கல்விக்கான பரந்துபட்ட வரைவிலக்கணங்களை வரிசைப்படுத்தி அவை ஒன்றில் இருந்து ஒன்று வேறுபடுவதற்கான காரணங்களில் கல்விக்கான கோட்பாடுகளும் அவற்றிற்கான பிரயோகங்களும் செல்வாக்குச் செலுத்தும் விதத்தினை இலங்கையின் கல்வி வளர்ச்சியை அடிப்படையாகக்கொண்டு ஆராயும் போது.
கல்வி என்பதைக் குறிக்கும் ஆங்கிலப்பதமான ‘Education’ என்ற சொல் ‘Educare’ என்ற இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து தோன்றியதாகும். 'கல்வி 'எனும் சொல்லானது பரந்துபட்ட பொருளுடையதாகக் காணப்படுகின்றது. 'கல்' என்ற வினையடியோடு 'வி' எனும் தொழிற்பெயர் விகுதி சேர்ந்து கல்வி என்றாகின்றது. இது கல்லுதல் அல்லது அகழ்தல் என்றும் பொருள்படும். உள்ளே இருப்பதனை வெளிக்கொண்டு வருதல் எனவும் கூறலாம். எனவே கல்வி என்பது ' பிள்ளையின் உள்ளிருக்கும் ஆற்றலினை மலரச் செய்வது' என்று வரையறுத்துக் கூறமுடியும்.
கல்வியானது பல்வேறுபட்ட விடயங்களை உள்ளடக்கியுள்ளதால் இதனை வரைவிலக்கணம் ஒன்றில் உள்ளடக்குவது மிகவும் கடிமானாகும். எனினும் கல்வித்தத்துவவியலாளர்கள் கல்விக்கு பல்வேறு விதமான வரைவிலக்கணங்களை கொடுத்துள்ளனர். அவற்றை பின்வருமாறு நோக்கலாம்.
விபுலானந்தர் - ஒரு முழுமையான மனிதனை உருவாக்குவதே கல்வி
இலட்சியவாதி பிளேட்டோ - ஆரம்ப வயதுகளில் பிள்ளைகளிடம் ஏற்படும் இயல்பான ஆர்வம், உயரிய நற்செயல் ஆகியவற்றிற்கு உரியமுறையில் அளிக்கப்படும் பயிற்சியே கல்வி.
ஆன்மீகவாதி விவேகானந்தர் - மனிதனிடம் ஏற்கனவே பொதிந்திருக்கும் முழுமை பெற்ற நிறைவினை மலரச் செய்வதே கல்வி.
மகாத்மா காந்தி - பிள்ளையினுள்ளே அடங்கியுள்ள அனைத்து ஆற்றலையும் வெளிக்கொணருவதே கல்வி.
பிரான்சிஸ் பேகன் - மகிழ்ச்சிகரமான அதிஷ்டமுள்ள வாழ்க்கையை நடாத்தும் பொறுப்பும் புத்தியை விருத்தி செய்வதும் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதுமே கல்வி
சோக்கிரட்டீஸ் - உறுதியான உடலில் உறுதியான மனதைத் தோற்றுவிப்பதே கல்வி
அரிஸ்டோட்டில் - மனிதனின் திறமையை குறிப்பாக அவனுடைய மனதை வளர்க்கின்ற ஒரு செயற்பாங்கே கல்வி
ரூஸோ - இயற்கைக்கேற்ப விருத்தியடையும் செயற்பாடே கல்வி.
பயன்பாட்டு வாதி ஜோன் டூயி - பிள்ளைக்கு தனது சூழலில் வாழ்வதற்குத் தேவையான அனுபவங்களை கொடுப்பதே கல்வி.
மில்டன் - சொந்தக் காரியம் பொதுக் காரியம் எல்லாவற்றையும் நியாயமாயும் சாமர்த்தியமாயும் பெருந்தன்மையாயும் செய்யக் கற்றுக் கொடுப்பதே பரிபூரணமான கல்வி.
ஜோன் ஸ்டூவர்ட் மில் - எந்த ஒரு சந்ததியினரும் பின்பற்றுவதற்தாக அல்லது முன்னேற்றுவதற்காக நமது இளைய சந்ததியினருக்கு கலாசாரத்தை ஒப்படைத்தலே கல்வி.
ஹேர்மன் ஹொன் - நுண்மதி, மனவெழுச்சிகள் மற்றும் உடல் உள ரீதியில் முன்னேறியுள்ள மனிதன் மேற்கொள்ளும் சதாகாலச் செயற்பாடே கல்வி.
ஈ.சீ மூவர் - தான் வாழும் சமூகத்தில் தனக்கு கிடைக்க வேண்டிய இடத்தை பெற்றுக் கொள்வதற்காக உரிய அனுபவங்களை வழங்குவதே கல்வி.
லெஸ்டர் ஸ்மித் - கல்விக்கும் பிள்ளைகளுக்கும் இடையே உள்ள தொடர்பை கட்டியெழுப்புவதே கல்வி.
ஜோன் மில்டன் - யுத்தத்திலும், சமாதானத்திலும் தனித்தும், பொதுவாகவும் அனைத்து செயல்களையும் நீதியாகவும், முன்மாதிரியுடனும் நிறைவேற்றக்கூடிய மனிதனை உருவாக்குவதே கல்வி.
அ மெண்டர் - அனுபவங்கள் பற்றி தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்ற புதுப்பித்தலே கல்வி.
பவ்லோபிரேயர் - சிறுபராயத்தில் இயற்கையில் வளரும் பிள்ளைக்கு நல்ல பயிற்சியும் பழக்க வழக்கங்களையும் வழங்கி அபிவிருத்தி செய்தலே கல்வி.
ஆர்.எஸ்.பீட்டர்ஸ் - பிள்ளையில் உயர் மானிட பண்புகளை பயிற்று விப்பதற்கான திட்டமிட்ட முயற்சியே கல்வி.
அல்லாமா இக்பால் - தன்னைப் புரிந்து கொண்டு அறிவான முறையில் செயல்படுவதே கல்வி.
நெல்சன் மண்டேலா - சக்தி வாய்ந்த ஆயுதமே கல்வி.
ஷேக் வலியுள்ளாஹ் - கல்வி என்பது நல்லது மற்றும் கெட்ட உணர்வுகளை வளர்த்துக் கொள்ளும் செயற்பாடே கல்வி.
எட்கார் பொரோ - வாழக் கற்றுக்கொள்வதே கல்வி.
இவ்வாறாக அறிஞர்கள் கல்வி தொடர்பில் முன்வைத்த வரைவிலக்கணங்களை நோக்கும் அதேவேளை அவர்களின் கருத்துக்கள் இடையே ஒற்றுமை இருக்கவில்லை என்பதும் கருத்திற்கொள்ளவேண்டிய விடயமாகும். அதன் அடிப்படையில் அறிஞர்களின் கருத்துக்கள் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுவதற்கான காரணங்களை ஆராய்கையில்,
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வெவ்வேறு விதமான ஆளுமைகள் காணப்படுகின்றன. எனவே தத்தமது ஆளுமையை முக்கியப்படுத்தியே ஒவ்வொருவரும் கல்வி தொடர்பான தமது சிந்தனைகளை முன்வைப்பர். உதாரணமாக ஓர் ஆன்மீகவாதி தன்னை உணர்தலே கல்வி என்பார். அதையே ஓர் ஒழுக்கவியலாளர் பண்பை விருத்தி செய்வதே கல்வி என்பார்.
அவ்வாறே சூழல் என்பது இடத்திற்கு இடம், காலத்திற்கு காலம் மாற்றமடையும் தன்மை கொண்டது. ஓரு இடத்திற்குப் பொருந்தும் விடயம் வேறொரு இடத்திற்கு பொருந்தாது. ஆரம்ப காலங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்கள் தற்போது ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. ஒரு மனிதன் சூழலிற்கேற்ப இசைவாக்கம் அடைவதற்கான செயன்முறையே கல்வி என்பதன் மூலம் சூழலின் சிக்கலான தன்மையை எம்மால் புரிந்துகொள்ள முடியும். உதாரணமாக ஆரம்ப கால சூழல் ஒழுக்கங்களை போதிப்பதே கல்வி என்பதை ஏற்றுக் கொண்டது ஆனால் தற்போதைய சூழல் தொழிலை மையமாகக் கொண்ட கல்வியை ஏற்றுக் கொள்கிறது.
மேலும் ஒவ்வொருவருக்குமான வாழ்க்கை அனுபவங்கள் வேறுபட்டதாக காணப்படும் எனவேதான் தத்துவஞானிகளும் தத்தமது வாழ்க்கை அனுபவத்தினை மையமாகக் கொண்டும் தமது கருத்துக்களை முன் வைத்தனர். உதாரணமாக அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு என்கிறது வேதாகமம். அதையே கற்றாங்கு ஒழுகுதலே கல்வி என்கிறது திருக்குறள்.
இதனை தொடர்ந்து கல்வி தத்துவவியலாளர்களின் கருத்துக்களில் கல்விக்கான கோட்பாடுகளும் அவற்றிற்கான பிரயோகங்களும் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகிறது என்பதனை நோக்கும் போது, ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு விதமான அரசியல், சமூக சூழ்நிலைகள் காணப்படுகின்றன. அவை காலத்திற்கு காலம் மாற்றம் அடைவதால் அதன் செல்வாக்கு கல்விக் கோட்பாடுகளிலும் ஏற்படுத்துகிறது. பொதுவாக கல்விக் கோட்பாடுகள் கல்வித் தேசியம், கல்வி முன்னேற்றம், கல்வியின் இன்றியமையாமை, உயர்நிலை கல்வி, மக்கள்நலக் கல்வி மற்றும் இலவச கல்வி ஆகியவற்றை உள்ளடக்கியே முன்வைக்கப்படுவதனால் அதன் செல்வாக்கு கல்வி தொடர்பான வரைவிலக்கணங்களிலும் ஏற்படுகிறது. உதாரணமாக தற்காலத்தில் மனப்பாடம் செய்வித்தலே கல்வி எனும் ஆசிரியர் மையக்கல்வி வலுவிழந்து தேடிக்கற்றலே சிறப்பானது எனும் மாணவர் மைக்க கல்வியும், தொழிலை மையப்படுத்திய தொழிநுட்ப கல்வியும் ஓங்கி நிற்கிறது.
ஆரம்ப காலத்தில் மன்னர்கள் தமது புதல்வர்களை குருகுல கல்விக்கு அனுப்பி கல்வியை புகட்டினார்கள் காலப்போக்கில் ஆரம்ப பாடசாலைகள், கல்லூரிகள், 15 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் கட்டாய கல்வி முறை, பெண் கல்வி கலைத் திட்டம், ஆசிரியர்களுக்குரிய அடிப்படைத் தகைமை, இலவச கல்வி போன்றன உருவாக்கப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் இலங்கை கல்வியானது பலவகையில் நவீன மாற்றங்களுக்கும் உற்படுத்தப்பட்டுள்ளது உதாரணமாக மாணவர்களின் கல்வியை வலுப்படுத்த 5 E முறை, KASPமுறை, 1997 ஆம் ஆண்டு கல்வி திருத்தத்தில் தொடர்பாடல் பற்றிய கற்கை, கணினிக்கல்வி, ஒன்று தொடக்கம் 13 வரை அனைவரும் கட்டாய கல்வி கற்க வேண்டும் என்ற சட்டம், பொது சாதாரண பரிட்சையில் சித்தி அடையாதவர்களுக்குரிய 27 தொழிற்பாடநெறிகள் போன்றவற்றை குறிப்பிடலாம்.
மேலும், 23 உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழுவொன்று கல்வி தொடர்பில் பாராளுமன்றத்தில் முன்வைத்த பரிந்துரைகளாக பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாத பெற்றோர்களை தண்டிக்க சட்டம் அமைக்க வேண்டும், முதலாம் இரண்டாம் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு வேலை கட்டாயமாக்கப்படக் கூடாது, பாடசாலை மாணவர்கள் தொலைபேசி பயன்படுத்தத் தடைசெய்ய வேண்டும், நாட்டின் ஆட்சி மாறும் போது கல்வி தொடர்பான கொள்கைகள் மாற்றமடையக்கூடாது மற்றும் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி 5% ஆக அதிகரிக்கப்பட வேண்டும் போன்றவற்றை குறிப்பிடலாம். இது எதிர்காலத்தில் நடைமுறைக்கு வரலாம் வராமலும் போகலாம்.
இவ்வாறு குறுநிலக் கல்வியில் ஆரம்பித்த இலங்கையின் கல்வி வளர்ச்சியானது படிப்படியாக வளர்ச்சி அடைந்து ஆசிய கண்டத்தில் கல்வியில் முதலாவது இடத்தையும் பிடித்துள்ளது. இதற்கு காரணம் அரசியல், சமூக சூழ்நிலைகள் காரணமாக காலத்திற்குக்காலம் மாறும் கல்விக் கோட்பாடுகளும் அவற்றின் பிரயோகங்களுமே ஆகும். இதனால் இச்சூழலில் வாழும் மற்றும் வேறு நாடுகளில் இருந்து இச்சூழலை அறிந்து கொள்ளும் கல்வித்தத்துவவியலாளர்கள் அதனோடு ஒட்டியும் அதனை சீர்திருத்தியும் தமது கருத்துக்களை முன்வைப்பர். பின்பு அக்கருத்துக்களை மக்கள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அக்கருத்துக்கள் நடைமுறைக்கும் வரும். எனவே இன்று காணப்படும் கல்வி முறையானது எதிர்காலத்தில் மாற்றி அமைக்கப்படும் என்பதை நாம் உறுதியாக கூற முடியும். இந்நடைமுறைதான் பிற நாடுகளிலும் ஏற்படுகிறது. இதனால்தான் அறிஞர்கள் கல்வி தொடர்பில் முன்வைக்கும் கருத்துக்களுக்கிடையே ஒற்றுமை இருப்பதில்லை.
0 Comments