மலராடும் கூந்தலை
மலைக்காற்று தாலாட்ட
மங்கையவள் நாடி வருவாள்
மனங்குளிர மார்போடு
மார்புறத் தழுவியே
மலரிதழில் முத்தம் தருவாள்
பலராடும் நாட்டியம்
பார்த்தால் சிரிப்பெனக்குப்
பொங்கிவரும் எனக் கூறிடுவாள்
பாவை-தான் நாட்டியம்
ஆடினால் அந்தப்
பரமனும் வந்தாடுவான் என்பாள்
சிலராடும் ஆட்டம்
“சில்லரைக்கு” எனக்கூறி
செவ்விதழ் மலர்ந்திடச் சிரிப்பாள்
சிந்தையில் அவளழகு
வந்து விளையாடிட
செந்தமிழில் பாடு மனமே!
நிலையற்ற உலகத்தில்
நிலையானது காதலென
நெஞ்சம் உருகிடப் பேசிடுவாள்
நிலையான காதலை
உன்மேல் வைத்தேனென்று
நீண்டதொரு மூச்சிழுத்து விடுவாள்
தலையற்ற மனிதர்கள்
தலைவியின் அழகைக்காண
தவமாய் தவமிருக்க வேண்டும்
தலையுள்ள மனிதர்கள்
தலைவியின் அழகைப்பாட
தனித்தமிழ் கற்றிருக்க வேண்டும்
சிலையற்ற கருங்கல்லும்
அவளழகைப் பெறுவதற்கு
சிற்பியிடம் கண்ணீர் சிந்தும்
சிந்தையில் அவளழகு
வந்து விளையாடிட
செந்தமிழில் பாடு மனமே!
நன்றி - மா.அருள்நம்பி
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments