நேர்காணல் / பேட்டிமுறை / செவ்வி காணல் என்றால் என்ன?
ஊடகத்துறையில் செய்தியாளர்களின் பணிகளில் மிகவும் இன்றியமையாததாக விளங்குவது நேர்காணல் முறையாகும். செய்திக்கு மூலமாக இருப்பவரை அல்லது தானே செய்தியாகும் ஒருவரை நேர்காணல் கொள்வது செய்தி திரட்டுவதில் முக்கியமான ஒன்றாகும். ஊடகத்துறையில் செய்தியாளர்களுக்கும் இதழியலாளர்களுக்கும் உற்சாகம் ஊட்டுதல், பலவற்றை அறிந்து கொள்ளும் வழிமுறையாக விளங்குதல், நடப்பு விடயங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளுதல் ஆகிய செயற்பாடுகளில் நேர்காணல் முக்கியத்துவம் பெறுகின்றது. 'நேர்காணல் இல்லையேல் செய்திகள் இல்லை, செய்தி மூலங்களில் முதன்மையானது நேர்காணல்' என்று கூறும் அளவிற்கு நேர்காணலானது இன்று ஊடகத்துறையில் முக்கியத்துவம் பெறுகின்றது.
நேர்காணல் என்பதற்குப் பதிலாகப் பேட்டி எடுத்தல், செவ்வி காணல் ஆகிய சொற்பிரயோகங்களும் பயன்படுத்தப்படுகின்றன. பேட்டி அல்லது நேர்காணல் என்ற தமிழ்ச்சொற்களுக்கு ஆங்கிலத்தில் 'Interview' என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது. ஆனாலும் இதனை ஊடக நேர்காணல், ஊடகச் செவ்வி என்ற பொருளில் 'Journalistic Interview' என்றும் அழைப்பர்.
நேர்காணல் என்பது குறித்த விடயம் தொடர்பாகத் தகவல்களைப் பெறும் நோக்கோடு ஒருவரோடு நேரடியாக அல்லது தொலைபேசி மூலம் அல்லது கடிதம் மூலமாகத் தொடர்பு கொண்டு அந்நபரிடம் விபரங்களைக் கேட்டு அறிவதாகும். பேட்டி என்பதற்கு ஓக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியானது. மனிதர்கள் நேருக்கு நேராகச் சந்தித்தல் அதாவது கூட்டம் நடத்தக் காணுதல், செய்தித்தாளில் பணியாற்றுகின்ற ஒருவரும் அவருக்கு வெளியிடுவதற்காகத் தகவல்களைத் தரும் ஒருவரும் கூடிப்பேசுதல் என்று பொருள் விளக்கம் தருகின்றது.நேர்காணல் (Interview) என்பது கேள்விகள் கேட்டு பதில்களைப் பெறும் ஒரு உரையாடல் ஆகும். எனவே, நேர்காணல் என்பது பொதுவாக கேள்விகள் கேட்கும் ஒருவரும் பதில்கள் தருபவர் ஒருவருமாக ஒன்றுக்கு ஒன்று உரையாடலாகவே இருக்கும்.
நேர்காணல் என்பது செய்திகளையும் தகவல்களையும் சேகரிப்பதற்கு நெகிழ்ச்சியான முறையாக பொதுவாக அமைகின்றது. நேர்காணல் ஒரு என்பது நேர்காணப்படுவோருக்கும் விளம்பரமாக அமைவதனால், பெரும்பாலானவர்கள் நேர்காணல் முறையை விரும்புகின்றனர். ஆனால் ஒரு சிலர் நேர்காணல் தருவதற்குத் (பேட்டி வழங்குவதற்குத்) தயங்குகின்றனர்; அதனைத் தவிர்க்கின்றனர். நேர்காணல் முறையானது வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் நேரலை நிகழ்ச்சியாகவும் (Live Programme). குறிப்பிட்ட களத்தில் அல்லது பிரதேசத்தில் நேரடியாக நடைபெறும் நிகழ்ச்சியாகவும் உள்ளது. அத்தோடு அச்சு ஊடகங்களான பத்திரிகை, சஞ்சிகைகளில் பேட்டிகள் கேள்வி -பதிலாக எழுத்து வடிவில் இடம்பெறுகின்றன.
பொதுவாகப் நேர்காணல் ஒன்றினை நடத்துவதற்கு ஆகக்குறைந்தது இருவர் வேண்டும். நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் நேர்காண்பவர் (பேட்டி எடுப்பவர் / ஊடகவியலாளர்), நேர்காணப்படுபவர் (பேட்டி வழங்குநர்), நேர்காணப்படும் விடயம் (செய்தி / தகவல்) ஆகிய மூன்று அம்சங்கள் உள்ளன.
பேட்டி எடுப்பவர் (ஊடகவியலாளர்) பேட்டி வழங்குநர் ஆகியோர்களை அடிப்படையாகக் கொண்டு பின்வரும் முறைகளில் நேர்காணல்கள் நடத்தப்படுகின்றன.
- ஒருவர் இன்னொரு நபரை நேர்காணுதல்.
- ஒருவர் ஒன்றிற்கு மேற்பட்டவர்களை அல்லது சிலரை நேர்காணுதல்
- ஒருவர் பலரை நேர்காணுதல் செய்தியாளர் ஒருவர் கூட்டமாக இருப்பவர்களிடம் தகவலைக் கேட்டறிதல்.
- பலபேர் ஒருவரை நேர்காணுதல் நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் செய்தியாளர் பலருக்கு வழங்கும் நேர்காணல் முறை. உதாரணமாக, ஊடகக் கலந்துரையாடல்
இருவரோ, சிலரோ. பலரோ ஒன்றுகூடி உரையாடுவது நேர்காணல் முறையாகாது குறித்த விடயம் தொடர்பாகத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்தில் வினாக்கள் கேட்டு, அதற்கேற்றவாறு விடைகள் கிடைக்கும் பொழுதே அது ஒரு நேர்காணல் ஆகின்றது. அதாவது,ஒரு நேர்காணல் என்பது மதிப்புமிக்க தகவல்களைப் பெறுவதற்காக இரு தரப்பினருக்கும் (நேர்காணல் செய்பவர் மற்றும் நேர்காணப்படுபவர்) இடையே இடம்பெறும் உரையாடல் அல்லது கருத்துப் பரிமாற்றம் ஆகும்.
ஒவ்வொரு நேர்காணலும் ஏதாவதொரு நோக்கத்துடன் நடத்தப்படுகின்றது. நோக்கம் இல்லாத நேர்காணல் உரையாடலாகவும் நண்பர்களிற்கிடையே நிகழும் வெறும் அரட்டைப் பேச்சுக்களாகவுமே (Chatting) இருக்கும். அதனால் நேர்காண்பவர் நேர்காணலின் நோக்கம் பற்றித் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். பொதுவாக நேர்காணல் ஒன்றின் நோக்கங்களைப் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.
- நடப்பினை அறிதல் - நடந்து கொண்டிருக்கும் சில நிகழ்ச்சிகளைப் பற்றிய விபரங்களையும் தகவல்களையும் அறிவதற்கு அந்நிகழ்வோடு தொடர்புடையவர்களை நேர்காணுதல்,
- நிகழ்ச்சியின் விபரங்களை வெளிக்கொணரல் எதிர்காலத்தில் நடைபெறப் போகும் குறிப்பிட்டதொரு நிகழ்ச்சி பற்றிய விபரங்களை அறிந்து வெளியிடுவதற்காக நேர்காணல் ஒன்றினை நடத்தலாம். உதாரணமாக, மாநாடு ஒன்று நடைபெறுவதற்கு முன்னால் அம்மாநாட்டின் அமைப்பாளரைக் கண்டு, நிகழ்ச்சியின் விபரங்களைக் கேட்டறிவதற்காக நேர்காணுதல்.
- கண்ணோட்டத்தை வெளிப்படுத்துதல் -குறிப்பிட்டதொரு துறைசார்ந்த தலைவர்கள். சிந்தனையாளர்கள், நிபுணர்கள் போன்றோரின் ஆளுமை, தனித்தன்மை ஆகியவற்றினை வெளிப்படுத்தவோ, அவர்களது கண்ணோட்டத்தை அல்லது கருத்தை வெளிப்படுத்தவோ நேர்காணல் ஒன்றினை நடத்துதல்.
நேர்காணல் நடத்துவதன் மூலம் கிடைக்கப் பெறும் பயன்கள் பின்வருமாறு உள்ளன. Benefits of Conducting Interviews
- தகவல்களைப் பெற்றுக்கொண்டு செய்திகளை உருவாக்குதல்.
- அதிகளவான தகவல்களையும், நடப்பு விடயங்களையும் உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுதல்.
- அரசியல் தலைவர்களுக்கிடையே கட்சிசார்ந்த அல்லது கொள்கை கருத்து வேறுபாடுகளை வெளியே கொண்டுவருதல்,
- குறிப்பிட்டதொரு விடயம் தொடர்பாகப் பொதுமக்களின் கருத்தை உருவாக்கவும். அவர்களின் அபிப்பிராயங்களைக் கண்டறிவதற்கும் உதவுதல்
- அரசினால் வெளியிடப்படும் செயல்திட்டங்களின் விளக்கங்களை அதிகாரபூர்வமாக அறிவதற்கும், எதிர்காலத்தில் இடம்பெறப்போகும் புதிய பல விடயங்களையும் அறிந்து கொள்வதற்கு உதவுதல்.
- கடந்தகால நிகழ்வுகளின் கண்ணோட்டம் விளக்கங்கள் பற்றியும் அறிந்து கொள்ளுதல். பற்றியும் எதிர்கால நிகழ்வுகளின்
- சமூகத்தில் உள்ள தலைவர்கள், நிபுணர்களுடனும் வாசகர்களுக்கும் இடையே ஓர் இணைப்புப் பாலமாகவும் பேட்டிமுறையானது விளங்குதல்.
- நேர்காணல் ஒன்று எழுத்து வடிவம் பெறும்போது சுவையான கட்டுரைகள் கிடைப்பதோடு,பல்வேறுபட்ட உடன்பாடு. எதிர்மறைக் கருத்துக்கள் வெளிவருவதற்குரிய வாய்ப்புகளை உருவாக்குதல்.
நேர்காணல்கள் எப்படி வேண்டுமானாலும் அமையலாம். பல வகையான நேர்காணல்கள் உள்ளன. அவை மேற்கொள்ளப்படும் துறை அல்லது அவை மேற்கொள்ளப்படும் விதம் ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்படலாம். பொதுவாக நேர்காணல்கள் அவை நடத்தப்பெறும் முறையின் அடிப்படையிலும் பயன்படுத்தப்படும் உடகங்களின் அடிப்படையிலும் கீழ்காணும் தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தப்படுகின்றன. அவையாவன:
- தற்செயலான நேர்காணல் -முன்கூட்டியே திட்டமிடாமல், எதிர்பாராமல் செய்தியாளர் ஒருவர் சம்பந்தப்பட்ட நபர்களை நேர்காணும் முறையாகும். உதாரணமாக, தேர்தல் காலங்களில் வாக்காளர்களை நேர்காணுதல்
- ஆளுமை விளக்க நேர்காணல் குறிப்பிட்டதொரு துறையில் சாதனை படைத்த அல்லது நிபுணத்துவம் பெற்ற ஒருவரை அவரின் ஆளுமைத் தன்மையை வெளிக்கொணரும் வகையில் நேர்காணும் முறையாகும். உதாரணமாக, நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரை நேரகாணும் முறை
- செய்தி நேர்காணல் - குறிப்பிட்டதொரு விடயம் தொடர்பாக செய்திகளை அல்லது தகவல்களைப் பெறும் நோக்குடன் ஒருவரை நேர்காணுவதாகும். இதற்காக ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள கேள்விகளைக் கேட்டுத் தகவல்கள் பெறப்படும்.
- செய்திக் கூட்ட நேர்காணல் / ஊடகக் கலந்துரையாடல் செய்தி தருகின்றவர் செய்தியாளர்களை (ஊடகவியலாளர்களை அல்லது செய்தி நிருபர்களை) ஒட்டுமொத்தமாக அழைத்துச் செய்தியை வழங்குவதற்காகக் கூட்டம் ஒன்றினை நடத்துதல்
- தொலைபேசி நேர்காணல் - செய்தியாளர் தனது இடத்திலிருந்து கொண்டு சம்பந்தப்பட்டவரைத் தொலைபேசி வாயிலாக நேர்காணும் முறையாகும். இம்முறை மூலம் செய்திகள் விரைவாகச் சேகரிக்கப்படுவதுடன். நேரமும் மீதப்படுத்தப்படுகின்றது. ஆனால் இது ஒரு மறைமுகமான தொடர்பு என்பதனால் பேசுபவரின் முகபாவனைகளைக் கண்டு கொள்ள முடியாது. அத்துடன் தொலைபேசியில் எல்லோரையும் தொடர்புகொள்ள முடியாத நிலைப்பாடுகளும் உள்ளன. தொலைபேசி நேர்காணலில் நேர்காணல் சுருக்கமாக இருப்பது நல்லது.
- தபால் மூலமான நேர்காணல் கடிதங்கள் வாயிலாக வினாக்கள் அனுப்பப்பட்டுக் கடிதங்கள் மூலமே பதில்களைப் பெற்றுக்கொள்ளும் நேர்காணல்.
- மின்னஞ்சல் நேர்காணல் நவீன ஊடகமான இணையத்தில் மின்னஞ்சல் வழியாக சில குறிப்பிட்ட கேள்விகளை அனுப்பி பதில் பெறும் நேர்காணல்
- நிகழ்பட உரையாடல் நேர்காணல் / மெய்நிகர்நிலை நேர்காணல் இணையத்தில் நிகழ்பட உரையாடல் (Video Conference) மூலம் செய்யப்படும் நேர்காணல்.
எனினும், நேர்காணலானது கட்டமைக்கப்பட்ட அல்லது நேர்காணல் கட்டமைக்கப்படாத அல்லத திறந்த நேர்காணல் அரைக்கட்டமைக்கப்பட்ட அல்லது கலப்பு நேர்காணல் என்று வகைப்படும். கட்டமைக்கப்பட்ட நேர்காணல் என்பது நேர்காணலை நடத்துபவர் குறிப்பிட்ட விடயம் தொடர்பாக தெளிவான வினாக்களைத் தயாரித்து நேர்காண்பவரிடம் தொடர்ச்சியாக வினாக்களைக் கேட்டுத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதாகும். சிலவேளைகளில் இந்த வினாக்கள் நேர்காண்பவருக்கு முன்கூட்டியே அனுப்பப்பட்டு, நேர்காணப்படுபவர் அவ்வினாக்களுக்குத் தயாராகலாம். கட்டமைக்கப்படாத திறந்த நேர்காணல் என்பது கேள்விகள் எதுவுமின்றி, நேர்காணலை நடத்துபவரும் நேர்காணப்படுபவரும் குறிப்பிட்ட விடயம் தொடர்பாக நிதானமாக உரையாடுவது ஆகும். கலப்பு நேர்காணல் என்பது இவையிரண்டிற்கும் இடைப்பட்டதாகும். நேர்காணலின் ஒரு பகுதி பொதுவான உரையாடலாகவும், இன்னொரு பகுதி கட்டமைக்கப்பட்ட வினாக்களை உள்ளடக்கியதாகவும் உள்ளது. தற்காலத்தில் ஊடக சாதனங்களைப் பயன்படுத்தி நேருக்கு நேர் நேர்காணல், தொலைபேசி நேர்காணல், மின்னஞ்சல் நேர்காணல், வீடியோ அழைப்பு (மெய்நிகர்நிலை) நேர்காணல் என்ற வழிகளில் நேர்காணல்கள் நடத்தப்படுகின்றன.
பேட்டி அல்லது நேர்காணல் என்பது ஒரு கலையாகும். அதற்கு அறிவும் அனுபவமும் இருக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. நேர்காணல் கொள்ளப்படுபவரிடமிருந்து நேர்காணல் செய்பவர் பல தகவல்களை வெளிக் கொண்டு வரும் தனித்திறனுடையவராக இருக்க வேண்டும். நேர்காணலில் கேட்கப்படுகின்ற வினாக்கள் தகவல்களைப் பெறுவதற்காகவே கேட்கப்படுகின்றன. நீதிமன்றங்களில் குறுக்கு விசாரணையில் கேட்கப்படுகின்ற கேள்விகள் போன்று இவை அமையக்கூடாது. மேலும் நேர்காணலானது இயல்பாக, இறுக்கமற்றதொரு சூழ்நிலையில் அமைய வேண்டும். எந்தவிதமான கட்டுப்பாடோ, நெருக்கடியோ, அச்சுறுத்தலோ இருக்கக்கூடாது. நேர்காண்பவரிடம் (பேட்டி வழங்குநர்) நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அவர் தனிப்பட்டு "இதனை வெளியிட வேண்டாம்" (Off the record) என்று கூறும் செய்திகளை ஓர் ஊடகவியலாளர் வெளியிடக்கூடாது.
பொதுவாக நேர்காணல் ஒன்றை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு திட்டமிடுதல், இணங்க வைத்தல். தெளிவாக அறிதல், தொடர் முயற்சி ஆகிய நான்கு அம்சங்களும்
அவசியமாகும். ஒரு செய்தியாளர் நேர்காணல் ஒன்றை நடத்தும்போது சில விடயங்களைக் கவனத்திற்கொள்ள வேண்டும்.
- நேர்காண வேண்டியவரோடு முன்கூட்டியே தொடர்புகொண்டு ஒப்புதல் பெற்று இடம், நேரம் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
- நேர்காணல் ஒன்றை நடத்துவதற்கு முன்னர் முதலில் திட்டம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும். இதில் கேட்க வேண்டிய வினாக்களைத் தயாரித்து வைத்திருத்தல் வேண்டும்
- நேர்காணப்படுபவரைப் பற்றியும் நேர்காணலுக்கான பொருள் பற்றியும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
- நேர்காணலின் நோக்கத்தை நேர்காணப்படுபவருக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
- ஆர்வமாகவும் பொறுமையாகவும் நேர்காணலை நடத்த வேண்டும்.
- நேர்காண்பவர் சிறந்த தொடர்பாடல்திறனையும் (Communication skill) செவிசாய்த்தல் திறனையும் (Listening skill) பெற்றிருக்க வேண்டும்.
- நேர்காணலின் போது குறிப்பெடுத்தல், ஒலி - ஒளிப்பதிவு செய்தல் (Audio - Video recording) ஆகியவற்றைச் செய்தல் வேண்டும். இவற்றைச் செய்வதற்கு முன்னர் பேட்டி வழங்குநரிடமும் அனுமதியைப் பெற்றிருத்தல் அவசியமாகும்.
- நேர்காணப்படுபவர் வழங்கும் தகவல்களைக் கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் ஒரு செய்தியாளருக்கு இருக்க வேண்டும்.
- செய்தியாளர் ஒருவர் நேர்காண்பவரின் பதில்கள் தொடர்பாக உண்மையான ஆர்வத்தை வெளிப்படுத்த வேண்டும்.
- நேர்காணப்படுபவரின் கருத்துக்கள் மற்றும் விடைகள் உங்களுக்கு விளங்காவிட்டால் உடனடியாகவே நேர்காணப்படுபவரை மீளக்கூறுமாறு அல்லது தெளிவுபடுத்துமாறு கேட்கவேண்டும். அவ்வாறான சந்தேகங்களைத் தீரத்துக்கொள்வதற்காகப் பின்னர் தொலைபேசியில் தொடர்புகொண்டு கதைப்பதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
- குறிப்பிட்ட நேரத்திற்குள் நேர்காணலை நடத்தி முடிக்க வேண்டும்.
- தொலைக்காட்சி நேர்காணலை மேற்கொள்ளும் போது ஆடை அலங்காரம், உடல் மொழி ஆகியவற்றிலும் கவனம் செலுத்துதல் வேண்டும்.
ஊடகத்துறைகளில் நேர்காணல்முறை மூலம் அதிகளவான தகவல்களையும் செய்திகளையும் சேகரிக்க முடிகின்றதாயினும், சிலநேரங்களில் நேர வீண்விரயம் ஏற்படுவதும் உண்டு, திட்டமிடப்பட்ட நேரத்தில் பேட்டி நடத்தப்படாமல் திடீரென இரத்துச் செய்யப்படுதல்,
பேட்டி வழங்குநருக்குத் திடீரென எதிர்பாராத வேலைப்பளு, களத்திற்குச் சென்று பேட்டி எடுக்கும்போது அதிக தூரம் பயணித்தல் என்பன காரணமாக நேரவிரயம் ஏற்படுகின்றது. சிலநேரங்களில் பேட்டி வழங்குநர் தனது கருத்துக்களை மக்கள் மத்தியில் திணிக்கக் கருதி. அதற்கான சூழ்நிலையை உருவாக்கிப் பேட்டிவழங்கும் ஊடகக் கலந்துரையாடல் / செய்திக்கூட்டம் சந்தர்ப்பங்களும் உண்டு. அதேபோன்று பேட்டி காண்பவர்களும் பேட்டி வழங்குநரின் கருத்துக்களை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதும் உண்டு. தமது சொந்தக்கருத்துக்களை பேட்டிவழங்குநர் வழங்கியதாக வெளியிடுவதும், கருத்துக்களை மாற்றுவதும், திரிபுபடுத்துவதும், புகுத்துவதுமான செயற்பாடுகள் பேட்டி முறையில் நிகழ்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. பேட்டி எடுப்பவரின் ஞாபகமறதி காரணமாகவும் பேட்டியளிப்பவரின் அனைத்துக் கருத்துக்களையும் செய்தியாக வெளியிட முடியாமல் போவதும் உண்டு.
ஒரு செய்தியாளர் நேர்காணல் ஒன்றை நடத்தும்போது சில விடயங்களைத் தவிர்த்துக்கொள்ளுதல் வேண்டும். அவையாவன:
- செய்தியாளர் ஒருவர் நேர்காணல் தருபவரை விட தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கக் கூடாது.
- குறுக்குக் கேள்விகளையும், பொருத்தமற்ற கேள்விகளையும் கேட்கக் கூடாது.
- பேட்டிவழங்குநரைச் சங்கடத்திலும் குழப்பத்திலும் ஆழ்த்தி விடக்கூடாது.
- பேட்டிவழங்குநரின் பதில்களை அலட்சியம் செய்யக் கூடாது.
- பேட்டி வழங்குநர் தனது கருத்துக்களைக் கூறிக்கொண்டிருக்கும்போது அடிக்கடி இடையில் குறுக்கிடுதல் கூடாது.
- செய்தியாளர் ஒருவர் தன்னைப் பற்றி அதிகமாகக் கதைக்கக் கூடாது. நேர்காணப்படுபவர் கதைப்பதற்கு அனுமதிக்க வேண்டும் .நேர்காணப்படுபவர் குறிப்புக்கள், விடயத்தைவிட்டு விலகிச்சென்றால் மட்டும் செயதியாளர் குறுக்கிட்டுக் கதைக்க வேண்டும்.
- பேட்டி வழங்குநரின் கருத்துக்களை நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவரோடு விவாதத்தில் ஈடபடக்கூடாது .
- கருத்து முரண்பாடுகளையோ, உணர்வுகளையோ வேறுபடுத்தக் கூடாது.
- தேவையற்ற பேச்சுக்களில் நேரத்தை வீணடிக்கக் கூடாது.
- நேர்காணல் தருபவரிடம் அடிமைபோல் நடக்கக்கூடாது. அதேசமயம் அவரை ஆட்டிப்படைக்க நினைக்கவும் கூடாது.
- உங்களுக்குத் தேவையான தகவல்கள் முழுவதையும் நீங்கள் பெற்றுக்கொள்ளும்வரை கேள்வி கேட்டலை நிறுத்தக்கூடாது. நேர்காணப்படுபவர் விடையளிக்கத் தீவிரமாகத் தயங்கினாலோ அல்லது மனவழுத்தத்துக்கு உட்படுவது போன்ற அறிகுறிகளைக் காட்டினாலோ கேள்விகளை அவர் மீது அழுத்தித் திணிக்கக்கூடாது.
- நேர்காணப்படுபவரின் அறிவாற்றலுக்கு கருத்துக்கூறுமாறு கேட்கக்கூடாது. அப்பாற்பட்ட விடயமொன்று பற்றிக்
- செய்தியாளர் பேட்டிவழங்குநர் கருத்துக்களைக் கூறிமுடிக்கும் முன்பு தாமாகவே நேர்காணலை முடிக்கக்கூடாது.
இறுதியாக, நேர்காணல் என்பது தற்காலத்தில் ஊடகத்துறையில் மிகவும் முக்கியமானதொன்றாகவும் அதிகளவில் செய்தி சேகரிக்கும் முறைகளில் ஒன்றாகவும் விளங்குகின்றது. பொதுவாக, ஊடகத்துறைகளில் குறிப்பாக பத்திரிகை, இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றில் நேர்காணல்கள் இடம்பெறுகின்றன. பத்திரிகைகளில் இடம்பெறும் நேர்காணல் விடயங்களை எழுத்துவடிவில் எழுதும்போது வாசகர்களைக் கவரும் விதத்தில் மிகவும் சுவையாக எழுதவேண்டும். இவ்வாறு நேர்காணல்கள் எழுத்துவடிவிலும் ஒலி -ஒளிப்பதிவு வடிவிலும் வாய்மொழி மூலமான நேருக்கு நேர் நடைபெறும் உரையாடல் வடிவிலும் அமைகின்றன.





0 Comments