இலங்கையில் மத்தியதர வகுப்பினரின் தோற்றம் - Emergence of Middle Class in Sri Lanka

இலங்கையில் மத்தியதர வகுப்பினரின் தோற்றம்

மத்தியதர வகுப்பினரின் தோற்றம்

பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் இலங்கையில் இடம்பெற்ற சமூக மாற்றங்களில் பழைய பிரபு வகுப்பினர் செல்வாக்கு இழப்பதும் புதிய மத்தியதர வகுப்பினர் தோற்றம் பெற்றமையும் தெளிவாகத் தெரியும் பண்பாகும். பழைய பிரபு வகுப்பினர் பொருளாதார நிலை, சமூக நிலை மற்றும் அரசியல் அதிகாரம் என்பவற்றின் மூலம் சாதாரண மக்களைவிட உயந்த நிலையில் விளங்கியவர்களாவர். நில உடைமையாளர்களான அவர்கள் அதிக வருமானத்தைக் கொண்டிருந்ததுடன் ஆட்சியாளர்களுக்குப் பக்கச் சார்பாக இருந்தமையால் உயர் பதவி பட்டங்களையும் வகித்து வந்தனர்.

இவ்வாறான தன்மைகளால் அவர்கள் சமூகத்தில் பொது மக்களின் கௌரவத்திற்கும் மதிப்பிற்கும் உரியவர்களாகத் திகழ்ந்தனர். பரம்பரை நிலச் சுவாந்தர்களின் வழித் தோன்றல்களான இவர்கள் 'ரதல' பிரதானிகள் எனப்பட்டனர். கோல்புறுக் சீர்த்திருத்தங்கள் மூலம் இலங்கையில் முதலாளித்துவப் பொருளாதார முறைக்கு வித்திடப்பட்டமையால் மரபு ரீதியாகப் பணம் சம்பாதிக்கும் முறைக்குப் பதிலீடாகப் பணம் சம்பாதிக்கக்கூடிய பல்வேறு வழிகளும் திறந்து விடப்பட்டன. பெருந்தோட்டங்களை அடிப்படையாகக் கொண்டமைந்த இப்பொருளாதார முறையில் பெருந்தோட்டங்களுக்குத் தேவையான சேவை வழங்கும் ஒப்பந்தக்காரர் செயற்படுதல் சாராய உற்பத்தி, விநியோகம் மற்றும் சாராயக் குத்தகை உரிமைகளைப் பெறுதல், காரீயம் அகழ்தல், சில்லறை வியாபாரம், மொத்த வியாபாரம், போக்குவரத்து சேவை வழங்கல், தென்னந்தோட்ட உரிமை போன்ற துறைகள் உள்நாட்டவர் முதலீடு செய்து பணம் சம்பாதிக்கும் வழிகளாகக் காணப்பட்டன. எனவே 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மேற்படி துறைகள் மூலம் பணம் சம்பாதித்துக் கொண்ட உள்நாட்டு செல்வந்தர் வகுப்பொன்று உருவானது. இவ்வகுப்பினர் தமது பிள்ளைகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உயர் கல்வியைப் பெறுவதற்காகத் தமது பணத்தைச் ‘செலவிட்டனர். பிரித்தானியர் ஆட்சியில் சட்டத்தரணிகள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், நில அளவையாளர்கள், சிவில் சேவையாளர்கள், எழுதுவினைஞர்கள் என்னும் புதிய தொழில் வாய்ப்புகளும் தோன்றியிருந்தன. ஆங்கிலக் கல்வி மூலம் மேற்படி தொழில்வாய்ப்புகளைப் பெற்று உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அனுபவித்து சமூக அந்தஸ்தையும் பெற்றுக் கொள்ள முடிந்தது. இதுவும் மத்தியதர வகுப்பினரின் தோற்றத்திற்காகத் திறந்து விடப்பட்ட கதவாக விளங்கியது.

பிரித்தானியர் ஆட்சியில் திறந்து விடப்பட்ட புதிய வருமான வழிகள் மூலம் பணம் சம்பாதித்துக் கொண்ட வர்த்தகர் வகுப்பொன்று போலவே ஆங்கிலக் கல்வி மூலம் அரசாங்கத் தொழில்களைப் பெற்றுக் கொண்ட கல்வி கற்ற வகுப்பொன்று உருவானது. இவ்விரு வகுப்பினரும் பொருளாதார ரீதியில் பொதுமக்கள் மத்தியில் வேறுபட்டுத் நிகழ்ந்தமையால் அவர்கள் மத்தியதர வகுப்பினர் எனப்பட்டனர். 20ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் உருவான இம்மத்தியதர வகுப்பினர் காரணமாக பழைய நிலப்பிரபுக்கள் வகுப்பு இலங்கையில் செல்வாக்கு இழந்தது.

புதிதாக உருவான மத்தியதர வகுப்பில் காணப்பட்ட கல்வி கற்றவர்கள் அரசியல் ரீதியாக செயற்படுபவர்களாகவும் திகழ்ந்தனர். 20ஆம் நூற்றாண்டில் இலங்கையில் இடம்பெற்ற அரசியல் போராட்டங்கள் இவர்களாலேயே முன்னெடுக்கப்பட்டன. கல்வி கற்ற மத்தியதர வகுப்பினர் எனப்பட்ட இக்குழுவினர் மேலைத்தேயக் கல்வி மூலம் சமூக அந்தஸ்து பெற்றவர்களாவர். எனவே அவர்கள் மேலைத்தேய கலாசாரத் தைப் பின்பற்றும் நகரங்களில் வசிக்கும் செல்வந்த வகுப்பினராகத் திகழ்ந்தனர்.



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments