மழை பெய்து ஓய்ந்திருந்த நேரம்.
ஜன்னலோர மேஜையில்
கண்ணாடிக் குவளையில்
கச்சிதமாய் சிறைப்பிடித்திருந்தேன்
அந்தத் தேநீரை!
பக்கத்திலிருந்த ஒருவரின் செல்போன்
செல்லமாய் சிணுங்கவே
மெல்லமாய் என் முன் அமர்ந்தாய்
அழகான புன்னகையுடன்..
நான்
திகைப்பிலிருந்து மீள்வதற்குள்
திடமாய் என்னைக் கேட்டாய்
எப்படியிருக்கிறாய்? என்று..
சரியாக மூடாத குழாய் போல
சொட்டு சொட்டாக
நான் பதில்தரவே,
கேலியும் செய்தாய்
"நீ இன்னும் அப்புடியே தான் இருக்க"
முதல் முறை சந்திப்பில்
சரியாய் வாராத என் தலையும்,
ஒடுக்கு விழுந்த முகமும்
இன்னமும் ஞாபகம் இருப்பதாகவும்,
காணாமல் போன உன்
கைக்குட்டையை கல்லூரியில்
கண்டுபிடித்துத் தந்ததையும்,
நூலக புத்தகங்களை
உனக்கு திருடிக் கொடுத்ததையும்,
நீல நிற சுடிதாரில்
நீ அழகாய் இருப்பதாக
அடிக்கடி நான் சொன்னதையும்,
கல்லூரி இறுதி நாளில்
கையசைத்துச் சென்றதையும்
ஞாபகம் சொன்ன நீ,
கடைசியில் அதையும் சொன்னாய்..
"இன்னும் இரண்டு
மாதத்தில் கல்யாணம்,
பத்திரிக்கையோடு வருகிறேன்"
வருவதாக சொல்லிவிட்டு
நீ சென்ற பின் மீதமிருந்தது
ஒருதலைக் காதலின் ஞாபகமும்,
கொஞ்சம் தேநீரும் மட்டும் தான்!!
நன்றி - வெ. தமிழரசன்
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments