சமூகமயமாக்கலில் விசேட தேவையுடைய மாணவர்களும் சமவயதுக் குழுவினரும். Special needs students and peer groups in socialization

Special needs students and peer groups in socialization

சமூகமயமாக்கலின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாக சமவயதுக்குழு விளங்குகிறது. இது சமூக நலன்களைக் கொண்டிருக்கும் ஒரு முதன்மைக் குழுவாகவும் கருதப்படுகிறது. ஓவ்வொரு மனிதனுக்கும் குடும்பம் எனும் சமூக நிறுவனத்திற்கு அடுத்த படியாக பாடசாலையோடு இணைந்து சமூகமயமாக்கலுக்கான அதிக பங்களிப்பைச் செய்யும் ஒரு சமூக நிறுவனமாக சமவயதுக்குழு காணப்படுகிறது. 

குடும்பம் எனும் போது முதன்மையானதும் மிக முக்கியமானதுமாக கருதுவது சுற்றுச்சூழலையே. விசேட தேவைகளுடைய மாணவர்கள் தங்களது வாழ்க்கையை சீர்ப்படுத்தும் திறனை ஏற்படுத்தும் ஒன்றாகவும்  சுற்றுச்சூழல் கருதப்படுகின்றது. இவ்வகையில் பாடசாலைச் சமூகம் மாணவர்களை மிக முக்கியமாக வழிகாட்டும் ஓர் இடமாக கருதுகிறது. விசேட தேவையுடைய பிள்ளைகளை பாடசாலை சமூகத்துடன் இணைத்துக் கொள்வது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். அவ்வகையில் சமூகத்தில் மனிதன் சிறந்தவனாக வாழ்வதற்கும் தன்னை முழு மனிதனாக மாற்றிக் கொள்வதற்கும் போட்டி மிக்க சமூகத்தில் தன்னை வெளிப்படுத்தி நிற்கின்ற இன்றைய காலக்கட்டத்தில் கல்வியறிவு அவற்றிற்கு அவசியமாகும்.

மாணவர்களில் வினைத்திறன் கூடிய மாணவர்கள், வினைத்திறன் குறைந்த மாணவர்கள், மெல்ல கற்கும் மாணவர்கள், விசேட தேவையுடைய மாணவர்கள் என்றெல்லாம் பலவாறு கூறிக்கொண்டு சென்றாலும் மாணவர்கள் அனைவரும் சமமானவர்;களே. ஆகவே ஒவ்வொரு பெற்றோர்களும்  அதனை புரிந்துக் கொண்டு விசேட தேவையுடைய மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை வழங்க முன்வர வேண்டும். ஆனால் இன்று பெற்றோர்கள் சாதாரண மாணவர்களுடன் இணைந்த கற்கைச் செயற்பாட்டில் தம் விசேட தேவையுடைய பிள்ளைகளை இணைத்துக் கொள்வது தொடர்பில் எதிர்மறையான மனப்பாங்கைக் கொண்டுள்ளனர்.    

சமூகமயமாக்கல் முகவர்கள் என்றவகையில் சமவயதுக் குழுக்களானவர்கள்  சமூகமயமாக்கலுக்கும் பாரிய பங்களிப்பினை செய்கின்றனர். அந்தவகையில்; விசேட தேவைகளுடைய மாணவர்களின் சமூகமயமாக்கலிலும் சமவயதுக் குழுக்களானவர்கள் பாரிய பங்களிப்புகளை செலுத்தி வருகின்றனர். அவை சாதகமானதாகவும் இருக்கலாம், சிலவேளைகளில் பாதகத் தன்மைகளையும் வெளிப்படுத்தலாம்.

விசேட தேவையுடைய மாணவர்கள் எனும்போது கேட்டல் குறைபாடுடையவர்கள், பார்வை குறைபாடுடையவர்கள், ஓட்டிசம், கற்றல் இயலாமையுடையவர்கள், உடலியக்க குறைபாடுடையவர்கள், பேச்சு மற்றும் மொழி குறைபாடுடையவர்கள் எனப்பலரும்  உள்ளடங்குகின்றனர். இவர்களின்  சமூகமயமாக்கல் செயற்பாடுகளில் சமவயதுக் குழு, குடும்பம், பாடசாலை, உயர்கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் என பல்வேறு காலப்பகுதிகளிலும் பாரிய பங்களிப்பினை செய்து வருகின்றனர். 

விசேட தேவையுடைய பிள்ளைகளின் சமூகமயமாக்கலில் சமவயதுக் குழுக்களின் பாரிய பங்களிப்புக்களில் உடல், உள விருத்தி என்பது மிக முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது. இவர்கள் உடலியல் ரீதியாக கொண்டுள்ள இயலாமையினை சகபாடிக் குழுவினரின் ஒற்றுமை உணர்வுகளின் வாயிலாக குறைத்துக் கொள்வதுடன், உளரீதியாக ஆறுதலையும் இக்குழுக்களினால் பெற்றுக் கொள்கின்றனர்.

விசேட தேவைக்குட்பட்டோர் பல்வேறு சமூகப் புறக்கணிப்புக்களை எதிர் நோக்குகின்றனர். இதனால், முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அவர்கள் தங்களது வாழ்வை வீட்டீற்குள்ளேயே கழிக்க வேண்டிய சூழல் உருவாகின்றது. ஆனால் இன்றைய சமுதாயத்தில் அவ்வாறான நிலை அற்றுப்போயுள்ளது. சமவயது குழுக்கள் மற்றும் ஏனைய அரசியல், சமூக, கல்வித் திட்டங்கள் வாயிலாக விசேட தேவையுடையோரும் முன்னேறிச் செல்லும் போக்கினை கண்கூடாகவே அவதானிக்கக் கூடியதாக உள்ளது. விசேட தேவையுடையோர்கள் பலர் தமது சாதனைகளுக்கு காரணம் தன்னுடைய சக நண்பர்களே என பல நேர்காணல்களில் கூறியிருக்கின்றமை இதற்கு எடுத்துக்காட்டாகும்.     

சமவயதுக் குழுக்களின் வாயிலாக விசேட தேவைகளுடைய மாணவர்களின் திறன்களும் வெளிப்படுத்தப்படுகின்றது. விசேட தேவைகளுடைய மாணவர்களின் பல்கலைக்கழக நுழைவு மட்டங்களை எடுத்துக் கொண்டால் அவர்களை கலை, கலாசார நிகழ்வுகளுக்கு அழைத்துச் செல்லுதல், அவற்றில் பங்குகொள்ளச் செய்தல் என பல்வேறு செயற்பாடுகளில் சமவயதுக் குழுக்களின் பங்களிப்பினை அவதானிக்கலாம். சமூக உணர்வுகள் அதிகரிப்பதற்கும்; விசேட தேவைகளை உடைய மாணவர்களுக்கு சமவயதுக் குழுக்கள் உதவுகின்றனர். எடுத்துக்காட்டாக, இலங்கை போன்ற பல்லின கலாசாரங்களையுடைய நாடுகளில் சமூகமானது பல்லின மொழி, கலாசாரப் பண்புகளை வெளிப்படுத்தும் ஒன்றாகக் காணப்படுவதனால் இவ்வாறான மாணவர்களின் ஒன்று சேர்க்கையில் விசேட தேவைகளையுடைய மாணவர்களுக்கும் சமூக உணர்வுகள் எழுகின்றது.  

விசேட தேவைகளுடைய மாணவர்களின் தேவைகள் நிறைவு செய்யப்படுவதில் சமவயதுக் குழுக்களானவர்கள் பாரிய பங்களிப்பினை செய்கின்றனர். உதாரணமாக, சுதந்திரமான மற்றும் சமத்துவமான உறவு நிலைகளினை தங்களது வயதை ஒத்தவர்கள் எனும் அடிப்படையில் சமவயதுக் குழுக்கள் காட்டுவதன் வாயிலாக விசேட தேவைகளை உடைய மாணவர்களிடையே சுதந்திரமான உணர்வுகள் ஏற்பட்டு, அவர்களின் திறன்கள் வெளிப்படுவதற்கான பல்வேறு சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. இதன் வாயிலாகவே இன்றைய பல்கலைக்கழகங்களில் விசேட தேவையுடைய மாணவர்கள் தங்களது பட்டக் கற்கையினை நிறைவு செய்து செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கின்றன.

பல்லின கலாசார பண்புகளை அறிந்து கொள்வதற்கும் விசேட தேவைகளுடைய மாணவர்களுக்கு இச்சமவயதுக் குழுக்கள் உதவுகின்றனர். இன்றைய நாடுகள் அதிகளவாக பல்பண்பாட்டுச் சூழலை உள்ளடக்கியது என்பதனால் பாடசாலை, உயர்கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு கிடைக்கும் பல்லின கலாசார நண்பர்களின் வாயிலாக அவர்கள் ஏனைய கலாசார பண்புகளை உடையவர்களுடன் தொடர்பு கொள்வதற்கும் பழகிக்கொள்கின்றனர்.

மன அழுத்தத்தை குறைத்துக் கொள்வதற்கும், அதனூடாக தங்கள் திறன்களை வெளிப்படுத்திக் கொள்வதற்கும், விசேட தேவையுடைய மாணவர்களின் உயர் அடைவுகளுக்கும்,  ஒரு பகுதியாக இந்த சமவயதுக் குழுக்கள் உதவுகின்றனர். நண்பர் குழாத்துடன் இணையும் போது விசேட தேவைகளை உடைய மாணவர்களில், இயலாமையுடைய மாணவர்கள் தங்களிடையே சமத்துவமான ஒரு உணர்வினை உணர்வதன் வாயிலாக தங்களது இயலாமைகளை மறந்து முடியவில்லை என்று கூறும் செயற்பாடுகளை விடுத்தும், அவர்கள் புதிய புதிய திறன்களை தங்களிடத்தில் வளர்த்தும் கொள்கின்றனர். அது மாத்திரமில்லாமல் மீத்திறனுடைய மாணவர்களுக்கும் சமூகமயமாக்கலில் பல்வேறு உதவிகளை சமவயதுக் குழுக்கள் செய்கின்றனர். பாடசாலை, பல்கலைக்கழகம், தொழில் நிறுவனங்கள் என பல்வேறு மட்டங்களிலும் இவர்களின் முயற்சிகளுக்கும், மேலதிக செயற்பாடுகளுக்கும் உதவிகளினையும் செய்து வருகின்றனர்.

ஒரு பிள்ளை தன்னை ஒத்த மற்றொரு பிள்ளையுடன் சேர்ந்து வேலைச் செய்யும் போது, அறிவுக் குறைபாடுகளையோ, ஏனைய குறைபாடுகளையோ தமது குறைபாடுகளாகக் கொள்வதில்லை. இவ்வாறு விசேட தேவைக் கொண்ட மாணவரும் சமவயது குழுவினரும் ஒன்று சேர்வதால் சிந்தனைத்தாக்கத்தில் அதிக முன்னேற்றமும், அறிவுப்பகிர்வும், தொடர்பாடல் திறனில் முன்னேற்றமும் ஏற்படுகின்றது.

எவ்வாறாயினும் சமவயதுக் குழுக்களின் பங்களிப்பானது விசேட தேவைகளை உடைய மாணவர்களுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடியதாக உள்ளன. உலகில் அவ்வாறான செயற்பாடுகளுக்கும் பல்வேறு சம்பவங்களும் எடுத்துக்காட்டாக உள்ளன. இவ்வாறான விசேட தேவைகளை உடைய மாணவர்கள் வகுப்பறையில் இருக்கும் போது அவர்களை ஒதுக்கி வைத்தல் என்பது சமவயதுக் குழவினரின் மிக முக்கியமான செயற்பாடாக காணப்படுகின்றது. ஆகவே, அதிகமாக இயலாமையுடைய மாணவர்களை சாதாரண மாணவர்கள் தங்களோடு இணைத்துக் கொள்வதற்கு முன்வருவதில்லை. இதன் காரணமாக அவர்கள் உடல், உள, மனவெழுச்சி ரீதியாக இன்னும் பின்னடைவுக்கு செல்லக்கூடிய நிலையினை அவதானிக்க கூடியதாகவுள்ளது. இந்நிலையானது வளர்ச்சியடைந்த வல்லரசு நாடான அமெரிக்காவில்; கூட அவதானிக்க கூடியதாகவே உள்ளது.

மேலும் ஒதுக்கி வைத்தலோடு மாத்திரமில்லாமல், அவர்களின் குறைகளை கூறி அவர்களை இழிவுபடுத்தக்கூடிய ஒரு நிலையானது இன்று சமவயதுக் குழுக்களினால் விசேட தேவைகளை உடைய மாணவர்களுக்கு ஏற்படுத்தப்படும் ஒரு பாதகமான விளைவாகவே உள்ளது. இவ்விளைவின் காரணமாக அவ்வாறான மாணவர்கள் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

கேலி, கிண்டல் போன்றனவற்றால் சமவயதுக் குழுக்கள் விசேட தேவைகளை உடைய மாணவர்களை பகிடி செய்வதும், அவ்வாறே அவர்களுக்குரிய கலாச்சார விடயங்கள் சம்பந்தமாகவும், திருமண நிகழ்வுகள் சம்பந்தமாகவும் பல்வேறு விமர்சனங்களை செய்வதன் வாயிலாகவும் விசேட தேவைகளை உடைய மாணவர்கள் தங்களது உயிர்களை மாய்த்துக் கொள்ளக்கூடிய நிலைகள் கூட இன்று குடும்பம், பாடசாலை, கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் போன்றவற்றில் ஏற்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பாகிஸ்தானிய முபினா மசாரியின் தற்கொலை முயற்சியினை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

உடல் ரீதியாக காயங்களுக்கு உட்படுத்துதல் என்பதும் விசேட தேவைசார் மாணவர்களுக்கு நண்பர் குழாத்தினரால் மேற்கொள்ளப்படுகின்றது. இது எதிர்மறையான விளைவுக்கு இட்டுச்செல்லும் ஒரு விடயமாக காணப்படுவதுடன், சில சமவயதுக் குழுக்கள் இவ்வாறான மாணவர்களை போதை வஸ்து பழக்கங்களுக்கும் இட்டுச் செல்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர்.

விசேட தேவைகளை உடைய மாணவர்களின்; சமூகமயமாக்கல் செயன்முறைக்கும் சமவயதுக் குழுக்கள் பாரிய பங்களிப்பினை செய்கின்றனர். அவர்களின் பங்களிப்புகளில் ஒரு பகுதியானது சாதகமான விளைவுகளினைத்தர, மற்றைய பகுதியானது அதற்கு எதிரான வகையில் பாதகமான பல்வேறு விளைவுகளினை ஏற்படுத்துகின்றன. எவ்வாறாயினும், விசேட தேவையுடைய பிள்ளைகளை வழக்கமான வகுப்பறைகளில் சேர்க்கும்போது, அவர்கள் தங்கள் சமவயதினருடன் இயல்பாகவே தொடர்புக் கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. இது அவர்களுக்கு சமூக திறன்களை வளர்க்கவும், நட்புக்களை உருவாக்கவும், சமூக விதிமுறைகளை கற்றுக்கொள்ளவும் உதவுகிறது.   

எனவே, காலவோட்டத்தில் இவர்களின் குறைபாடுகளை பிறந்ததிலிருந்து மரணம் வரை மறைக்கக் கூடிய ஒரே ஒரு உறவு நிலை நண்பர் குழாத்தினராவர். இவர்களின் கற்றல் கற்பித்தல், சமூக மனவெழுச்சி ரீதியான பல்வேறு மாற்றங்களுக்கும் சமவயதுக் குழுக்களானவர்கள் பாரியளவில் பங்களிப்பு செய்து உதவ வேண்டும் என்பது இன்றைய பல்லின கலாச்சார நாடுகளுக்கு அத்தியாவசியமான ஜனநாயகத் தேவையாக உள்ளது. மேலும் சாதாரண குடிமகனை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் அனைத்து நலன் மற்றும் அபிவிருத்தி சார்ந்த நடவடிக்கைகளின் போதும், விசேட தேவையுடையோரின் பங்களிப்பை ஏற்படுத்துவதற்கும், அவர்களது நலனை கட்டியெழுப்புவதற்கும் எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

சமூகமயமாக்கலினூடாக இனிவருகின்ற வருங்கால சந்ததியினர் விசேட தேவைக்குட்பட்டவர்களையும் சாதாரண மக்களாக எண்ணுகின்ற தன்மையினை உருவாக்க வேண்டும். விசேட தேவைக்குட்பட்டவர்களும் இணைந்ததுதான் சமூகக் கட்டமைப்பு என்கின்ற போக்கினை சமவயது குழுக்கள் உட்பட்ட அனைத்து சமூகத்தினரி;டையேயும் ஏற்படுத்த வேண்டும். 

பாலச்சந்திரன் தர்ஷினி
நான்காம் வருட சிறப்புக் கற்கை மாணவி
கல்வி, பிள்ளை நலத்துறை
கிழக்குப் பல்கலைக்கழகம்Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments