அடுப்பூத வந்தவள் அல்ல
அரசாளப் பிறந்தவள்
தலைகுனிந்து நிற்பவள் அல்ல
தலைமை தாங்க இருப்பவள்
ஒரு கை ஓசை அல்ல
ஒடுங்கி கொள்ள
பிரபஞ்ச பாறையில்
ஓங்கிஒலிக்கும் ஆழிப்பேரிரைச்சல்
விதைகளின் நகல்களை
தருகின்றது மண்
மனிதனின் நகல்களை
கொடுப்பவள் பெண்
அவள் கண்ணீரால் பிறந்தன
காவியமும் காப்பியமும்
அவள் பெற்ற இன்னல்களே
இதிகாசங்கள் புராணங்கள்
பெண் இல்லாமல்
சரித்திரங்கள் இல்லை
அந்த சரித்திரங்களை
எழுதியவனும் இல்லை
அதர்மம் அழிக்க
வந்த திரௌபதி அவள்
போர் தர்மம் துளிர்க்க
வைத்த ஒளவையும் அவள்
வென்ற மகனை
போற்றுவது தாய்மனம்
தோற்ற மகனை
தேற்றுவது தாய்மடி
ஒருவன் வெற்றியில் தெரிவது
மரமாய் நிற்கும் ஆண்
பின்னால் இருப்பது
வேராய் இருக்கும் பெண்
இல்லாதது போல்
உன் வீட்டில் இருப்பாள்
உன் துன்பத்தில்
யாதுமாகி நிற்பாள்
மதித்தால் சாதாரண மனிதனை
சாதனையாளன் ஆக்குவாள்
அவமதித்தால் சாதனையாளனை
சாதாரண மனிதனாக்குவாள்
பெண்ணின் வாளில்
வைரங்கள் அறுந்து போகும்
பெண் நினைத்தால்
வல்லரசுகள் சாம்பலாகும்
புரியாமல் இருக்கையில்
அவள் ஒரு சிறுகுளம்
புரிந்துகொள்ள நினைக்கையில்
அவள் ஒரு பெருங்கடல்
பெண் இல்லாமல்
எவனும் இல்லை
ஏன் அந்த
சிவனும் இல்லை
பெண் என்பவள்
பெண் மட்டும் அல்ல
பூமியில் தோன்றிய
ஆகப்பெரும் சக்தி
நன்றி - Levankumar L
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments