இலக்கியம் - literature
இலக்கு + இயம்---> இலக்கியம்
இலக்கு என்பது குறிக்கோள்/ நோக்கத்தினைக் குறிக்கும்.
இயம் என்பதற்கு சொல் ,ஒலி என்ற பொருள் உண்டு. (இயம்புதல்=கூறுதல்).
குறிக்கோளுடன் அமைந்த ஒரு அழகியல் /அறிவியல் இயம்பலே(கூறுதலே) இலக்கியம் எனலாம்.
“இலக்கியம்” என்றால் என்ன என்பது பற்றி அன்று முதல் இன்றுவரை ஒவ்வொரு அறிஞரும் தம் அறிவுக்குட்பட்ட வகையில் பல்வேறு விதமான கருத்துக்களைக் குறிப்பிட்டுள்ளனர். “இலக்கியம்” பற்றிய இவ்வறிஞர்களது கருத்துக்கள்
‘இலக்கியம்’ என்ற பொருள் நிலையை எந்தளவுக்கு பூரணமாய் புலப்படுத்துகின்றன என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது. பொதுவாக நோக்குமிடத்து. யாரிடமாவது இலக்கியம் என்றால் என்ன என்று கேட்கும்போது அவர்கள் தமக்குத் தெரிந்த இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் நளவெண்பா போன்றவற்றையுமே இலக்கியம் எனக் கூறுவர். ஆனால், இவை யாவும் இலக்கிய நூல்களுள் சிலவே என்பது அவர்களுக்குத் தெரியாது.
மேலும், சிலரோ மேற்குறித்த இலக்கிய நூல்களை அடிப்படையாக வைத்து இலக்கியம் என்பது ஒருவரது வரலாற்றை செய்யுள் வடிவில் கூறுவது என நினைக்கின்றனர். இராமனது வரலாற்றைக் கூறுவதால் இராமாயணம் ஓர் இலக்கியம் எனவும் பஞ்ச பாண்டவர்களினதும் கெளரவர்களினதும் கதையைக் கூறுவதால் அதுவும் ஓர் இலக்கியம் எனவும், இவ்வாறு எவையெவையெல்லாம் வரலாறு கூறி நிற்கின்றனவோ அவற்றையெல்லாம் இலக்கியமாகவே கருதுகின்றனர்.
உண்மை யாதெனில், இவையாவும் இலக்கிய நூல்களுள் சிலவேயன்றி இவையாவும், ‘இலக்கியம்’ என்ற பொருள் நிலையைப் பூரணமாகப் புலப்படுத்துவனவல்ல. மேற்குறித்தவற்றை இலக்கியம் எனக் குறிப்பிட்டால் சங்ககால எட்டுத் தொகைகளையும் பத்துப் பாட்டையும், வள்ளுவரின் திருக்குறளையும், பதினெண் கீழ்க்கணக்கு நூல்களையும், ஒளவையாரின் நீதி நூல்களையும் இலக்கியமாகக் கருத முடியாது. ஏனெனில் இவை யாவும் குறித்த ஒருவரின் வரலாற்றைக் கூறுவனவல்ல. இந்நிலையில் ‘இலக்கியம்’ என்றால் என்ன என்பது பற்றி ஆராய்வது இன்றியமையாத ஒன்றாகும்.
- இலக்கு - இயம்
- இலக்கியப் பயன்பாடு, இலக்கியவாதி, இலக்கியார்த்தம்
- இலக்கிய வழக்கு, இலக்கிய மன்றம், இலக்கிய நடை, இலக்கிய மொழி, இலக்கிய ஆய்வு
- இலக்கிய நூல், இலக்கிய மேற்கோள், இலக்கிய வகை
- இலக்கிய மறுமலர்ச்சி, இலக்கிய அறிஞர், இலக்கியச்சான்று, இலக்கிய வட்டம்
- சிற்றிலக்கியம், பேரிலக்கியம்
- ஒப்பிலக்கியம்
- நாட்டுப்புற இலக்கியம், சங்க இலக்கியம், தொல்லிலக்கியம்
- வாய்மொழி இலக்கியம், பக்தி இலக்கியம்
- தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், நவீன இலக்கியம், கலை இலக்கியம்
- இலக்கணம், செம்மொழி
தமிழ் இலக்கியம்
தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன. தமிழ் இலக்கியத்தில் வெண்பா, குறள், புதுக்கவிதை, கட்டுரை, பழமொழி, தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்கள் என பல வடிவங்கள் உள்ளன. தமிழில் வாய்மொழி இலக்கியங்களும் முக்கிய இடம் வகிக்கின்றன.
தமிழ் இலக்கிய வரலாறு
மு. வரதராசனின் தமிழ் இலக்கியம் என்னும் நூலில் தரப்பட்டிருக்கும் தமிழ் இலக்கிய கால வகைப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட வகைப்பாடு பின்வருமாறு.
பழங்காலம்
- சங்க இலக்கியம் (கிமு 500 - கிபி 300)
- நீதி இலக்கியம் (கிபி 300 - கிபி 500)
இடைக்காலம்
- பக்தி இலக்கியம் (கிபி 700 - கிபி 900)
- காப்பிய இலக்கியம் (கிபி 900 கிபி 1200)
- உரைநூல்கள் (கிபி 1200 - கிபி 1500)
- புராண இலக்கியம் (கிபி 1500 - கிபி 1800)
- புராணங்கள், தலபுராணங்கள்
- இஸ்லாமிய தமிழ் இலக்கியம்
இக்காலம்
- பத்தொன்பதாம் நூற்றாண்டு
- கிறிஸ்தவ தமிழ் இலக்கியம்
- புதினம்
- இருபதாம் நூற்றாண்டு
- கட்டுரை, சிறுகதை, புதுக்கவிதை, ஆராய்ச்சிக் கட்டுரை
- இருபத்தோராம் நூற்றாண்டு
- அறிவியல் தமிழ், கணினித் தமிழ்
சங்க இலக்கியம்
சங்க இலக்கியம் எனப்படுவது தமிழில் பொது ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும்.சங்க இலக்கியம் 473 புலவர்களால் எழுதப்பட்ட 2,381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பலதரப்பட்ட தொழில் புரிந்தோரும், பெண்களும் அடங்குவர். அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் அன்றாட வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய்ச் சங்க இலக்கியங்கள் உள்ளன. பண்டைத் தமிழரது காதல்,போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப் பாடல்கள் நமக்கு அறியத் தருகின்றன.
பதினெண்மேற்கணக்கு நூல்கள் என்று வழங்கப்படும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற தொகுப்புகளே சங்க இலக்கிய நூல்கள் ஆகும். இவை மதுரையில் அமைந்த கடைச்சங்கத்தில் தொகுக்கப்பட்டவையாகக் கருதப்படுகின்றன.
சங்கம் மருவிய காலம் / நீதி நூற்காலம்
சங்க காலத்திற்கு அடுத்து வந்த காலப்பகுதியில் அறவழி கூறும் நூல்கள் மிகுதியாக வெளிவந்தன. எனவே இக்காலம் நீதிநூற்காலம் எனப்படுகிறது. இந்நூல்களுள் போதிக்கப்படும் நீதி, பெரும்பாலும் சமயச் சார்பற்றவையாகக் கருதப்படுகிறது.[1] நாலடியார் முதற்கொண்டு இந்நிலை / கைநிலை ஈறாக உள்ள பதினெட்டு நூல்கள், பதினெண்கீழ்கணக்கு நூல்கள் என்று வழங்கப்படுகிறது. இவையே நீதி நூல்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறள் இத்தொகுப்பினுள் அடக்கம்.
சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரட்டைக் காப்பியங்கள் இயற்றப்பட்டதும் இக்காலத்தில்தான்.
தற்கால இலக்கியம்
18 ஆம், 19 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் தமிழ்நாட்டில் அரசியல், மதம், கல்வி போன்ற தளங்களில் பல விதமான மாற்றங்கள் இடம்பெற்றன. குன்றக்குடி, திருவாவடுதுறை, திருப்பனந்தாள் போன்ற சைவ மடங்களின் ஆதரவாலும், சில புலவர் பரம்பரையினரின் முயற்சியாலும் தமிழ் இலக்கியச் செல்வங்கள், விழுமியங்கள் அழிவுறுவது காலத்தால் தடுக்கப்பட்டது. அன்னிய ஆட்சியாலும், அவர்களுக்கு முட்டுக் கொடுப்பவர்களாலும், மேற்கத்திய கலாச்சாரத்தின் பாதிப்பாலும், ஆங்கில மொழியின் செல்வாக்காலும் நசிவடைந்து கிடந்தன தமிழ் மொழி, தமிழ் இலக்கியம்; பின்னர் அச்சியந்திரங்களின் வருகையும், நிலையான ஆங்கிலேயர் ஆட்சியும், அதன்பின் ஏற்பட்ட சுதந்திர இந்திய ஆட்சியும் மதச்சுதந்திரமும், கல்வி முறையில் ஏற்பட்ட தோற்ற வளர்ச்சி, நவீன சிந்தனைகளின் உருவாக்கமும் போன்ற காரணிகளால் தமிழ் மொழியும், இலக்கியமும் இக்காலகட்டத்தில் பெரிதும் வளர்ச்சியுற்றன. இக்காலகட்டத்தில் இடம்பெற்ற முக்கிய மாற்றமாகக் குறிப்பிடத்தக்க விடயங்களாவன:
சங்க இலக்கியங்கள் மீளக் கண்டுபிடிக்கப்பட்டதும் அச்சேற்றியதும்.
உரைநடையில் எழுதுவது அறிமுகமானது. (19ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதி)
புதுக்கவிதை எனும் புதுப்பாணி தோற்றம் பெற்றது. (20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி)
மணிப்பிரவாள நடை ஒழிந்தது. (20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி)
அச்சியந்திரங்களின் வருகையால் ஏடுகளில் மட்டும் இருந்த தமிழ் இலக்கியங்கள் உ. வே. சாமிநாதையர்,ஆறுமுக நாவலர், சி. வை. தாமோதரம்பிள்ளை போன்றோரின் மீள் கண்டுபிடிப்பாலும்,அயராத உழைப்பாலும் அச்சாக வெளிவந்தது.
0 Comments