணவன் 

நாமவேலின் திறங்கண்டே அறிந்தேன் வாழி காவேரி

கருத்துரை

பூவார்சோலை மயில் ஆடப் - பூக்கள் நிறைந்த சோலையில் மயில்கள் மகிழ்ந்து ஆட்; குயில்கள் புரிந்து இசைபாட -குயில்கள் விரும்பி இசை பாட காமர் மாலை விருப்பம் பொருந்திய மாலைகள்; அருகசைய நடந்தாய் அருகசைய அசைய நடந்தாய்; வாழி காவேரி நீ வாழ்வாயாக; காமர் மாலை அருகசைய நடந்த எல்லாம் - இவ்விதம் விருப்பம் பொருந்திய மாலைகள் அருகே அசைந்து நடந்தமைக்கெல்லாம் காரணம்; நின் கணவன் நின் கணவனான சோழ வேந்தன்; நாமவேலின் - பகைவர்களுக்கு அச்சத்தைத் தருகின்ற வேலின்; திறங் கண்டே அறிந்தேன் - ஆற்றலை நீ கண்டதாலேயே தான் என்பதனை நான் அறிந்து கொண்டேன்; காவேரி நீ வாழ்வாயாக.

பொழிப்புரை

பூக்கள் நிறைந்த சோலையில் மயில்கள் மகிழ்ந்து ஆடவும், குயில்கள் விரும்பி இசை பாடவும், விருப்பம் பொருந்திய மாலைகள் அருகசைய அருகே அசைந்து நடந்தாய். காவேரி நீ வாழ்வாயாக இவ்விதம் விருப்பம் பொருந்திய மாலைகள் அருகே நீ அசைந்து நடந்தமைக் கெல்லாம் காரணம் நினது கணவனான சோழ வேந்தனது பகைவர்களுக்கு அச்சம் தருகின்ற வேலினது ஆற்றலை நீ கண்டதாலேயே தான் என்பதனை நான் அறிந்து கொண்டேன்! காவேரி நீ வாழ்வாயாக.

விளக்கவுரை

இப்பாடல் இலக்கியச் செழுமையும், சிறப்பும் இழையோடப் பாடப்பட்டுள்ளது. ‘பூவார்சோலை மயில் ஆடப் புரிந்து குயில்கள் இசைபாட'

பகைவர்களுக்கு அச்சத்தைத் தருகின்ற சோழ வேந்தனின் வேவின் ஆற்றலைக் கண்ட படியால் தான் நீ இவ்வாறெல்லாம் அசைந்து நடந்து கொள்கிறாய் என்பதை நான். அறிந்து கொண்டேன் என்பதன் மூலம் மாதவி தானும் அவ்வாறு நடந்து கொள்வதாக கோவலனின் பாடலுக்கு எதிர்ப் பாடல் பாடுகிறாள்.

ஆனால் அப்பாடல்கள் மனம் நொந்திருந்த கோவலனின் மனத்தைத் தாக்குகின்றன. கோவலன், மாதவியை விட்டுப் பிரிய மாதவியின் கானல் வரிப் பாடல்கள் காரணமாயிற்று விளையாட்டு பாரிய வினையாக அமைந்து விடுகின்றது.

காவிரியை நோக்கி மாதவி பாடிய பாடல் - 03

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி, 

ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி 

ஊழி உய்க்கும் பேருதவி ஒழியா தொழுகல் உயிரோம்பும் 

ஆழி யாள்வான், பகல்வெய்யோன் அருளே வாழி காவேரி

சுருத்துரை

வாழிஅவன் தன் வளநாடு - உன் கணவனான சோழ மன்னனின் வளம் மிக்க நாடு வாழ்க; மகவாய் - அதனைப் பெற்ற குழந்தையாக (மகலாக); வளர்க்கும் தாயாகி நீ அதனை வளர்க்கும் தாயாகி நின்று ஊழி உய்க்கும் ஊழிக்காலம் வரையும் நடத்தி வருகின்ற; பேருதவி ஒழியாய் பேருதவியை ஒரு போதும் நீங்காதிருக்கின்றாயே (நிறுத்தியதில்லை; வாழி காவேரி - காவேரி நீ வாழ்வாயாக; ஊழி உயக்கும் - ஊழிக் காலம் வரைக்கும் நடத்தி வருகின்ற; பேருதவி ஒழியாது ஒழுகல் - ஒருபோதும் நிறுத்தாது அங்ஙனம் செய்து காத்து (ஒழுகி) வருவதற்குக் காரணம்; உயிரோம்பும் - உயிர்களைப் பாதுகாக்கும்; ஆழி ஆள்வான் - ஆணைச் சக்கரத்தைச் செலுத்தும்; பகல் வெய்யோன் - பகலைத் தரும் சூரியகுல சோழ மாமன்னனின், அருளே நடுவு நிலைமை பிறழாத (வழுவாத) தன்மையான அருளே (தருமமே) அன்றோ? வாழி காவேரி காவிரி நீ வாழ்வாயாக!

பொழிப்புரை

உன் கணவனான சோழ மன்னனின் வளங்கள் மிக்க நாடு குழந்தையாகவும்; நீ அதனை வளர்க்கும் தாயாகவும் நின்று ஊழிக்காலம் வரை நடத்தி வருகின்ற பேருதவியை ஒருபோதும் நிறுத்தியதில்லை; காவேரி நீ வாழ்வாயாக! இவ்விதம் வளப்பம் மிக்க நாட்டைக் குழந்தை யாகவும் அதனை வளர்க்கும் தாயாகவும் நின்று ஊழிக்காலம் வரை நடத்தி வருகின்ற பேருதவியை அங்ஙனம் காத்து வருவதற்குக் காரணம், உயிர்களைப் பாதுகாக்கும் ஆணைச் சக்கரத்தைச் செலுத்தும் பகலைத் தரும் சூரியகுல சோழ மாமன்னனின் நடுவு நிலைமை பிறழாத தன்மை அன்றோ? காவேரியே நீ வாழ்வாயாக!

விளக்கவுரை

உன் கணவளின் வளப்பம் மிக்க நாட்டைக் குழந்தையாவும், அதனை வளர்க்கும் தாயாகவும் நின்று ஊழிக் காலம் வரை நிறுத்தாது பேருதவி புரிகிறாய் காவேரி.

இவ்விதம் நீ பேருதவி புரியக் காரணம் சோழ மாமன்னனின் நடுவு நிலைமை பிறழாத (வழுவாத) தன்மையே என மாதவி கூறுகின்றாள்.

இங்கே உலகம் அழியும் காலமாகிய ஊழிக்காலம் வரை பெண்ணாகிய காவிரி பேருதவி புரியக் காரணம், உனது நடுவு நிலைமை பிறழாத தன்மையே என விழித்துப் பேசுவதன் மூலம் வேறொரு ஆடவனைப் புகழ்வதும், அதே வேளையில் தனது காதல் நிலை கண்டு அவள் இகழ்வதாகவும் கோவலன் மனதைப் புண்படுத்துவதாகவும் அமைந்து விடுகின்றது.

செங்கோல் வளையாமையும், அச்சம் தரும் வேலின் ஆற்றலையும் நடுவு நிலைமை வழுவாத பெருந்தன்மையையும் வேறொரு ஆடவன் பாற்கண்டு மாதவி காதல் கொண்டு புகழ்வதாகப் புண்பட்ட கோவலனின் இதயம் புகன்றது. (எண்ணியது) எனவே கண்ணகியை இழந்த வேதனையில் மனதளவில் புண்பட்ட கோவலனின் இதயம் மாதவி வேறொரு ஆடவன்பால் காதல் கொள்கிறாள் எனத் தவறாக எண்ண வைத்தது.

இவ் எண்ணமானது கோவலனின் புண்பட்ட உள்ளத்தைத் துளைத்துத் தூளாக்கியது. எனவே அவன் மாதவியை விட்டுப் பிரிந்து செல்கிறான். மாதவி பாடிய எதிர்ப்பாடல்களே. கோவலன் பிரிவுக்குக் களம் அமைத்துக் கொடுத்தது சிலர்.

இங்கே விளையாட்டு வினையாகின்றது. தன்னை விட்டு வேறொருவனுடன் காதல் கொள்ளும் மாதவியையே கோவலன மனக் கண்ணில் கண்டான். உள்ளத்தின் வேதனை தாங்காது மாதவியை விட்டுச் சொல்லாமலேயே பிரிகின்றான்.

இங்கே 'களவொழுக்கத்தின்பால் கூடிய மாதர், பரதர் வாழும் வாழிடத்து உறைவார்’ என்ற கூற்றுக்கு இணங்க மாதவி துன்பம் அனுபவித்தாள். (களவொழுக்கத்தில் ஈடுபடும் பெண்கள் வைசியர்கள் (விலைமகளிர்) வாழும் இடத்தில் தங்குவர் என்பதாம்).


Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments