மனித உரிமை என்பது, ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப் பெறவேண்டிய மற்றும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். மனிதன் என்றாலே அவன் இவைகளால் வாழ முடியாது என கருதப்படும் அடிப்படையான தேவைகளை உள்ளடக்கிய உரிமைகள் இதில் சாரும். இந்த உரிமைகளை "மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளாக கருதப்படுகின்றன. இனம், சாதி, நிறம், சமயம், பால், தேசியம், வயது, உடல் உள வலு ஆகியவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருக்கும் இந்த அடிப்படை உரிமைகள், மனிதர் சுதந்திரமாக, சுமுகமாக, நலமாக வாழ அவசியமான உரிமைகளாகக் கருதப்படுகின்றன.
மனித உரிமைகள் என்பவற்றுள் அடங்குவதாகக் கருதப்படும் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுள், வாழும் உரிமை, சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சட்டத்தின் முன் சமநிலை, நகர்வுச் சுதந்திரம், பண்பாட்டு உரிமை, உணவுக்கான உரிமை, கல்வி உரிமை என்பன முக்கியமானவை. மனிதனின் இன்றியமையாத தேவைகளான நீர், நிலம், காற்று. உறைவிடம், பிறப்பு மற்றும் வாழுதல் போன்றவைகளை அடிப்படையாகக் கொண்டும் அந்தந்த நாட்டின் மூலச்சட்டங்களையும் கருத்தில் கொண்டும் இந்த மனித உரிமைகள் வடிவமைக்கப்படுகின்றன.
இதற்கு பல்வேறு அறிஞர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். இவர்கள் தமது கருத்துகளை கால சூழ்நிலைக்கு ஏற்ப முன்வைத்துள்ளமையை நாம் அவதானிக்கலாம்.
மனிதன் வாழ்ந்தால் மட்டும் போதாது, நன்றாக வாழ வேண்டும். நலன்கள் பாதுகாக்கப்பட்டால்தான் மனிதன் நன்றாக வாழ இயலும். தனது நலனைப்பேணி பொது நலனையும் பாதுகாப்பதற்கு ஒருவனுக்குள்ள சக்தியே உரிமைகள் எனப்படும்' என்று அரிஸ்டோட்டில் குறிப்பிடுகின்றார்
லஸ்கி என்பவர் குறிப்பிடும் போது 'பிறருக்கு இடைஞ்சல் இன்றி ஒவ்வொரு மனிதனும் தனது ஆளுமையை வளர்த்துக் கொள்வதற்கான சூழலை சமூகத்தில் நிலைநிறுத்திக் கொள்ளுதலையே உரிமைகள்' என்றார்.
லொக் என்பவர் 'உரிமைகள் என்பன ஒவ்வருவருடைய அதிகாரம் அல்லது கோரிக்கையை விட உயர்ந்தவையாகும்' என்றார்.
கோப் கவுஸ் என்பவர் 'சமூக நலனை பேணும் நிபந்தனைகளே உரிமைகள்' எனக் குறிப்பிடுகின்றார்.
ஹொப்ஸ் என்பவர் 'உண்மையான உரிமைகள் சமூகப் பொதுநலத்தின் நிபந்தனைகள்' என்றார்.
அடிப்படை மனித உரிமைகள்
- வாழும் உரிமை
- உணவுக்கான உரிமை
- நீருக்கான உரிமை
- கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்/பேச்சுரிமை
- சிந்தனைச் சுதந்திரம்
- ஊடகச் சுதந்திரம்
- தகவல் சுதந்திரம்
- சமயச் சுதந்திரம்
- அடிமையாகா உரிமை
- சித்தரவதைக்கு உட்படா உரிமை
- தன்னாட்சி உரிமை/சுயநிர்ணயம்
- ஆட்சியில் பங்குகொள்ள உரிமை
- நேர்மையான விசாரணைக்கான உரிமை
- நகர்வு சுதந்திரம்
- கூடல் சுதந்திரம்
- குழுமச் சுதந்திரம்
- கல்வி உரிமை
- மொழி உரிமை
- பண்பாட்டு உரிமை
- சொத்துரிமை
- தனி மனித உரிமை
மனித உரிமையின் இயல்புகள்
மனித இருத்தலுக்கு அவசியமானதும் அவர்களின் சுய கௌரவத்தையும் பாதுகாப்பதற்கான வாய்ப்புகளே மனித உரிமைகளாகும். இவை இயற்கை உரிமைகளினதும் குடியியல் உரிமைகளினதும் கலவையாகும். இவை உலகிலுள்ள சகல இடங்களுக்கும் சகல மனிதர்களுக்கும் பொதுவானதாகும். மனித உரிமைகளின் எவற்றை அத்தியாவசியமாக பாதுகாக்க வேண்டும் என ஒவ்வொரு அரசும் தீர்மானித்து அது அரசியல் யாப்பில் உள்ளடக்கும் உரிமைகளே அடிப்படை உரிமைகளாகும். இவை நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. அரசுகள் இவற்றை பாதுகாப்பதற்கு சட்ட ரீதியாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன.
உரிமைகள் சமூகத்தில் தோன்றுபவை சமூகத்திற்கு அப்பால் உரிமைகள் இருத்தல் இயலாதது. உரிமைகளுக்கு வரையறையுண்டு இவ்வரையறை அனுபவித்தலேயாகும். உரிமைகள் கட்டாய கடமைகளுடன் இணைந்தவை. கடமைகளின்றி உரிமைகளை அனுபவிக்க முடியாது. உரிமைகள் வளரும் தன்மைக் கொண்டவை. சமூக அபிவிருத்திக்கு ஏற்ப உரிமைகளும் அபிவிருத்தி அடைகின்றது. உரிமைகளை அரசு உருவாக்குவதில்லை. உரிமைகளை சகலரும் சமமான முறையில் அனுபவிப்பதற்கேற்ற சூழலைஏற்படுத்தி உரிமைகளை பாதுக்காத்தல் அரசின் கடமையாகும்.
மனித உரிமையின் முக்கியத்துவம்
இன்றைய கால கட்டத்தில் மனித உரிமைகளானது பல்வேறு வழிகளில் முக்கியத்துவமுடையதாக விளங்குகின்றது. இன்றை உலக அரசுகள் பொதுவாக ஜனநாயகம் என்ற அடித்தளத்தினை பேணுவதை நாம் அவதானிக்கலாம். மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே அங்கு சிறப்பான முறையில் ஜனநாயகம் நிலவமுடியும். மனித உரிமைகள் மறுக்கப்படும் ஒரு நாட்டில் ஜனநாயகம் வலுகுன்றியதாகவே காணப்படும். ஏனெனில் மனித உரிமைகள் என்ற தளத்திலேயே ஜனநாயகம் நிலைப்பெற்றுள்ளது. இதனாலேயே ஒவ்வொருநாடும் தனது அரசியல் யாப்பில் மனித உரிமைகளை அடிப்படை அலகாகக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளை குறிப்பிடலாம்.
ஒரு நாடு நல்லாட்சியுடையதாக விளங்க வேண்டுமானால் அங்கு மனித உரிமைகள் சிறப்பான முறையில் பேணப்படுதல் வேண்டும். இதனாலேயே நல்லாட்சியின் அடிப்படை பண்பாக மனித உரிமைகளை இணைத்துள்ளனர்.
மனித உரிமையின் முக்கியத்தவத்தில் அடுத்தாக குழு உரிமை என்பது முக்கியமானது. மனிதன் தனியாகவும், குழுவாகவும் தனது உரிமைகளை அனுபவிக்க உரித்துடையவன். அந்தவகையில் குழு உரிமைகள் மீறப்படுவதன் காரணமாகவே இன்று பல நாடுகளில் இன மோதல்களும், ஆயுதப் போராட்டங்களும் நிகழ்வதை நாம் அவதானிக்கலாம். ஒரு இனக்குழுவானது இன்னுமொறு இனக்குழுவின் உரிமைகளை மீறும் பட்சத்தில் அங்கு முரண்பாடு தோன்றும். இதனால் குழு உரிமைகளும் முக்கியமானதாகும். எடுத்துக்காட்டாக பாலஸ்தீன - இஸ்ரவேல், இலங்கை இன முரண்பாடு, அமெரிக்காவில் காணப்பட்ட வட மாநில தென்மாநில முரண்பாடு, காஸமீர் முரண்பாடு மற்றும் தென்னாபிரிக்க இன போராட்டம் என்பவற்றை குறிப்பிடலாம். இதன்படி, ஒரு நாடு எவ்வித பிரச்சினையும் இன்றி செயற்படும் போதுதான் அதன் அபிவிருத்தி உயர்நிலையடையும். இதற்கு அடிப்படையாக மனித உரிமைகள் பேணப்படுதல் வேண்டும்.
மேலும், இன்றைய காலகட்டத்தில் மனித உரிமைகளின் முக்கியத்துவமானது மிகவும் பேசப்பட்டு வருகின்றது. இதற்கான பிரதான காரணத்தை நாம் பின்வருமாறு குறிப்பிடலாம்.
- மனித உரிமைகள் அபிவிருத்தியை அளவிடும் அளவு கோல்.
- வெளிநாட்டு உதவியை பெறுதல்.
- அரசின் அத்து மீறிய செயற்பாட்டை கட்டுப்படுத்தல்.
- பொருளாதார வளர்ச்சி.
- மனிதனை பாதுகாத்துக்கொள்ள.
- சிறுவர்களை பாதுகாத்துக்கொள்ள.
- பெண்கள் சமூதாயத்தில் கௌரவமாக வழ்வதற்கு.
- தனிமனித ஆளுமையை விருத்தி செய்ய.
- சமூகத்தின் அபிவிருத்திக்கு.
- மானிட விடுதலைக்கு.
- இனமுரண்பாடு வன்முறையை தடுக்க.
இன்றய காலகட்டத்தில் ஒரு நாடு சர்வதேசத்தினால் அங்கிகரிக்கப்பட வேண்டுமானால் அந்நாடு மனித உரிமைகளை பேணும் நாடாக இருத்தல் அவசியமானதாகும்.
சட்டவாட்சியினை நிலைநிறுத்த மனித உரிமைகளை பேணுதல் வேண்டும். மனித சமுதாய வளர்ச்சியில் அரசியல் யாப்புகளின் மூலம் தம்மை நிர்வகித்துக் கொள்ளும் ஏற்பாடு அமையும் போது சட்டம் மனிதர்களது எந்த நலனைஏற்று பாதுகாக்கின்றதோ அந்த நலன்கள்தான் உரிமைகள் ஆகின்றன. சட்டத்தால் பாதுகாகக்கப்பெறாத நலன்கள் உரிமைகள் ஆவதில்லை. மனித உரிமைகளை சட்டத்தின் மூலம் பாதுகாக்கும் போதுதான் இங்கு சட்டவாட்சி நிலவ முடியும்.
இன்று மனித உரிமைகளை நிலைநாட்டுவதில் சர்வதேச மனித உரிமைகள் பேரவை மிகுந்த கஷ்டத்தினை எதிர்கொள்கின்றது. இதற்கு பல காரணங்கள் காணப்படுகின்றன. எனினும் உலக சமாதானத்தினையும், சமத்துவத்தினையும், மனித பாதுகாப்பினையும் நிலைநாட்டுவதற்கு உலகலாவிய மனித உரிமைகள் பேணப்படுதல் வேண்டும் என்பதில் சர்வதேச மனித உரிமை தொடர்பான அனைத்து ஸ்தாபனங்களும் கண்ணும் கருத்துமாக இருப்பதுடன் அதற்காக செயற்பட்டும் வருகின்றன.
0 Comments