‘வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளலடி யிணைக்கு வாய்த்த மலரெதுவோ
வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது’
பிறப்பு
இந்து சமுத்திரத்தின் முத்தென போற்றப்படும் இலங்கைத் தீவின் சரித்திர புத்தகத்தில் ஒரு புதிய அத்தியாயம் படைக்க இயற்கையன்னை திட்டமிட்டிருந்தாள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மீன்மகள் பாட வாவிமகள் நடனமாட எழில் கொஞ்சும் மட்டக்களப்பின் காரைதீவில் சரித்திர புத்திரன் பிறக்க இருக்கிறான். காலச்சக்கரத்தில் 1892 ஆம் ஆண்டு. நாட்கள் நெருங்க நெருங்க சாமித்தம்பியின் எதிர்பார்ப்பும் கண்ணம்மாவின் பதற்றமும் அதிகரித்துக் கொண்டே சென்றன. அன்று பங்குனித் திங்கள் பதினாறாம் நாள். தமிழ்த் தாயின் பெருமை சொல்ல தமிழ் மரபு தழைத்தோங்க சரித்திர நாயகனை ஈன்றெடுத்தாள் கண்ணம்மா. ஆனந்தத்தின் மொத்த உருவமாய் தமது வாழ்வின் அடுத்த அத்தியாயத்தை தம் சின்னஞ் சிறு புன்னகையால் மாற்றியமைக்கக் காத்திருந்த அக்குழந்தைக்கு அவர்கள் இட்ட பெயர் ‘மயில்வாகனன்’.
கல்வி
பெற்றோரின் உன்னதமான வழிகாட்டலிலும் அரவணைப்பிலும் வளர்க்கப்பட்ட மயில்வாகனன் 1898 ஆம் வருடம் திண்ணைப்பள்ளியில் வசித்து வந்த குஞ்சித்தம்பியின் மூலம் கல்வியுலகிற்கு அறிமுகப்படுத்தப்படுகிறார். பின்பு கல்முனை மெதடிஸ்ட் மிஷன், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி, மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி என்பவற்றில் கல்வி பயின்றார். பிறமொழிகள் தமது திறமைக்கான வரைபடங்கள் எனக்கருதிய மயில்வாகனன் தமது தாய்மொழி மட்டுமல்லாது இலத்தீன், கிரேக்கம், ஆங்கிலம், அரபு, சமஸ்கிருதம், சிங்களம், பாலி. பெங்காலி என பன்மொழிகளையும் தம் அறிவுப்பெட்டகத்தினுள் சேர்த்து வைத்தார்.
ஆசிரியப்பணி ஆரம்பம்
தமது பதினாறாவது வயதில் கேம்பிரிட்ஜ் சீனியர் பரீட்சையில் சித்திபெற்று, புனித மிக்கேல் கல்லூரிக்கே ஆசிரியரானார்;. தமது நன்னடத்தையாலும், பணிவான பேச்சினாலும், தூரநோக்கான சிந்தனையாலும் கூரிய வாளினை ஒத்த அறிவாற்றலாலும் மாணவர்களின் மனங்களை கவர்ந்தது மட்டுமன்றி எதிர்கால உலகின் சிற்பங்களை செதுக்கும் சிறந்த சிற்பியாக திகழ்ந்தார்.
நாட்கள் இவ்வாறு இன்பமயமாக சென்றுகொண்டிருக்க 1911 ஆம் ஆண்டு மயில்வாகனனின் மனதை ஆழத்திலிருந்து உலுக்கி நிலைகுலையச் செய்த ஓர் செய்தி. அவரது தாய் கண்ணம்மாவின் உயிர் ஆலயமாகிய உடலை பிரிந்து இறை சோதியில் ஐக்கியமாகியது. தாயின் பிரிவையடுத்து கல்முனை கத்தோலிக்க ஆங்கில பாடசாலையில் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றி பின்பு இரண்டாண்டுகள் கொழும்பு அரசினர் கல்லூரியில் ஆங்கில ஆசிரியர் பயிற்சியினைப் பெற்று 1913, 1914 களில் புனித மிக்கேல் கல்லூரியில் பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்தார்.
சாதனைகளின் நாயகன்
கரைபுரண்டோடும் அடிகளாரின் அளவற்ற அறிவு வெள்ளத்திற்கு மீண்டுமோர் தேர்வு மதுரை தமிழ்ச் சங்கத்தால் நடத்தப்படுகிறது. பரீட்சையில் தோற்றி சிறந்த தேர்ச்சியடைந்து ‘இலங்கையின் முதல் தமிழ்ப் பண்டிதர்’ எனும் பட்டத்தையும் பெற்றார்.
மயில்வாகனனின் அறிவிற்கான தேடல் எல்லையற்றது. முத்தமிழ் வித்தகனின் கல்விப்பசிக்கு சரஸ்வதிதாய் வழி சமைக்கிறாள். 1915 ஆம் ஆண்டு கொழும்பு அரசினர் தொழிநுட்பக்கல்லூரியில் இணைந்து விஞ்ஞானத்தில் டிப்ளோமா பட்டத்தினைப் பெற்று 1917 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சம்பத்திரிசியார் கல்லூரியில் விஞ்ஞான ஆசிரியராக பணிபுரிந்தார். இக்காலகட்டத்திலே தாம் தங்கியிருந்த ஆனைப்பந்தி இல்லத்தில் விவேகானந்த சபையை நிறுவினார். அத்துடன் சுவாமி சர்வானந்தரை சந்திக்கும் வாய்ப்பையும் பெற்றார். பின்பு 1920 ஆம் ஆண்டு இலண்டன் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி பட்டம் பெற்றார். மயில்வாகனனின் திறமைக்கும் அவரது அனுபவத்திற்கும் யாழ்ப்பாணம் மானிப்பாய் இந்துக்கல்லூரியில் அதிபராக உயர்த்தப்பட்டு 1920-1922 வரை கடமையாற்றினார். .
ஆன்மீகத்தாகம்
பல துறைகளிலும் வெற்றிகண்டு சாதனை படைத்து வந்த மயில்வாகனன் ஏதொவொரு திருப்தியற்ற நிலையை உணர்ந்தார். தேடித்தேடி தீர்த்தும் தனது தேடல் அறிவுப்பசிக்கான தவிப்பு மட்டுமல்ல என்பதை தெரிந்து கொள்கிறார். மனித வாழ்வின் உயரிய தேடல் எல்லையில்லா ஆனந்தத்தையும் நிலையான மகிழ்ச்சியையும் பெறுவதே. இது தூய்மையான நமதான்மா ஆதியும் அந்தமுமில்லா அருட்பெருஞ் சோதியான இறைவனுடன் சங்கமிக்கும் போதே நிகழ்கிறது. உள்ளத்தை கடந்து நிற்கும் கடவுளுக்கான சேவைக்காக தமது ஆன்மா ஏங்குவதே தம் ஆழ்மனதின் தவிப்பிற்கான காரணம் என்பதையறிந்து கொள்கிறார். காலத்தை கடந்து நிற்கும் இறையவனின் திருவுளத்தால் மயில்வாகனனின் ஆன்மீக தவிப்பிற்கு வழிகாட்டியாக மீண்டும் சுவாமி சர்வானந்தரின் இலங்கைக்கான வருகை நிகழ்கிறது. சுவாமிகளுடன் ஏற்பட்ட தொடர்பு மயில்வாகனனிற்கு மனத்தெளிவையும் ஆன்மீகத் தேடலுக்கான புது வெளிச்சத்தையும் அளிக்கத் தவறவில்லை. இதன் விளைவாக 1922 ஆம் ஆண்டு தமது ஆசிரியப் பணியைத் துறந்து சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ இராம கிருஷ்ண மடத்தில் இணைந்து துறவுப் பயிற்சியை மேற்கொள்கிறார்.
ஆன்மீக வாழ்வில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டதன் அடையாளமாக சுவாமி சர்வானந்தரால் ‘பிரபோத சைதன்யர்’ எனும் நாமம் சூட்டப்பட்டு அதைத் தொடர்ந்து பிரம்மச்சரிய தீட்சையும் சந்நியாச தீட்சையும் பெற்றார். இரண்டு வருடகால கடுமையான தவ முயற்சிகளாலும் பயிற்சிகளாலும் ஆன்மீகத்தை செழுமை பெறச் செய்து 1924 ஆம் ஆண்டு சித்திராபௌர்ணமியில் ஞானோபதேசம் பெற்று மயில்வாகனனின் அத்தியாயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து ‘சுவாமி விபுலாநந்தர்’ எனும் திருநாமம் கொண்டு வேதத்தினுள் புதுப்பிறப்படைகின்றார் நம் சரித்திரநாயகன்.
இந்து சமுத்திரத்தின் முத்தில் கிடைக்கப்பெற்ற இவ்வரிய இரத்தினத்தை இராம கிருஷ்ண மிஷன் செவ்வனே பயன்படுத்திக் கொள்ளத்தவறவில்லை. தமிழ், ஆங்கிலம், வடமொழியென மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்த விபுலானந்தர் ‘ஸ்ரீ இராம கிருஷ்ண விஜயம்’ எனும் தமிழிதழினதும், ‘வேதாந்த கேசரி’ எனும் ஆங்கில இதழினதும் ஆசிரியராகவும் பணிபுரிந்தார்.
விபுலாநந்தரின் கல்விக் கோட்பாடு
‘வருந்தித் தான் கற்றகல்வி மாய்ந்துமறைந் திடுமோ?
மறுமையிலும் உதவுமோ வான்மதியே
திருந்துகல்வி எழுமையும் ஏமாப்புஉடைத்து என்று உரைத்த
செம்மொழியை தேர்தி’ -கங்கையில் விடுத்த ஓலை
விபுலாநந்தர் கல்வியைப் பின்வருமாறு வரைவிலக்கணப்படுத்துகிறார். ‘விழுப்பத்தைத் தருகின்ற ஒழுக்கத்தை விருத்தி செய்யக்கூடிய கல்வியே கல்வியாகும். வெறும் ஏட்டுக்கல்வியால் மாத்திரம் இது எய்தப்படுவதில்லை. அவ்வாறே நல்லொழுக்கத்தை கற்றுத்தரவல்ல கல்வி நிலையங்களே உண்மையான கல்வி நிலையங்களாகும். மேலும், ‘உடல் வெறும் காற்றடைத்த பை’ எனக் கூறும் ஞானிக்கும் ‘இஞ்ஞால வாழ்க்கையே சொர்க்கம்’ என புலம்பும் அறிவிலிக்கும் நோய், மூப்பு, சாக்காடு என்பன பொதுவாகினும், அது உணரப்படும் விதத்திற்கேற்ப ஞானியானவன் இன்பத்தையும் அறிவிலியானவன் துன்பத்தையும் தம் மரணத்தருவாயில் அனுபவிப்பதாக எடுத்துரைக்கிறார் அடிகளார். இதனால்தான் சிறுவயது முதலே கல்வியினை சிறப்புற கற்றுத்தேர்ந்ததோடு, பிற்காலத்தில் ஆசிரியராக பணிபுரிந்து பல துறைகளிலும் சாதனைகள் பல படைத்து கல்வியை தம் உயிர்மூச்சாக்கினார். கல்வி தொடர்பாக அவர் கொண்டிருந்த கருத்திற்கு அவரது வாழ்கையே பெருஞ்சான்றாக மாறியது. தாம் பெற்ற கல்வியெனும் அமுதத்தை எதிர்கால சந்ததியும் சுவைத்து இன்புற வேண்டும் எனும் நோக்கில் 1924 – 1927 ஆகிய காலகட்டங்களில் இலங்கையில் இராமகிருஷ்ண சங்கத்தின் சார்பில் இருந்த பாடசாலைகளை பொறுப்பேற்று நடத்தியும், புதிய பாடசாலைகளை நிறுவியும், புதிய பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டும் வந்தார். 1927 ஆம் ஆண்டு கார்த்திகைத் திங்கள் 27 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்த மகாத்மா காந்தி அடிகளாரை யாழ்ப்பாண மாணவர் மாநாட்டு தலைவர் எனும் முறையில் வரவேற்றார்.
நட்பும், அறச்செயல்களும்
பெயரும் புகழும் குவிந்திருந்த காந்தமாகிய அடிகளாரை நோக்கி பொறுப்புக்களும் பதவிகளுமாகிய இரும்புத்துகள்கள் குவிந்த வண்ணமிருந்தன. 1931 ஆம் ஆண்டு தைத்திங்கள் இந்தியாவின் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைகழகத்தின் தமிழ் பேராசிரியராக பணியாற்ற திரு.ராஜசேகர் அண்ணாமலை செட்டியாரால் அழைக்கப்பட்டார். இதன்போது அடிகளாரின் மிகப்பெரும் தாராள குணத்தினால் அவர் பெற்ற ஊதியமனைத்தும்; மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தின் வளர்ச்சிக்கு வழங்கப்பட்டது. அத்துடன் அடிகளார் அண்ணாமலை பல்கலைகழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியர் எனும் பெருமையும் பெற்றார். இதன்போது சேரிப்புற மக்கள் மட்டில் அவர் புரிந்த அறச்செயல்கள் அவரது சமூகப்பணிக்கான மிகச்சிறந்த சான்றாகும். மேலும் இக்காலத்திலேதான் திரு.கந்தசாமிப்பிள்ளையின் அறிமுகம் கிடைக்கிறது. இந்நட்பு பற்றி ‘என்னைக் கண்ட நாள் அன்பென்னும் கயிறு கொண்டு பிணித்தான். அந்நாள் முதலாக நட்புரிமை பூண்டோம்’ என மனமுருக எடுத்துரைக்கிறார். மேலும் திரு.கந்தசாமிப்பிள்ளை மாரடைப்பால் இறந்ததும் தமது சோகத்தினை ‘கங்கையில் விடுத்த ஓலை’ எனும் கையறுநிலை கவிதை மூலம் வெளிப்படுத்துகிறார். இக்கவிதையில் உலக வாழ்க்கையின் நிலையாமையையும் பிறப்பு, இறப்பின் உண்மையினையும் தண்ணிலவோடு ஒப்பிட்டு விளக்கமளிக்கிறார்.
முத்தமிழ் வித்தகர்
அடிகளார் தமிழின் வளர்ச்சிக்காக இயல், இசை, நாடகம் ஆகிய துறைகளில் படைத்த சாதனைகளுக்காக தமிழ் உலகினரால் ‘முத்தமிழ் வித்தகர்’ என அறியப்படுகிறார். இயற்றமிழ் துறையில் ‘உலக புராணம்’, சோழ மண்டலத் தமிழும் ஈழமண்டலத் தமிழும்’, ‘அன்பின் ஐந்திணையுரை’, ‘இயலிசை நாடகம்’, ‘தென்னாட்டில் ஊற்றெடுத்த அன்புப்பெருக்கு வட நாட்டில் பரவிய முறை’, ‘பொருள் நூற்சிறப்பு’ ஆகியவற்றையும், N~க்ஸ்பியர், மில்டன், வேட்ஸ்வேர்த்கிட்ஸ், ஷெல்லி ஆகியோரின் ஆக்கங்களின் மொழிபெயர்ப்புக்களையும் தந்தருளினார். சில காலங்களுக்கு பின் அடிகளார் இமயமலை சாரலுக்குச்சென்று மாயாவதி ஆசிரமத்தில் தங்கியிருந்து இசைத்தமிழ் பற்றிய ‘யாழ் நூல்’ எனும் ஆதவன் தோற்றம் பெறச் செய்தார். அடிகளாரின் நீண்டகால உழைப்பின் அழியாச்செல்வமது. இவ்வாய்வு நூலினூடாக சங்ககால ஏடுகளில் காணப்படும் பல்வேறு யாழ்களினையும் எம் மனக்கண்முன் கற்பனைச்சித்திரமாகத் தந்தருளினார். அத்துடன் பாரதியாரின் பாடல்களை ஆய்வு செய்த முதல் ஆய்வாளரும் விபுலாநந்தரே. இவை தவிர நாடகவியலுக்கான நவீன இலக்கணத்தைக் கூறும் ‘மதங்க சூளாமணி’யையும் படைத்தார்.
இறப்பு
அன்று 1942 ஆம் ஆண்டு ஜுலை மாதம். ஏதொவொரு சொற்லொணா சோகம் அடிகளாரின் நெருக்கமானவர்களின் மனங்களை ஆக்கிரமித்திருந்தது.. ஆடித்திங்கள் 19 ஆம் நாள். காலனிற்கும் மருத்துவத்திற்கும் நடந்த போரில் காலன் வென்றான். விபுலானந்தரின் உயிர் பிரிந்தது. ஒரு கணம் மிகப்பெரும் நிசப்தம் நிலவிற்று. மண்ணின் மைந்தனை வெளியே அனுப்பி வைக்க விரும்பாத மக்களும் அவரது உடலை அவர் கட்டியெழுப்பிய மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தின் முன் அடக்கம் செய்தனர். அவரது உயிரை எடுத்து சென்ற எம தர்மனால் அடிகளார் பெற்ற பெயரையும் புகழையும் அவர் விதைத்த நற்பணிகளையும் தமிழ்மொழி சார் படைப்புக்களையும் அவர்பால் மக்கள் கொண்டிருந்த அன்பையும் இன்றுவரை இவ்வுலகிலிருந்து எடுத்துவிட இயலவில்லை.
சுவாமி விபுலாநந்தர் - பன்முகவித்தகர்.
இவ்வாறு சிறந்த எழுத்தாளராக, இசைஞானியாக, பன்மொழி தேர்ச்சியாளராக, சமூகவியலாளராக, துறவியாக, ஆசானாக, நல்ல தலைவனாக, திறமையான மொழிபெயர்ப்பாளராக, தத்துவவியலாளராக, அறிவியலாளராக என ஒரே பிறவியில் பல தோற்றங்கள் பெற்ற அடிகளாரை “பன்முக வித்தகர்” எனப்போற்றின் அது மிகையாகாது.
தான் பிறந்த ஈழத் தாயை அவையத்து முந்தியிருக்கச் செய்த மாமுனிவன் விபுலாநந்த அடிகளாரைப் போற்றுவோம்.
நன்றி - Amuthiney Arulanantham
நேயர் பக்கம் இது திறமையின் தேடல் - Sl Tamil
மேலதிக விபரங்களுக்கு
👉LINK CLICK HERE👈
உங்களுடைய ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்.
0 Comments