அங்கிகளின் பாகுபாடு - விஞ்ஞானம் உயிரியல் (Discrimination of robes -Science Biology)

Discrimination of robes -Science Biology

அங்கிகளின் பாகுபாடும் பெயரீடும்

புவிமீது அங்கிகளின் தோற்றம் அன்னளவாக 3.6 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாகக் கருதப்படுகின்றது. ஆரம்பத்தில் எளிய உடலமைப்புடைய தனிக்கல அங்கிகள் தோன்றி பின்னர் படிப்படியாக கூர்ப்படைந்து சிக்கலான பல்கல அங்கிகள் உருவாகின என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும். தற்காலத்தில் புவிமீது சுமார் 8.7 மில்லியன் அங்கியினங்கள் வாழ்வதாகக் கருதப்படுகின்றது. இவ்வங்கிகளிடையே மிகப் பரந்துபட்ட பல்வகைமை காணப்படுகின்றது. இவற்றை யாதேனுமொரு முறையின் கீழ் வகைப்படுத்தலுக்குட்படுத்துவதன் மூலம் கற்றல் இலகுவானதாக அமைவதோடு அங்கிகள் தொடர்பான பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துவதும் இலகுவானதாய் அமையும்.

வெவ்வேறு இயல்புகளை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு\முறைகளில் அங்கிகளை வகைப்படுத்த முடியும் என விளங்கிக் கொண்டிருப்பீர்கள்.

பொது இயல்புகளுக்கு ஏற்ப அங்கிகளை கூட்டங்களாக வகைப்படுத்தல் அங்கிகளின் பாகுபாடு என அழைக்கப்படும். 


அங்கிகளைப் பாகுபடுத்துவதன் முக்கியத்துவங்கள்

அங்கிகளைப் பாகுபடுத்துவதன் மூலம் பல்வேறு அனுகூலங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் அவ்வாறான அனுகூலங்கள் யாவையெனத் தேடியறிவோம். 

அங்கிகள் தொடர்பான கற்றல் இலகுவாதல்,

பெயரிடப்பட்ட அங்கியொன்றின் சிறப்பியல்புகளை இலகுவாதல், இனங்காண்பது

சகல அங்கிகள் தொடர்பாகவும் கற்றலை விடுத்து தெரிவு செய்யப்பட்ட சில அங்கிகள் பற்றி மாத்திரம் கற்பதன் மூலம் முழு உயிருலகம் பற்றியதுமான அறிவைப் பெற்றுக்கொள்ளல். 

பிற அங்கிக் கூட்டங்களிடையேயான தொடர்புகளை வெளிப்படுத்த முடிவுகளை கூறக்கூடியதாயிருத்தல்.

மனிதனுக்கு பொருளாதார ரீதியான முக்கியத்துவமுடைய அங்கிகளை இனங்காணக்கூடியதாயிருத்தல்,

அங்கிகளைப் பாகுபடுத்தும் முறைமைகள்

கி.மு. 4 ம் நூற்றாண்டளவில் அரிஸ்டோட்டல் என்பவரால் முதன்முறையாக அங்கிகள் தொடர்பான விஞ்ஞான ரீதியான பாகுபாடு முன்வைக்கப்பட்டது. கி.பி. 18 ம் நூற்றாண்டில் கரோலஸ் லீனியஸ் (Carolus linnaeus) என்பவரால் வெற்றிகரமான பாகுபாட்டு முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

மனிதன் உள்ளிட்ட புவிவாழ் சகல அங்கிகளினதும் பாகுபாடு பிரதானமாக இரண்டு விதங்களில் மேற்கொள்ளப்படும். அவையாவன,

1. செயற்கைமுறைப் பாகுபாடு (Anificial classification) 

2. இயற்கைமுறைப் பாகுபாடு (Natural classification)


1. செயற்கை முறைப் பாகுபாடு

செயற்கை முறைப் பாகுபாட்டின் போது அங்கிகளின் புறத்தோற்ற (உருவவியல்) இயல்புகள் வாழிடம் போன்றன கருத்திற் கொள்ளப்படுவதோடு கூர்ப்புரீதியான தொடர்புகள் வெளிக்காட்டப்படுவதில்லை. செயற்கை முறைப் பாகுபாட்டிற்கான உதாரணங்கள் சில பின்வருமாறு,

தாவரங்கள் - அலங்காரத் தாவரங்கள், மூலிகைத் தாவரங்கள், நச்சுத் தன்மை கொண்ட தாவரங்கள்.

விலங்குகள் - சிறகுள்ளவை, சிறகற்றவை

இவ்வாறு செயற்கை முறைப் பாகுபாட்டில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன.
உதாரணமாக சிறகுகளைக் கொண்ட அங்கிகள் எனும் நியதியின் கீழ் பறவைகள், பூச்சி கள் இரண்டும் உள்ளடங்கும். ஆனால் கூர்ப்புரீதியான தொடர்பை கருத்திற் கொண்டால் பறவைகளும் பூச்சிகளும் தனித்தனி கூட்டங்களில் உள்ளடக்கப்படுகின்றது.

2. இயற்கை முறைப் பாகுபாடு

அங்கிகளின் கூர்ப்புரீதியான தொடர்புகள் வெளிக்காட்டப்படும் வகையில் அவற்றைப் பாகுபடுத்தல் இயற்கை முறைப் பாகுபாடு எனப்படும். இயற்கை முறைப் பாகுபாட்டில் அங்கிகளின் உருவவியல், உடற்றொழிலியல், குழியவியல் மூலக்கூற்று உயிரியல் ஆகிய இயல்புகள் போன்றன கருத்திற் கொள்ளப்படும். இயற்கை முறைப் பாகுபாட்டில் பின்வரும் இயல்புகள் காணப்படுகின்றன.

ஒரே இனத்தைச் சேர்ந்த அங்கிகளிடையேயான இயற்கையான தொடர்பு வெளிப்படுத்தப்படும்.

வெவ்வேறு அங்கிகளிடையேயான கூர்ப்புரீதியான தொடர்புகளை விளக்கும்.




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments