சிவன் வரலாறு - Sivan History Sl Tamil

சிவன் வரலாறு - Sivan History Sl Tamil

சிவன் என்றால், தமிழில் "சிவந்தவன்" என்று பொருள். வடமொழியில் சிவம் என்ற சொல்லுக்கு முழுமையானது, மங்கலகரமானது என்று பல பொருள் உண்டு. முது முதல்வன், ஈர்ஞ்சடை அந்தணன், காரியுண்டிக் கடவுள், ஆலமார் கடவுள் என அனேகம் சிவப்பெயர்கள் சங்கநூல்களில் உள்ளன. எக்கணமும் யோகநிலையில் ஆழ்ந்திருப்பதால் யோகி என்றும், அட்டமா சித்திகளில் வல்லவர் என்பதல் சித்தன் என்றும், சுடுகாட்டில் மனம் பேதலித்துப் பேய்களுடன் ஆடுபவராகச் சித்தரிக்கப்படுவதால், பித்தன் எனவும் குணங்களின் அடிப்படையில் அழைக்கப்படுகிறார்.

சிவன் (Śivan) சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர். இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசராசரங்களை உருவாக்கினார்களென்றும், தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது. பின்னர் அன்னை பராசக்தி படைப்பிற்காக பிரம்மதேவரையும், அதன்பிறகு காப்பதற்காக காக்கும் கடவுளான விட்டுணுவையும் உருவாக்கினார் என்றும் கருதப்படுகிறது. கடவுள்களில் ஊழிகாலத்தில் இவர் மட்டுமே நிலைத்திருப்பவராதலால் சதாசிவன் எனப்படுகிறார்.சிவனின் இடப்புறத்திலிருந்து விட்டுணுவும், வலப்புறத்திலிருந்து பிரம்மரும் உருவானார்கள் என்று திருமாலின் அவதாரங்களில் ஒருவரான வேதவியாசர் கூறுகின்றார். பிரம்மன் தன்னால் படைக்கப்பெற்ற உயிர்களை அழிக்க ஈசனிடம் வேண்டிநிற்க பிரம்மரின் மகனாக மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளான உருத்திரன் உதித்தார் என்று வாயு புராணம் கூறுகின்றது.

சிவன் இந்து சமயத்தில் மும்மூர்த்திகளுள் ஒருவர் என கூறப்படுகின்றார். 

சிந்து சமவெளி நாகரிகம் நிலவிய மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பெற்ற தியானத்திலுள்ள பசுபதி முத்திரையே சிவவழிபாட்டின் மூலம் என்று சொல்லப்படுகின்றது. மூன்று தலையினையுடைய தியானத்தில் இருப்பவரைச் சுற்றி மிருகங்கள் இருப்பதாக அமைந்த இந்த முத்திரை பசுபதி முத்திரை என்று அழைக்கப்பெறுகிறது.

சைவசமயத்தின் ருத்ரன், சிவன் இருவருமே ஒரே கடவுளாகக் கருதப்பெறுகிறார்கள். சைவசமயத்தின் பழமையான ரிக் வேதத்தில் ருத்ரன் கடவுளாகக் கூறப்பெறுகிறார். இவர் வில் அம்பினை ஆயுதமாக உடைய வில்லாளனாகச் சித்தரிக்கப்பெறுகிறார். மேலும் பிரம்மாவிலிருந்து தோன்றியவராகவும், புயல்களின் கடவுளான மருத்துக்களின் தந்தையாகவும் அறியப்பெறுகிறார். அக்னி தேவன், வாயு தேவன், இந்திரன், பிரசாபதி போன்ற வேதக்கடவுள்களே, பிற்காலத்தில் சிவனாக வளர்ந்ததாகச் சொல்லப்படுகின்றது.

சைவசித்தாந்தம் சிவன் பற்றி என்ன கூறுகின்றது.

சிவனை சிவம் என்றும், சிவப்பரம்பொருள் என்றும் சைவர்கள் அழைக்கின்றார்கள். சிவன் முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து நின்று ஐந்தொழில்களையும் செய்து, ஆன்மாக்களின் மூன்று மலங்களை (ஆணவம்,கன்மம்,மாயையும்) போக்கி வீடுபேறு அருளுகிறார். தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கைய உணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே கட்டுகளின் (பாசங்களின்) நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பி லின்பமுடைமை என எட்டுவகை குணங்களையும் சிவன் கொண்டுள்ளார். என்றும் உள்ளவர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் அறிபவர்; எல்லாம் வல்லவர்; தூயவர்; அழிவிலா இன்பம் உடையவர்; பிறர்க்கு ஆட்படாதவர் என்றெல்லாம் சித்தாந்தம் சிவனை வரையறுக்கின்றது.

நடராச உருவத்தில் அவர் ஐந்தொழில் ஆற்றுவது, குறியீட்டு ரீதியில் பின்வருமாறு விளக்கப்படுவதுண்டு

  1. ஒரு வலக்கையிலுள்ள உடுக்கை படைக்கும் ஆற்றலைக் குறிக்கும் (கீழிருக்கும் தாமரையும் பிறப்பிற்கு வழிவகுக்குமென கூறுவர்)
  2. ஒரு இடக்கையிலுள்ள நெருப்பு அழிக்கும் ஆற்றலைக் குறிக்கும்
  3. இன்னொரு வலக்கையின் உட்புறத்தை காட்டுவது அருளும் ஆற்றலைக் குறிக்கும்
  4. இன்னொரு இடக்கை துதிக்கை போல் உட்புறத்தினை மறைத்தவாறு இருப்பது மறைக்கும் ஆற்றலைக் குறிக்கும்
  5. தூக்கிய பாதமும் ஆணவத்தை மிதித்தாடும் இன்னொரு பாதமும் மனமாயை உட்பட தீய சக்திகளிலிருந்து காக்கும் ஆற்றலைக் குறிக்கும்.



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments