திருக்குறள் வெகுளாமை - Thirukkural VEGULAMAI

திருக்குறள் வெகுளாமை

 வெகுளாமை

தமிழ் இலக்கியங்களின் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியம் திருக்குறள். பதவுரை, பொழிப்புரை, விளக்கவுரை என பலவிதமான உரைகள் திருக்குறளுக்கு இன்றளவும் எழுதப்படுகின்றன. உலகமக்கள் அனைவருக்கும் பொதுவான வாழ்வியல் நெறிமுறைகளை எடுத்துரைப்பதால் 'உலகப்பொதுமறை' எனும் சிறப்பைப் பெற்றது. 'துறவு' என்றால் உலக வாழ்க்கையில் இருக்கும் பற்றை நீங்குவது என்ற பொருளை மட்டுமே பலரும் சிந்திக்கையில் உலகில் இன்பமாக வாழ மனிதன் சில உணர்வுகளைச் சீர்படுத்தி வாழ்தல் நன்மை தரும் என்று கருதி சில அதிகாரங்களை வள்ளுவர் அமைக்கிறார். அதில் ஒன்று அறத்துப்பால், துறவறவியலில் அமைந்த 'வெகுளாமை' அதிகாரமாகும்.


'வெகுளி' எனும் சொல்லுக்கு 'மிகுந்த சினம்' என்று பொருள். தமிழில் சினத்தின் நிலைப்பாடுகளைக் குறிப்பவையாக அழல், அழற்சி, கதம், சீற்றம், சினம், கோபம், செயிர். செற்றம், செறு, சே, துனி, தெறு, முனிவு, வன்மை, வெகுட்சி, வெகுளி, செந்தி, வெப்பம், வெம்பு, வெம்மை, வேனல், வியர்' முதலான சொற்கள் உள்ளன. இவற்றுள் தோன்றியவுடன் மறையாமல் காலம் நீட்டித்து இருப்பது எனும் பொருளை உடைய சினம் பற்றி வள்ளுவர் ‘வெகுளாமை’ அதிகாரத்தில் பேசுகிறார்.


இன்பத்தை அழிக்கும்

"நகையு முவகையும் கொல்லுஞ் சினத்திற் 

பகையு முளவோ பிற”

(குறள்.304)

ஒருவனுக்குள்ளிருக்கும் பகைவன் சினம். அந்த சினம் அவனுடைய முகமலர்ச்சியான புன்னகையையும் உவகையை அதாவது அகமகிழ்ச்சியான மனமகிழ்ச்சியையும் அழித்துவடும்.

நெருப்பு தான் ஆட்கொண்ட பொருளை அழிப்பதோடு தன்னைச் சுற்றியும் வெம்மையைப் படரச் செய்யும் அதுபோல சினத்தால் ஆட்கொள்ளப்பட்டவன் தன் இன்பத்தையும் தன்னைச் சுற்றியிருக்கும் இன்பமான சூழலின் அழிவுக்கும் காரணமாகிறான்.

“சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி யினமென்னு மேமப் புணையைச் சுடும்" (குறள்.306)


தனக்குத் தானே செய்யும் கேடு

சினம் எனும் மனவெழுச்சி ஒருவன் தனக்குச் செய்துகொள்ளும் கேடு. இதையே மற்றொரு அதிகாரத்தில்,"காணாச் சினத்தான்" (குறள்.866) என்கிறார். இதற்கு பரிமேலழகர் 'தன்னையும் பிறரையும் தான் அறியாமைக்கு ஏதுவாகிய வெகுளி உடையவன்" என்று விளக்கமளிக்கிறார். அதாவது சினம் தடுமாற்றத்தை உண்டாக்கி அழிவுக்கு வழி வகுப்பதைக் குறிப்பிடுகிறது.

"சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு

நிலத்தறைந்தான் கைபிழையா தற்று"

(குறள்.307)

சினத்தின் மூலம் ஒருவன் தன் வலிமையைக் காட்ட எண்ணினால் நிலத்தில் கையை அறைந்தவன் போல தனக்குத் தானே துன்பத்தை ஏற்படுத்திக் கொண்டவன் ஆவான்.

தன்னைத்தான் காக்கிற் சினங்காக்க காவாக்காற்

றன்னையே கொல்லுஞ் சினம்

(குறள்.305)


ஒருவன் தன் நலத்தை விரும்பினால் சினம் கொள்ளாதிருத்தலே நல்லது இல்லையெனில் சினம் அவனை அழித்துவிடும். "தன்னையே கொல்லும் சினம்" என்பதை அறிவியல் முறையில் ஆராய்ந்துதான் வள்ளுவர் இங்ஙனம் கூறுகிறார், இதற்கான முழுமையான தெளிவான கருத்தை இவ்வதிகாரத்தின் இறுதிக் குறளில் தருகிறார்.

"இறந்தா ரிறந்தார் ரனையர் சினத்தைத் 

துறந்தார் துறந்தார் துணை"

(குறள்.310)

இக்குறளுக்கு 'சினத்தின் கண்ணே மிக்கோர் உயிருடையோர் ஆயினும் செத்தாரோடு ஒப்பர். சினத்தைத் துறந்தார் சாதல் தன்மையர் ஆயினும் அதனை ஒழித்த அளவினர்” என்று கூறும் பரிமேலழகரின் உரையை உற்றுநோக்கும்போது சினமாகிய மனவெழுச்சியால் உடலும் பாதிப்பிற்குள்ளாகிறது என்பது புலப்படுகிறது.

அமெரிக்க இதய ஆய்வகம் 1995ஆம் ஆண்டு 1623 பேரை ஆய்வுக்கு உட்படுத்தியது. இதயநோய்க்கும் சினத்திற்கும் நேரடித் தொடர்பிருப்பது கண்டறியப்பட்டது. மே 2000ஆம் ஆண்டு 12986 பேரிடம் நடத்திய ஆய்வில் கோபம் கொண்டவருக்கு இதயநோய் வருவதற்கு இருமடங்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் அளவாக கோபப்படுபவர்களையும் ஒப்பிடுகையில் அடிக்கடி கோபப்படுபவர்களையும் ஒப்பிடுகையில் அடிக்கடி கோபப்படுகிறவர்கள் இதய அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நிலைக்கு உள்ளாகிறார் அல்லது இறக்கிறார் என்ற உண்மையைக் கண்டறிந்தது. இந்த உடல்பாதிப்பை எண்ணியே வள்ளுவர் 'தன்னையே கொல்லும் சினம்' என்றும் சினம் கொள்பவர் இறப்பை நெருங்குகிறார் என்றும் சினத்தைத் துறந்தவர் 'துறந்தார் அனையர்' அதாவது இறப்பை தவிர்த்தவராகிறார் என்றும் குறிப்பிடுகிறார்.


சினங்காப்பான்

சினமாகிய மனவெழுச்சி வெளியில் காட்டாமல் காக்கப்படவேண்டிய ஒன்று. வலியோரிடத்தில் தன்னுடைய கோபத்தைக் காட்டுவதால் தீமை விளையும் உதாரணமாக அலுவலகத்தில் மேலதிகாரியிடம் வெளிப்படுத்தும் சினம் சில தீயவிளைவுகளை ஏற்படுத்தும். ஆகையால் அங்குள்ள சூழலை எண்ணி காக்கப்படுகிறது. மெலியோரிடத்தில் கோபத்தைக் காட்டுவது மிகுந்த கேடினை விளைவிக்கும். அதாவது தந்தை, தாய் போன்ற (வீட்டில் உள்ள) அன்புடைய உறவினரிடம் காட்டும் சினம் மனநிம்மதியைக் கெடுப்பதோடு உறவின் நெருக்கத்தையும் பாதிக்கும் என்றாலும் அங்கு உரிமை உண்டு என்பதாலும் சினம் மன்னிக்கப்படும் என்பதாலும் சினத்தை வெளிக்காட்டுவர். ஆகையால்தான் வள்ளுவர் மெலியோரிடத்திலும் கோபத்தை வெளிப்படுத்தாமல் இருப்பவனே சினத்தைக் காப்பவன் ஆவான் என்கிறார்.

"செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பா னல்லிடத்துக்

காக்கிலென் காவாக்கா லென்"

(குறள்.301)


“செல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்து 

மில்லதனிற் றீய பிற" (குறள்.302)


வலியோரிடத்தும் மெலியோரிடத்தும் சினம் கொள்வதால் தீமைவிளையும் தீமையின் அளவுமாறுபடுமே தவிர சினத்தால் நன்மை விளையாது என்பதால் சினம் காக்கப்படவேண்டிய ஒன்றென்பதைத் தெளிவுபடுத்துகிறார்.

வெகுளியை மறத்தல் நன்று

"மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய

பிறத்த லதனான் வரும்"

(குறள்.303) 

சினத்தை மறக்காமல் மனதிற்குள் வைப்பதால்தான் பலதீமைகள் ஏற்படுகிறது. அதனால்

யார்மீதும் கோபம் உண்டானால் அதை மறப்பதே நன்மை தரும் என்று கூறும் வள்ளுவர்,

“இணரெரி தோய்வன்ன வின்னாசெயினும்

புணரின் வெகுளாமை நன்று"

(குறள்.308) 

என்கிறார். அதாவது பல சுடர்களை உடைய பெரும் நெருப்பில் வீழ்ந்தது போன்ற துன்பத்தைத் தந்தாலும் சினம் கொள்ளாதிருத்தல் நன்று என்கிறார். அதற்கான காரணத்தை,

“உள்ளிய தெல்லாம் முடனெய்து முள்ளத்தா

ளுள்ளான் வெகுளி யெனில்"

(குறள்.309)

என்ற குறளில் கூறுகிறார். “சினத்தால் மயக்கம், மயக்கத்தால் நினைவு தவறுதல்,நினைவு தவறுதல் புத்திநாசம், புத்தி நாசத்தால் அழிவு" என்கிறது கீதை (11:62). வள்ளுவரும் இக்குறளில் இக்கருத்தைத்தான் வெளிப்படுத்துகிறார். சினத்தை அகத்தில் நிறுத்தாமல் மறப்பவனுக்கு மனஅமைதி கிடைக்கும் அதன்மூலம் அவன் செய்ய எண்ணியதைச் சிறப்பாக செய்து வெற்றிபெறுவான் ஆகையால் சினத்தை மறத்தல் நன்று.

சினம் இன்பத்தை அழிக்கும்.ஒருவன் தனக்குத்தானே செய்யும் கேடு சினம். சினத்தைக் காக்க வேண்டும். சினத்தை மறக்க வேண்டும். வெகுளாமை வெற்றியைத் தரும் போன்றவற்றை வெகுளாமை அதிகாரத்தில் வள்ளுவர் எடுத்துரைக்கிறார். சினத்தை வெறும் மனஉணர்வாக எண்ணாமல் உளவியல் முறையில் ஆராய்ந்து வெகுளி துறக்க வேண்டிய ஒன்று. வெகுளாமையும் அறம் சார்ந்தது என்பதை இவ்வதிகாரத்தில் நிலைநாட்டுகிறார்.

நன்றி - முனைவர் கு.சக்திலீலா



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments