இயற்கையை வழிபடும் வழக்கங்களில் தைந்நீராடல்

 

சங்ககால நீர் விளையாட்டுகளில் ஒன்று தைந்நீராடல்

தைந்நீராடல்

இயற்கையை வழிபடும் வழக்கம் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தொடங்கி இன்றளவும் நிலவுகிறது. உண்பது, உறங்குவது என்று வாழாமல் தான் சார்ந்திருந்த இயற்கையையும் அதன் மாற்றங்களையும் உற்றுநோக்கி அதனால் ஏற்படும் நன்மை தீமைகளை உணர்ந்தவராக பழந்தமிழர்கள் இருந்தனர். இயற்கையிடம் இருந்து நன்மையைப் பெறுவதை மட்டும் விரும்பிய அவர்கள், அதற்காக சில பழக்கவழக்கங்களையும் வழிபாட்டுமுறைகளையும் சடங்குமுறைகளையும் உருவாக்கினர். அவை இன்றளவும் சில மாற்றங்களுடன் மக்களால் பின்பற்றப்படுகிறது. அந்தவகையில் பழந்தமிழர் மேற்கொண்ட தைந்நீராடல் நோன்பை அய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

           பழந்தமிழர்கள் விழாக்களையும் முக்கிய நிகழ்வுகளையும் வளர்பிறை மற்றும் மதிநிறைந்த நாளில் நிகழ்த்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இன்றும் இந்து சமயத்தினரிடம் இவ்வழக்கம் இருப்பதை காணலாம். அதுபோல தைந்நீராடல் நோன்பினையும் மார்கழி மாத முழுநிலவு நாளான திருவாதிரை நாளில் தொடங்கி தை மாதம் முழுநிலவு நாளான தைப்பூச நாளில் நிறைவு செய்தனர். இவ்வழக்கம் பிற்காலத்தில் மாறி மார்கழி முதல் நாள் தொடங்கி தை மாதம் முதல்நாள் நிறைவடைவதாக மாற்றம் பெற்று தைப்பொங்கல் விழாவாக கொண்டாடப்படுகிறது.

சங்க இலக்கியத்தில் தைந்நீராடல்

     பிறை நிலவை வழிபடும் வழக்கம் (குறுந்.178,307, அகநா.239, புறநா.1, மதுரைக்காஞ்சி.193-194) முழு நிலவை வழிபடும் வழக்கம் (புறம்.60) நீர்நிலையை வழிபடும் வழக்கம்(அகநா.240)  முழுநிலவு நாளில் மகளிர் கடல் தெய்வத்தை வணங்கும் வழக்கம்(அகநா.201) முதலிய வழக்கங்களைப் பாடல்களில் காணமுடிகிறது. தைந்நீராடல் என்பது இவை அனைத்தும் சேர்ந்த ஒன்றாக திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.   தை மாதம் குளிர்ந்திருக்கும் நீர் நிலை பற்றிய குறிப்பை புறநானூறு(70) குறுந்தொகை(196) பாடல்கள் தருகின்றன. தை மாதம் குளிர்ந்திருக்கும் நீர் நிலை நிறைந்த வளத்தைத் தரும் அதுபோல அள்ள அள்ள குறையாத அன்னம் நிறைந்த நகர், 

" தைஇத் திங்கள் தண்கயம் போல கொளக்கொளக் குறையாக் கூழுடை வியனகர்"(புறநா.70:6-7)

 என கிள்ளி வளவனை புகழும் பாடல் வழி தை மாதம் வருட விளைச்சலை பெறும் மாதமாக இருந்தது மட்டுமல்லாது அம்மாதம் மழை குறைந்து நீர்நிலை தெளிவாக இருந்ததால் அதிலிருந்து மக்களுக்கு தேவையான மீன் முதலான பொருள்கள் நிறைந்திருக்கும் என்பதையும் ஊகித்து உணர முடிகிறது.  

" பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர் தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" (குறுந்.196:4-5)

 எனும் அடிகள் தைமாத நீர்நிலையில் கிடைக்கும் நீரை உயர்ந்ததாகவும் சிறப்பாகவும் மக்கள் கருதியமையை வெளிப்படுத்துகிறது.

      ஆவணி மாதம் தொடங்கி கார்த்திகை மாதம் மழைக்காலம் முடியும். அதன் பின்னர் மார்கழி மாதம் முதல் பங்குனி மாதம் வரை நீட்டிக்கும் காலம் பனிக்காலம் என தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.         பனிக்காலத்தின் தொடக்கத்தைத் தவத்திற்குரிய நாளாகக் கருதியதை, " தவத் தைந்நீராடுதல்",  " தையில் நீராடிய தவம்"  என்ற இலக்கிய தொடர்களால் அறியலாம். கலித்தொகையில் இளவேனிற் காலத்தை, 

" அருந்தவம் ஆற்றியார் நுகர்ச்சிபோல் அணிகொள 

விரிந்து ஆனாச்சினை தொறூஉம் வேண்டும் தாது அமர்ந்து ஆடி

புரிந்து ஆர்க்கும் வண்டொடு புலம்பு தீர்ந்து எவ்வாயும் 

இருந்தும்பி இறைகொள எதிரிய வேனிலான்" (கலி.29:1-4)

 என்ற பாடலடிகளில் இளவேனில் காலத்தைக் காட்சிப்படுத்துகிறது. தவம் ஆற்றியோர் பெறும் இன்பநுகர்ச்சி போல எனக் கூறும் உவமை அதற்கு முந்தைய பனிக்காலத் தவத்தைச் சுட்டுவதாய் அமைகிறது எனலாம்.

           பனிக்கால தொடக்கமான தைந்நீராடல் பற்றிய குறிப்புகள் ஐங்குறுநூறு(84), நற்றிணை(22 80), கலித்தொகை(59), அகநானூறு(269), பரிபாடல்(11) போன்ற சங்க இலக்கிய  பாடல்களில் காணப்படுகிறது. 

" நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்

  தைஇத் தண்கயம் போலப்

பலர்படிந் துண்ணும் நின்பரத்தை மார்பே" (ஐங்கு.84)

தலைவனின் பரத்தமை ஒழுக்கத்தைச் சூட்டும் பாடலடிகள் மகளிர் கூட்டமாக சென்று தைந்நீராடுவதை வெளிப்படுத்துகிறது.

 "வையெயிற்றவர் நாப்பண் வகையணிப் பொலிந்து நீ

தையில் நீராடிய தவந்தலைப் படுவையே" (கலித்.59:12-13)

 சிறுசோறு சமைத்து விளையாடும் தலைவியைக் கண்டு ஒருதலையாகக் காதல் கொண்ட தலைவன் நல்ல கணவன் வேண்டும் என தோழியருடன் தைந்நீராடல் நிகழ்த்துவதன்  பயனை பெற வேண்டுமாயின் தன் காதலை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறுவதாக அமைந்த குறிஞ்சிக்கலி பாடல் தைந்நீராடலின் நோக்கத்தை குறிப்பிடுத்துகிறது. பூதன்தேவனாரின் நற்றிணைப் பாடல் காதலர் அளித்த கையுறையாகிய ஆகிய தழையாடையைப் பெற்று விடியற்காலையில் தைந்நீராடல் நிகழ்த்தியதைக் காட்டுகிறது.

" பெரும்புலர் விடியலின் விரும்பிப் போத்தந்து 

தழையும் தாரும் தந்தனன் இவன் என

 இழைஅணி ஆயமொடு தகுநாள் நடைஇ

 தைஇத்திங்கள் தண்கயம் படியும் 

பெருந்தோட் குறுமகள்" (நற்.80)

தை திங்கள் எஞ்சி நிற்கும் குளிர்ந்த பெயலின் கடைநாளில் பொற்காசுகளை இடையில் அணிந்த பெண்கள், ஊதுகொம்பின் இசையுடன் தங்களின் வண்டல் விளையாட்டிற்குரிய பாவையை நீர் உண்ணும் துறையில் கொண்டுவந்து வைத்து அதனை புனைந்து போற்றி குரவையாடுவர் என்ற குறிப்பு தைந்நீராடலின் போது பாவை செய்து வழிபட்டதைக் காட்டுகிறது.

" தைஇ நின்ற தண்பெயல் கடைநாள் பொலங்காசு நிறைந்த கோடுஏந்து அல்குல் 

நலம்கேழ் மாஅக்குரல் குறையோடு துயல்வரப்

பாடுஊர்பு எழுதரும் பகுவாய் மண்டிலத்து

வயிர்இடைப் பட்ட தெள்விளி இயம்பு

வண்டற் பாவை உண்துறைத் தழீஇத்

திருநுதல் மகளிர் குரவை அயரும்" (அகநா.269)

 பரிபாடலில் வையை பற்றிய பதினோராவது பாடல் தைந்நீராடல் நோன்பினை விளக்கமாக எடுத்துரைக்கிறது.

" கனைக்கும் அதிர்குரல் கார்வானம் நீங்க 

பனிப்படு பைதல் விதலைப் பருவத்து

ஞாயிறு காயா நளிமாரிப் பின் குளத்து 

மாஇருந் திங்கள் மறுநிறை ஆதிரை வரிநூல் அந்தணர் விழவு தொடங்க" (பரி.74-78)

வானத்தில் மேகங்கள் இல்லாததால் இடி ஒலி இல்லை. அத்தகைய மழை நீங்கிய மார்கழி மாதக் காலைப்பொழுதில் கதிரவனின் வெப்பமில்லாததால், உடலை நடுங்கச் செய்யும் பனி மிகுந்திருக்கும். அந்த மாதத்தின்  முழுநிலவு நாளாகிய திருவாதிரை நாளில் ஆதிரை தெய்வமாகிய சிவபெருமானுக்கு விழா எடுப்பர். அவ்விழாவினை ஆகமங்களை உணர்ந்த அந்தணர், வேள்வி தீயில் அவிபொருளை இட்டு வழிபாடு செய்து நிகழ்த்துவர். அத்தகைய நாளில் அழகிய வளையல் அணிந்த கன்னிப்பெண்களுக்கு முதுபெண்டிர் வழிகாட்ட வையையில் தைந்நீராடலை நிகழ்த்துவர்.  அப்பொழுது வையை கார்பருவ நீர் போல கலங்கிய நீரைத் தராமல் நீராடுவதற்கு ஏற்ற தெளிவான நீரைத் (தைந்நீரைத்) தந்தமைக்கு வாழ்த்தினர்.  அம் - அழகிய, பா -பாடல் ஆடல் -நீராடல் அதாவது நீராடும்போது அழகிய பாடல்களால் நீர் நிலையாகிய இயற்கையைக் கடவுளை வாழ்த்தி பாடி நீராடுதலால் இதை அம்பா ஆடல் என்றும் கூறினர்.

" அம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர் முனித்துறை முதல்வியர் முறைமை காட்ட 

பனிப்புலர்வு ஆடி பருமணல் அருவியின் ஊதை ஊர்தர உறைசிறை வேதியர் நெறிநிமிர் நுடங்கு அழல்பேணிய சிறப்பின்

தையல் மகளிர் ஈர்அணி புலர்தர

 வையை நினக்கு மடை பொய்த்தன்று" (பரி.81-87)

தைந்நீராடலை நிகழ்த்தும் பெண்கள்,  தாம் விரும்பும் காதலர் தம்மை தழுவிய கைகளை விலக்கிக் கொள்ளாமல் தம்மை எப்பொழுதும் தழுவி நிற்கும் பேற்றினை நல்க வேண்டும் என்றனர். சிலர் தம்மால் விரும்பப்படும் தலைவர் மலருக்கு மலர் தாவும் வண்டு போல் இல்லாமல் தம்மை மட்டும் விரும்புபவராக தம்மை நீங்காமல் இருக்க வேண்டினர். சிலர் தம் காதலரும் தாமும் கிழவர் கிழவியர் வருகிறது என்று உலகத்தாரால் கூறப்படாமல் தங்களை இளமைப் பருவத்திலேயே நிலைத்திருக்கும் படி செய்ய வேண்டினர். இவ்விதம் மகளிர் பலரும் பலவாறு வேண்டி நின்றனர்.

" கழுத்தமை கைவாங்கக் காதலர் புல்ல விழுத்தகை பெறுகென வேண்டுதும் என்மாரும் 

பூவிழ் அரியிற் புலம்பப் போகாது ஏமாறும் கிழவர் என்னாதேழ் காறும்

 மழவீன்று மல்லற்கேள் மன்னுக என்மாரும்" (பரி.11:116-121)

 புலன்களை அடக்கி தைந்நீராடல் நிகழ்த்தும் பெண்கள், தன் தாய்மார்கள் பக்கத்தில் நின்று வழிகாட்ட அந்தணர் உண்டாக்கிய நெருப்பில் முன் நின்றதை நெருப்பில் தவம் செய்ததாகவும் வையையில் நீராடியதை நீரில் நின்று தவம் செய்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. 

"தீஎரிப் பாலும் செறிதவம் முன்பற்றியோ தாய் அருகா நின்று தவத் தைந்நீராடுதல் நீ உரைத்தி வையை நதி" (11:90-92)

 மேலும் தைந்நீராடல் பற்றிய குறிப்பைத் தரும் இப்பாடலை புலவர் இறுதியாக, முன் செய்த தவத்தால் தைந்நீராடல் தவத்தினை வையையில் நிகழ்த்தும் பேற்றினைப் பெற்றதாகவும் மறுபிறவியிலும் இத்தைந்நீராடல் பேற்றை அடையவேண்டும் என வேண்டியதாகக் கூறி நிறைவு செய்கிறார்.

" முன்முறை செய்தவத்தின் இம்முறை இயைந்தேம்

 மறுமுறை அமையத்தும் இயைக

 நறுநீர் வையை நயத்தகு நிறையே" (பரி.11:138-140)

 தையூணிருக்கை

            தைந்நீராடல் நோன்பு நிறைவடைந்த பின் தையூணிருக்கை செய்தமை பற்றிய குறிப்பு நற்றிணையில் உள்ளது. தலைவன் தலைவியை மணம் செய்ய வருவதை தோழி கூறுமிடத்து தலைவன் நாட்டின் வளத்தைக் குரங்கின் செயல் மூலம் குறிப்பிடுகிறாள். அதில் 'தையூணிருக்கை' பற்றிய குறிப்பு வருகிறது.  மழை பெய்ததால் குரங்கின் புறபகுதி முழுவதும் நனைந்திருந்தது. அக்குரங்கு மலையில் விளைந்த தினையைக் கையால் கசக்கி உண்ணும் காட்சி தைத்திங்களில் நீராடி நோன்பு இருந்தவர். நோன்பு நிறைவடைந்த பின் உண்ணும் தையூணிருக்கை போன்று இருந்ததாக கூறப்படுகிறது.

" வான்வயல் நனைந்த புறத்த நோன்பியர் 

தையூ ணிருக்கையில் தோன்றும் நாடன்"(நற்.22:6-7)

 தைந்நீராடல் முடிந்த பின் தையூணிருக்கை உண்ணும் வழக்கம் இருந்ததை இப்பாடலால் அறியமுடிகிறது. ஓராண்டில் கிடைத்த விளைபொருளின் சிறுபகுதியை கடவுளுக்காக ஒதுக்கிவைக்கும் பழக்கம் இருந்தமையை, 

" புனவன் துடவை பொன்போற் சிறுதினைக்

 கடிண கடவுட்கிட்ட செழுங்குரல்

அறியா துண்ட மஞ்ஞை ஆடுமகள்

வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும்" (குறுந்.105:1-4)

 என்ற பாடலில் வரும் "கடியுண் கடவுட்கிட்ட" என்ற தொடர் வெளிப்படுத்துகிறது. மேலும், ஓராண்டின் விளைபொருளை பலரோடு பகிர்ந்து உண்ணும் வழக்கம்  இருந்தது. அவ்வாறு உண்பதற்கு நன்னாள் பார்த்தனர். அந்நிகழ்வை 'புதிதுண்ணல்' என குறிப்பிட்டனர்.

" முந்துவிளை யாணர் நாட்புதி துண்மார்

....................

 செழுங்கோல் வாழை யகலிலைப் பகுக்கும்

 ஊராக் குதிரைக் கிழவ" (புறநா.169)

 பானையில் பாலை உலைநீராக ஊற்றி செய்யப்பட்ட தினைச்சோற்றை வாழையிலையில் வைத்து பலருடன் உண்பர் என குதிரைமலை தலைவனை புகழும் பாடல், 'புதிதுண்ணல்' நடைமுறையைத் தெளிவாக விளக்குகிறது.

    பாலை உலைநீராகப் பயன்படுத்துதல் எல்லா நாளும் செய்யப்படவில்லை.  புதிதுண்ணலின் போது மட்டும் நிகழ்ந்தது. அந்தந்த நிலத்தின் விளைபொருளுக்கேற்ப புதிதுண்ணல் தினை, நெல்லரிசி என உணவில் மாற்றம் இருந்தது. ஆனால் இவ்வழக்கம் தமிழரிடம் இருந்தது. தினை மற்றும் நெல்லை விதைப்பதற்கும், புதிய விளைச்சலை உண்பதற்கும் நன்னாள் பார்க்கப்பட்டது. அந்நன்னாள் வருட விளைச்சலைப் பெறும், தை மாத முழுநிலவுநாளான தைப்பூசநாளாக இருந்திருக்கலாம்.  தைநீராடல் நோன்பு நிறைவடையும் இந்நாளில் நிகழும் 'புதிதுண்ணல்' தையூணிருக்கை என்றும் குறிப்பிடப்பட்டது எனலாம்.

 பக்தி இலக்கிய காலத்தில் தைந்நீராடல்

    சங்ககாலத்திற்குப் பின் களப்பிரர், பல்லவர் என தமிழக ஆட்சிமுறையில் மாற்றம் நிகழ்ந்து. சமண, பௌத்த சமயங்கள் உள்ளே வந்தது. தமிழர்களின் இயற்கை வழிபாட்டு முறையும் அது சார்ந்த நிகழ்வுகளும் மறக்கப்பட்டன. அது மீண்டும் பக்திஇலக்கிய காலத்தில் மறுவடிவம் பெற்று உருவாகத் தொடங்கின. அந்தவகையில் இயற்கை வழிபாடானது தைந்நீராடல் வழக்கத்தை சைவ, வைணவ சமயத்தவர் மீண்டும் கொண்டு வந்தனர்.

 " மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளாம்" (திருப்பாவை-1)

என மார்கழி மாத முழுநிலவு நாளில் நோன்பு தொடங்கபடுவதைக் காணமுடிகிறது.

" நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி 

    மையிட் டெழுதோம் மலரிட்டு நாம்முடி யோம் 

செய்யா தனசெய்யோம் தீக்குறளை சென்றோதோம்" (திருப்பாவை-2)

என தைந்நீராடல் நோன்பு கடைப்பிடிக்கும் முறை  கூறப்படுகிறது.

" ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால் 

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து 

ஓங்குபெருஞ் செந்நெல்லூடு கயலுகள்" (திருப்பாவை-3)

என நாடு வளம் அடைய நோன்பு இருப்பதும், மழை வேண்டி நோன்பு இருப்பதும்  (திருப்பாவை-4) தெளிவுபடுத்தப்படுகிறது.

 திருவெம்பாவையில் தைந்நீராடல் நோன்பிருக்கும் பெண்கள் சிவனடியாரை கணவனாக பெற விரும்புவதாகக் குறிப்பிடப்படுகிறது.

"உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம் 

உன்னடியார் தாள்பணிவோம்   ஆங்கவர்க்கே பாங்காவோம் 

அன்னரே எம்கணவ ராவார் அவருகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்" (திருவெம்பாவை-9)

" பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம் 

ஆடையுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு 

மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்

கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்" (திருப்பாவை-27)

நோன்பை நிறைவு செய்தபின் கூடி உணவு உண்ணும் வழக்கம் குறிப்பிடப்பெறுகிறது. ஞானசம்பந்தர் திருமயிலை பதிகத்தில்,

"நெய் பூசும் ஒண்புழுக்கல்

 நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்" என குறிப்பிடுகிறார். தைப்பூசநாளில்,  ஒண்புழுக்கல்  மூடநெய் பெய்த பால்சோற்றைப் பெண்கள் கூடி உண்டு தைந்நீராடல் நோன்பை நிறைவு செய்தமைக்கான குறிப்புள்ளது.

" இற்றைப் பறைகொள்வா னன்றுகாண் கோவிந்தா 

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு 

உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம் 

மற்றைநங் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்" (திருப்பாவை-29)

தைந்நீராடல் நோன்பிருக்கும் பெண்கள், 'இப்பிறவி மட்டுமல்லாது ஏழேழ் பிறவிக்கும் இறைவனாகிய உனக்கே நாங்கள் உறவானோம். உன் நாமத்தினைப் பாடித் தொழுவதற்கே பிறவிகள் எடுப்போம். நற்சிந்தனை தவிர்த்த பிற சிந்தனைகளை மாற்றி நல்வழிபடுத்துவதல் இறைவனாகிய உன்கடன்' என வேண்டுவதாக  திருப்பாவை நிறைவடைகிறது.

நிறைவாக...

*தைந்நீராடல் பழக்கத்தை ஐங்குறுநூற்றிலும் அது செய்யப்படுவதற்கான நோக்கத்தை கலித்தொகையிலும் காணமுடிகிறது. மணமாகாத பெண்கள் நோன்பை மேற்கொள்வர் என்பதை நற்றிணையும், அதன் பயனாக நல்ல கணவரை பெறுவர் என்ற நம்பிக்கையை கலித்தொகையும், பாவை செய்து வழிபட்டு நோன்பை குரவைக்கூத்து ஆடி நிறைவு செய்வதை அகநானூறும் காட்டுகிறது.அனைவரும் கூடி தையூணிருக்கை எனும் புதிதுண்ணும் பழக்கத்துடன் தைந்நீராடல் நோன்பை நிறைவு செய்வதை நற்றிணையிலும் காணமுடிகின்றது.

* பரிபாடலில் நல்லந்துவனார் பாடிய பதினோராவது பாடல் தைந்நீராடல் நோன்பு தொடங்கும் நாளையும் நோன்பிருக்கும் பெண்கள் புலன் அடக்கத்துடன் வழிபாடு நடத்தி தங்களின் விருப்பத்தை நீர்நிலை தெய்வத்திடம் வேண்டுதலையும் விரிவாக எடுத்துரைக்கிறது

* தைத்திங்களில் பழந்தமிழர்கள் பின்பற்றிய தைந்நீராடல் பற்றிய குறிப்புகளையும் சங்கப்பாடல்களில் தருகிறது மழைக்காலம் முடிந்து கதிரவனின் வெப்பத்தை மக்கள் பெறத் தொடங்கும் நாளாகத் தைமாதத்தைக் கருதினர். நிலத்தில் கிடைக்கும் விளைபொருளின் பயனைப்பெறும் நாளாகவும் தைமாதத்தை கருதினர். இக்காலகட்டத்தில் புறவாழ்வில் மட்டுமின்றி அகவாழ்விலும் இன்பத்தை பெற விரும்பினர். எனவே புலனடக்கம் எனும் நோன்பினை கடைப்பிடித்தனர். காதலுணர்வு, கற்பனை, கவித்துவம் போன்றவற்றுடன் தொடர்புடையதாக கருதப்பட்ட நிலவு பெண்ணின் பருவசுழற்சியோடும் தொடர்புடையதாக கருதப்பட்டது. தமிழரின் வாழ்க்கை பெண்ணை முன்னிறுத்தியதாகவே இருந்தது. பெண்ணை வளமையின் அடையாளமாக எண்ணினர். பெண் பின்பற்றும் ஒழுக்கங்கள் சமுதாயத்திற்கு நன்மை விளைவிக்கும். ஆகையால்,  காதலுணர்வை மிகுவிக்கும் மார்கழி மாத முழுநிலவு நாள் தொடங்கி 30 நாட்கள் மேற்கொள்ளும் தைந்நீராடல் நோன்பினால் பெண்களின் பாலியல்நலன்கள் பாதுகாக்கப்படுவதோடு  அதன் விளைவாக இன்பமான வளமான (மகப்பேறு) இல்வாழ்க்கையை பெறுவர் என்பதால் இந்நோன்பு மேற்கொள்ளப்பட்டது எனலாம். இன்றும்  மார்கழி மாதம் அதிகாலையில் நீராடி அரசமரத்தின் கீழ் இருக்கும் விநாயகரை வழிபடுவோருக்கு மகப்பேறு கிட்டும் என்ற நம்பிக்கை உள்ளது. அரசமரம் ஆக்சிஜனை அதிகம் வெளியிடும், அதை சுவாசிக்கும் போது கருப்பையில் இருக்கும் குறைபாடு நீங்கி உடல் ஆரோக்கியம் பெறுவர்.  இத்தன்மை இயல்பாகவே அரசமரத்திற்கு உண்டு என்றாலும் மார்கழி மாதம் அதிகாலை பொழுதில் இவ்வியல்பு மிகுதியாக காணப்படுகிறது என்பதே அறிவியல் உண்மையாகும்.

* அரசியல் மாற்றங்களால் மாறிய சமயத்தை மீட்டெடுத்த பக்தி இலக்கியம் தமிழரின் பழமையான சில வழக்கங்களையும் மீட்டெடுத்தது அதில் ஒன்று தைந்நீராடல். சிவனை வழிபடும் சைவமும் திருமாலை வழிபடும் வைணவமும் பாவை நோன்பு பாடலைத் தந்திருக்கிறது. என்றாலும், ஆண்டாளின் திருப்பாவையே நோன்பிருக்கும் நாள் முதல் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் வரை விளக்கமாக எடுத்துரைக்கிறது.

*திருவெம்பாவையில் சிவனடியாரை கணவராக பெற நோன்பிருத்தல் எனக் கூறுவது, சங்ககாலத்தில்  நல்ல கணவனைப் பெற தைந்நீராடல் மேற்கொள்ளப்பட்ட தோடு தொடர்புடையதாக இருக்கிறது.

* பரிபாடல் கூறுவதுபோல் ஆண்டாளும் மழை வளம் தரும் தைந்நீராடல் நோன்பு என்கிறாள். மேலும் பாலை உலைநீராக வைத்து புதிய தானியத்தை இட்டு சமைத்து அனைவரும் கூடி உண்டமையைப் போல 'மூடநெய் பெய்து முழங்கை வழி வாரக் கூடியிருந்து' என குறிப்பிடுகிறார். தைப்பூச நாளில் நோன்பு நிறைவடையும் குறிப்பை ஞானசம்பந்தரின் திருமயிலைப் பதிகமும் காட்டுகிறது.

* அகநானூறு, "தைஇ நின்ற தண்பெயல் கடைநாள்" என்றும் பரிபாடல், "கனைக்கும் அதில்குரல் கார்வானம் நீங்க" என்றும் குறிப்பிடுவதால் மழை நீங்கிய மார்கழி மாதத்தில் தொடங்கி தைமாதம் வரை நிகழ்த்தப்பட்டவை தெளிவாகிறது. ஆனால், இது மார்கழி நீராடல் ஆகி  தை முதல் நாளில் நிறைவடையும் வழக்கம் எப்போது உருவானது என்பதை என்பதற்கான குறிப்புகள் கிடைத்தில.

.*தைந்நீராடலின் பாவை செய்து அதற்கு வழிபாடு நடத்தும் வழக்கம் சங்ககாலத்தில் இருந்தது. பக்திஇலக்கிய காலத்திலும் பாவை செய்து அதை இறைவனாக வணங்கும் வழக்கம் இருந்தது. பாவைப் பாடல்கள் தைந்நீராடலில் பாடப்பெற்றதால் பக்திஇலக்கியம் இதைப் 'பாவை நோன்பு' என குறிப்பிடுவதையும் காணமுடிகிறது.

*இலக்கியப் பதிவுகளை தொகுத்துப் பார்த்தால் இந்நோன்பு மார்கழி மாத முழுநிலவு நாளில் தொடங்கி இருபத்திஒன்பது நாள் கடைப்பிடிக்கப்பெற்று முப்பதாவது நாளான (தைமாத முழுநிலவு நாளான) தைப்பூச நாளில் நீராடி புதிதுண்ணும் வழக்கத்துடன் நிறைவடைந்திருக்க வேண்டும் என தெரியவருகிறது. புதியதை சமைக்கும்போது பாலை உலைநீராக பயன்படுத்துவதால் அது பொங்கி வரும். ஆகையால் அவ்வுணவிற்கு, 'பொங்கல்' எனப் பெயரிட்டிருக்கலாம். தைமாதம் சமைக்கப்படுவதால், 'தைப்பொங்கல்' கொண்டாடும் வழக்கம்  உருவாகியிருக்கலாம்.

நன்றி - முனைவர் கு.சக்திலீலா



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments