தமிழர் பண்பாடு - Tamil Culture

தமிழர் பண்பாடு

சங்க தமிழ் அறிமுகம் - Introduction to Sangam Tamil

பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் ஆகிய பதினெண் மேற்கணக்கு நூல்களும் சங்க இலக்கிய நூல்கள் என்று அனைவராலும் போற்றப்படுகிறது. சங்க இலக்கியம் என்ற தொகுப்பில் இருக்கும் பாடல்களின் காலம் கி.மு.500 முதல் கி.பி.100 வரை என்று கூறுவர். சங்க இலககியங்களை முதல் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது பழந்தமிழ் நாட்டில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்தன. மதுரை, புரத்தில் முதல் இரண்டு சங்கங்களும் தோன்றி மறைந்த பின், பாண்டிய மன்னர்களின் ஆதரவுடன் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது. அத்தகைய மூன்றாம் தமிழ்ச் சங்க நூல்களே எட்டுத் தொகையும் பத்துப் பாட்டும் ஆகும்.


தமிழர் பண்பாடு - Tamil Culture

பண்பாடு என்பது ஒரு இனத்தின் வரலாறு. இங்கு வாழ்வியல் முறைகள் பேசப்படுகின்றன. செய்தொழில்கள்,இறை நம்பிக்கை பேசும் மொழி, உண்ணும் உணவு, கலைகள்,  யாவும் பண்பாட்டின் பாற்படும். தமிழர்  பண்பாட்டின் முக்கியகூறுகளாக காதல், வீரம், கொடை, தெய்வ நம்பிக்கை, விருந்தோம்பல் இவற்றைச் சொல்லி வருகிறோம்.

நாகரீகம் என்பது நமது திருந்திய வாழ்க்கை. பண்பாடு என்பது ஒழுக்கம் சார்ந்த வாழ்க்கை முறை. இவை இரண்டும் சேர்ந்ததாகத்தான் ஒரு இனம் மதிப்பீடு செய்யப்படுகிறது.

தமிழர் பண்பாடு உலகமே வியந்து பார்க்கக்கூடிய பண்பட்ட நெறிமுறைகளையும் விழுமியங்களையும் கொண்டது. வாழும் முறைதான் பண்பாடு. இப்படித்தான் வாழ வேண்டும் என்ற வரன்முறைக்கு உட்பட்டது நம் பண்பாடு.


தமிழர்களின் காதல் - The love of Tamils

 காதலும் வீரமும் நிறைந்தது தமிழர் பண்பாடு. தமிழர் காதலை அன்பின் ஐந்திணை என்றனர்.இது ஒருவனும் ஒருத்தியும் கொண்ட உளமொத்தத் தூய காதலாகும். இதனைக் களவு, கற்பு என இரண்டாகப் பிரித்துப் பார்த்தனர். காதல் வாழ்வு அறத்திலிருந்து மாறுபடாமல் அன்பின் வழிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று எண்ணினர். அதனால்தான் வள்ளுவரும்,

"மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்

நன்கலம் நன்மக்கட் பேறு" 


காதலுக்கு விழா எடுத்து மகிழ்ந்தவர்கள் தமிழர்கள்.இது இருபத்து எட்டுநாட்கள் நடைபெறும் ஒரு விழா.காதலர்கள் மன்மதனுக்கு விருந்து படைத்து மகிழும் விழா. காதல் விழாவை இந்திர விழா என்று சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காதலுக்கு இத்தகு சிறப்பு செய்தவர் எவரும் இருந்திருக்கமுடியாது என்னும் அளவுக்கு காதலைக் கொண்டாடியவர்கள் தமிழர்கள்.


தமிழர் பண்பாடு விருந்தோம்பல் - Tamil Culture Hospitality

தமிழர்களின் தலைசிறந்த பண்பாடுகளுள் ஒன்று விருந்தோம்பல்.

 திருவள்ளுவர்

"இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு "

விருந்தினரை வரவேற்று உணவிடுதல் இல்லறத்தில் ஈடுபட்டிருப்பவரின் கடமையாகவே கருதப்பட்டது. விருந்தோம்பல் என்னும் பண்பாட்டு அறத்தை ஆணும் பெண்ணும் சேர்ந்தே செய்து வந்திருக்கின்றனர். அதனால்தான் கோவலன் பிரிந்து சென்ற பின்னர் 

கண்ணகி

"அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்

துறவோர்க் கெதிர்த்தலும் தொல்லோர் சிறப்பின்

இருந்தெதிர் கோடலும் இழந்த என்னை"


கோவலன் இல்லாததால் விருந்தோம்பல் வீட்டில் நடைபெறாமல் போயிற்று என்பதைத்தான்  சிலப்பதிகாரம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. ஒருவன் திருமணம் செய்து கொள்வதே விருந்தோம்பல் என்னும் கடமையைச் செய்வதற்காகவே என்று கூறும் பண்பாடு தமிழருடையது.

மருந்தே ஆயினும் விருந்தோடு உண் என்ற ஒப்பற்ற கொள்கையைத் தமதாக்கி வாழ்ந்து வந்தவர்கள் தமிழர்கள்.


தமிழர்களின் வீரம் - The heroism of the Tamils

கொடுப்பதில் மட்டுமல்ல வீரத்திலும் தனக்கென்று ஒரு மரபைக் காத்து வந்தவன் தமிழன்.வீரவிளையாட்டுகள், போட்டிகள்,  விலங்குகளை அடக்குதல் யாவும் தமிழர் திருமணம்  மற்றும் விழாக்களோடு தொடர்பு கொண்டவையாக இருந்து வந்திருக்கின்றன. தமிழரின் வீரம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். 

போரில் புறமுதுகிட்டு ஓடுதல் கோழையின் செயல் என்று சொல்லித் தந்தவர்கள் தமிழர்கள்.

ஒரு வயதான தாய் மகனைப் போருக்கு அனுப்பிவிட்டு  அவன் வருகைக்காக

காத்திருக்கிறாள். அப்போது  மகன் புறமுதுகிட்டு ஓடினான் என்று யாரோ கூறிவிட ,அப்படியே கலங்கிப் போனாள் அந்தத்தாய். ஓடிச் சென்று ஒரு அறுவாளைக் கையில் எடுத்துக் கொண்டு போர்க்களம் நோக்கி ஓடுகிறாள்.

"என்மகன் பேடியாய்ப் புறங்காட்டி

ஓடியது உண்மையாயின் அவனுக்குப்

பாலூட்டிய மார்பை அறுத்து எறிந்திடுவேன்"

என ஆவேசமாகப் பேசியபடி போர்க்களத்தைச் சென்றடைகிறாள்.

அங்கே மகன். மார்பில் வேல் பாய்ந்து மாண்டு கிடக்கிறான்.ஓடிச் சென்று ஆரத் தழுவிக் கொண்டு அழுகிறாள். மகனைப் பெற்றபோது கிடைத்த இன்பத்தைவிடவும் பெரியதோர் இன்பம் உற்றதாகக் கூறுகிறாள். இறந்தாலும் மார்பில் அம்பு ஏந்தி இறந்திருக்க வேண்டும். அவன்தான்  ஒரு வீரனாகக் கருதப்படுகிறான்.


தமிழர் பண்பாடு ஈதல் - Tamil Culture Ethal

வள்ளுவர்.

"ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு "


செல்வத்தின் பயனே ஈதல் என்ற உயரிய கோட்பாட்டை உலகறிய வைத்தவர்கள் தமிழர். முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியையும் மயிலுக்குப் போர்வை தந்த பேகனையும்  தந்த மரபு தமிழருடையது. கடையேழு வள்ளல்கள் வாழ்ந்த பூமி இது.

குறுநில மன்னர்கள் பரிசில் அளித்து புரவலர்களாக வாழ்ந்தனர். அடையா வாயில் அவர்களுடையதாக இருந்ததாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் ஒப்பற்ற பண்பாட்டுக் கோட்பாட்டை உலகறிய செய்தவர்கள் தமிழர்கள். தம் மக்கள் தம் இனம் என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் முடங்கிவிடாது பரந்துபட்ட மனம் படைத்தவர்கள்.


