ஆரியபட்டா முயற்சி
மங்கல்யான் தொடர்ச்சி
சந்திரயான் எழுச்சி
இனி என்றும் வளர்ச்சி
விசையுறு பந்தென
விண்கலம் படைத்தோம்
வில்லினில் அம்பென
விண்ணில் தொடுத்தோம்
பாரம் குறைத்து தூரம் குறைத்து
சுற்றிச் சுற்றி வேகம் குறைத்து
சுற்றுப் பாதையில் களம் புகுந்தோம்
வெற்றிக் கோட்டில் கால் பதித்தோம்
நிலவின் தளத்தில்
கடை விரித்தோம்
வடை சுடும் பாட்டிக்கு
விடை கொடுத்தோம்
நித்தம் மாறும் நிலவே கேள்
நின்றே கேள் அதை நன்றே கேள்
வளர்வதும் தேய்வதும் உந்தன் நிலை
வளர்வதும் வளர்வதும் எங்கள் கலை
வென்று விட்டதால் ஓய மாட்டோம்
என்றும் முயற்சியில் தளர மாட்டோம்
மூன்றாம் உலகென முடங்க மாட்டோம்
ஒன்றாம் இடம் வரை அடங்க மாட்டோம்
நடந்ததெல்லாம் கடந்து போகும்
விடிந்த போதே முடிந்து போகும் - இதை
அடுத்த தலைமுறை அறிய வைப்போம்
நாளைய உலகை ஆளவைப்போம்
அம்புலி காட்டி அறிவியல் பேசி
பால் சோறோடு பண்பை ஊட்டி
நாட்டுப் பற்றை நயம்படக் கூறி
அறிவெனும் வித்தை ஆழ விதைப்போம்
விதைகள் நாளை முளைகளாகும்
இலைகள் பரப்பி கிளைகளாகும்
விண்ணை முட்டி விருட்சமாகும்
நாடு இன்னும் சுபிட்சமாகும்
நன்றி - P. Soundarya
நேயர் பக்கம் இது திறமையின் தேடல் - Sl Tamil
மேலதிக விபரங்களுக்கு
👉LINK CLICK HERE👈
உங்களுடைய ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்.
0 Comments