தமிழர்களின் இயற்கை வழிபாடு - Nature worship of Tamils

இயற்கையைத் தெய்வமாக வழிபட்டு வந்த பண்பாடு தமிழருடையது.இயற்கை பேரழிவுகளில் இருந்து தம்மைக் காப்பாற்றும் சக்தி இயற்கைக்கே உண்டு என நம்பினர். அந்த நம்பிக்கை இறைவழிபாடாக மாற்றம் கண்டது. இயற்கையை தெய்வமாக நம்பும் பண்பு உருவானது. தமிழரின் திருவிழாக்கள் இயற்கை சார்ந்ததாகவே இருந்தது.


தமிழர்களின் ஒழுக்கம் - Morality of Tamils

ஒழுக்கம் என்பது தமிழர் பண்பாட்டின் மையக்கூறு என்றே கொள்ளப்பட்டது. ஒழுக்கத்தை உயிரென மதித்தவர்கள் தமிழர்கள்.

வள்ளுவர்.

"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும் "

நல்ல நெறியில் வாழ்வது  உடலுக்கும் மனத்திற்கும் நல்லது.சமூக வாழ்க்கைக்கும் இனிமை தருவது. ஒழுக்கத்தில் சிறந்தோரைத் தமிழர் சான்றோர் எனக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

"மயிர்நீப்பின் வாழா கவரிமா அன்னார்

உயிர்நீப்பர்  மானம் வரின் "

 

தமிழர் பண்பாடு ஒருவனுக்கு ஒருத்தி - Tamil culture is one to one

ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்ந்த பண்பாடு தமிழருடையது. தமிழர் கலாச்சாரமே ஒரு மனைவியோடு வாழ்வதுதான். கம்பராமாயணத்தில் ஒரு காட்சி. அசோக வனத்தில் இருந்த சீதை இராமனுக்கு அனுமன் மூலமாக ஒரு செய்தி அனுப்புகிறாள்.

" வந்த எனைக் கைப்பற்றிய வைகல்வாய்

 இந்த இப்பிறவிக்கு இருமாந்தரைச்

 சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம் 

 தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய் "

அதாவது திருமணம் முடிந்து அழைத்து வந்தபோது இராமன் இப்பிறவியில் இன்னொரு பெண்ணைச் சிந்தையில்கூட நினைத்துப் பார்க்க மாட்டேன் என்று கூறியிருக்கிறான். போ...போய் நீ அதை அவரிடம் நினைவுபடுத்து என்கிறாள்.

கற்பு என்றால் அது பெண்ணுக்கு மட்டுமன்று ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதாகப் பார்க்கப்பட வேண்டும்.

பாரதி

"கற்பு நிலயென்று சொல்ல வந்தார் இருகட்சிக்கும்

அஃது பொதுவில் வைப்போம் "


தமிழர்களுக்கு மலர்கள் முக்கியத்துவம் - Flowers are important for Tamils

மலர்கள் இல்லாமல் தமிழர் விழாக்களோ பண்டிகைகளோ இல்லை.

மலர்கள் மங்கலப் பொருளாக கருதப்பட்டது அதனால் மலரில்லாமல் மங்கல நிகழ்ச்சிகள் நடை பெறுவதில்லை. நெல்தூவி வழிபடும் முறையும் உண்டு. நடுகற்களை வணங்கும்போது நெல்தூவி வணங்குவதும் ஒரு மரபாகவே இருந்து வந்திருக்கிறது.


தமிழர் பண்பாடு கலை - Tamil Culture Art

 பண்பாட்டின் முக்கிய வடிவம் கலைகள். நம் பாரம்பரிய கலைகள் மயிலாட்டம் ஒயிலாட்டம், சிலம்பாட்டம், களரி  போன்றவை காணாமல் போய்விட்டன.நாட்டுப்புற கலைகள் நலிந்து கொண்டிருக்கின்றன. நம் பாரம்பரிய கலைகள் பாதுகாக்கப் பட வேண்டும். 

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அந்த மொழியை அழித்துவிட்டால் போதுமானது. அந்த இனம் காணாமல் போவதற்கு இது ஒன்றே போதும் என்பர். கலையும் கலாச்சாரமும் நமது முகவரியாக இருந்து வந்துள்ளது.அவற்றை மறையவிடாமல் காத்தல் நம் கடமை.



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments