உண்டாட்டு என்பது புறநானூற்றுப் பாடல்களுக்குத் தரப்பட்டுள்ள துறைகளில் ஒன்று. 400 பாடல்களில் இத்துறைப் பாடல்கள் ஐந்து உள்ளன. இது வெட்சித்திணையின் துறைகளில் ஒன்று.
தொல்காப்பியம், வெட்சித் திணையின் 14 துறைகளில் ஒன்றாக இத் துறையைக் குறிப்பிடுகிரார்.
உண்டாட்டு
இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த ஆதிமனிதன் தன்னைச் சூழ்ந்திருந்த இயற்கையால் பல இழப்புகளுக்கு ஆளானான். தான் அடைந்த இழப்பில் இருந்து தன்னை காத்துக் கொள்ள குழுவாக வாழ தொடங்கினான். இக்கூட்டுவாழ்க்கையையே இனக்குழு வாழ்க்கை என்பர். இக்குழுவிற்கு தலைவன் உண்டு. இனக்குழு வாழ்க்கையின் முதல் நிலையாக இருந்தது, வேட்டையாடி உணவு தேடும் வாழ்க்கை ஆகும். இனக்குழு தலைவன் மக்களோடு சேர்ந்து உழைப்பில் பங்கு கொண்டு உணவு தேடியும், உணவைப் பங்கு வைத்துக் கொடுத்தும் வாழ்ந்தனர். இனக்குழுவின் அடுத்த வளர்ச்சிநிலை உழவுத்தொழிலும் கால்நடை வளர்ப்பும் ஆகும். இந்நிலையில் உற்பத்திப் பொருளை பங்கிட்டுக் கொள்ளுதலும் பண்டமாற்றும் வழக்கில் இருந்தன.
இனக்குழு தலைவனை சங்கஇலக்கியம், "சீறூர் மன்னன், சிறுகுடிக்கிழான், சீறூர்வண்மையோன்" எனக் குறிப்பிடுகிறது. என்றாலும், அவனும் இனக்குழு மக்களைப் போன்ற சாதாரண வாழ்க்கையையே வாழ்ந்தான். அவனுக்கென தனிச்சலுகைகள் வழங்கப்பெறவில்லை என்பதையும் சங்கப்பாடல்கள் பதிவு செய்கின்றன. 'காலையில் கள்ளைக் குடித்துவிட்டு துப்புரவு செய்யப்படாத தூசி நிறைந்த முற்றத்தில் உறங்குகின்றவன் எமது தலைவன் யாம் அவனது பாணர்' என புறநானூற்றுப் பாடல்(317) விவரிக்கிறது. மேலும், இனக்குழு தலைவன் அனைவருக்கும் அனைத்து பொருளையும் வாரி கொடுத்து வாழ்பவன் என மற்றொரு பாடல் (318)குறிப்பிடுகிறது. இனக்குழு வாழ்க்கையில் கால்நடை செல்வமாக கருதப்பட்டது. இனக்குழுத் தலைவன் தன் மக்களுக்காக ஆநிரையை கவர்ந்து வருதலை செய்தான். இது அவனின் தலைமை பண்பாகக் கருதப்பட்டது. அவனுக்குத் துணையாக குழுவில் உள்ளவர்களும் சென்றனர். இனக்குழுத் தலைவன் விரைந்து ஆநிரைகளைக் கவர்ந்து வரும் ஆற்றல் பெற்றிருந்தமையை புறநானூறு குறிப்பிடுகிறது.
" ....காலை
புல்லார் இனநிரை செல்புறம் நோக்கி கையின் சுட்டிப் பைஎனை எண்ணிச் சிலையின் மாற்றி யோனே" (257:7-10)
இங்ஙனம் ஆநிரை கவர்தலை, இலக்கணநூல் வெட்சித்திணை என்கிறது. ஆநிரை கவர்ந்து வந்தவர்கள், 'கள்ளுண்டு களித்தல்' எனும் பொருளை உடைய 'உண்டாட்டு' வெட்சித்திணையின் துறையாகும். இத்துறை பற்றி விரிவாக காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
உண்டாட்டு - இலக்கணம்
வாழ்க்கைக்கு இலக்கணம் கூறும் தொல்காப்பியம் புற வாழ்க்கைக்கான முதல் இலக்கணமாக வெட்சித்திணை எனும் ஆநிரை கவர்தலையும் அதன் உட்கூறாக 14 துறைகளையும் குறிப்பிடுகிறது. அதில் ஒன்றே, 'உண்டாட்டு' என்பதாம். உண்டாட்டு = உண்டு + ஆட்டு. உண்- உண்டு, ஆட்டு - மகிழ்ந்து இருத்தல். ஆனிரை கவர்ந்த மகிழ்ச்சியில், 'உண்டு களித்தல்' எனும் பொருளை உடைய துறையாக தொல்காப்பியம் சுட்டுகிறது. தொல்காப்பியரை அடுத்துவந்த புறஇலக்கண நூலான புறப்பொருள் வெண்பாமாலை,
"தொட்டு இமிழும் கழன் மறவர்
மட்டு உண்டு மகிழ் தூங்கின்று" (புற.வெ.15)
வீரக்கழல் அணிந்த மறவர்கள் கள் உண்டு மனங்களித்து (மனம் மகிழ்ந்து) ஆடி மகிழ்வது எனக் குறிப்பிடுகிறது. புறநானூற்றில் உண்டாட்டுத் துறையில், 257 258 262 269 297 எனும் ஐந்து பாடல்கள் அமைந்துள்ளன.
ஆநிரை கவர்ந்து - உண்டாட்டு
ஆநிரையைக் கவர்ந்து வந்த தலைவன், கந்தாரம் எனும் கள் விற்கும் இடத்தை கண்டான். அவரிடம் தான் கொண்டுவந்த ஆநிரையை கள்ளுக்குவிலையாகக் கொடுத்தான். கள்ளுடன் ஊனையும் உண்டு கையைக் கழுவாமல், வில்லின் முனையில் துடைத்துக்கொண்டு ஆநிரை கவர்வதற்காக மீண்டும் பகைவரின் இடத்தை நோக்கிப் சென்றான். அவன் ஒருமுறை கள் உண்டவர்கள் மீண்டும் உண்பதற்குள், தெருவில் தூசி எழ பகைவரின் ஆநிரைகளைக் கவர்ந்து வந்துவிடுவான். அவன் களைப்புடன் வருவான் அவன் களைப்பை நீக்க கள் தேவைப்படும். ஆகையால், " தொடுதல் ஓம்புமதி முதுகட் சாடி" (புறம்.258:9) என கள் விற்பாரிடம் கூறுவதாக உலோச்சனாரின் இப்பாடல் அமைகிறது.
ஆநிரை மீட்டு வந்த தலைவன் புலியின் கண் போன்ற நிறமுடைய கள்ளை இரண்டு முறை உண்டான். மூன்றாம் முறை அவன் உண்பதற்காக கள்ளை ஒருவன் ஏந்தியபடி நிற்கும்பொழுது, துடிக் கொட்டுப்பவன் கரந்தையாரின் வருகையை கூறினான். அவன் கள் உண்பதை மறுத்து, மறைந்திருந்து தாக்கிய கரந்தையாரை வாளால் வெட்டி வீழ்த்தினான். அந்த வெட்சித்தலைவனின் வாளைப் புகழ்வதாக ஔவையாரின் பாடல் அமைகிறது.
" புத்தகள் கொண்ட புலிக்கண் ஒப்பர்
ஒன்றுஇரு முறையிலிருந்து உண்ட பின்றை
உவலைக் கண்ணித் துடியன் வந்தெனப்
பிழிமகிழ் வல்சி வேண்ட மற்றிது
கொள்ளாய் என கள்ளின் வாழ்த்திக்
கரந்தை நீடிய அறிந்துமாறு செருவின்" (புறம்.269. 4-9)
ஆநிரை கவர்ந்து வந்தபின் கள்ளுண்ணும் வழக்கம் இருந்தது வெளிப்படுகிறது.
உண்டாட்டுத் துறைக்கு சான்றாக தொல்காப்பிய உரையாசிரியர் நச்சினார்க்கினியர் குறிப்பிடும் புறநானூற்றுப் பாடல் உண்டாட்டு நிகழ்வை விவரிக்கிறது. பகைவரின் ஆநிரையைக் கவர்ந்த தலைவன், பகைவரின் தூசிப்படையை வென்று வரும் தன் படைக்கு பின்னே வருகின்றான். அவனும் அவன் வீரர்களும் களைத்திருப்பர். அதனால் அவர்கள் அமர்வதற்கு, தழைகளால் வேயப்பட்ட பசிய கால்களை உடைய பந்தலை அமைத்து அதில் நீரோடு வந்து கிடக்கும் குளிர்ந்த புதுமணலைப் பரப்புங்கள். வீரர்களின் களைப்பைப் போக்க, ஆட்டுக்கிடாய்களை வெட்டி அதனுடன் கள்ளை உண்ணக்கொடுங்கள் என்பதாக இப்பாடல் அமைகிறது.
"நறவும் தொடுமின் விடையும் வீழ்மின்
பாசுவல் இட்ட புன்காற் பந்தர்ப்
புனல்தரும் இளமணல் நிறைய பெய்ம்மின்
ஒன்னார் முன்னிலை முருக்கிப் பின்நின்று
நிரையோடு வரூஉம் என்னைக்கு
உழையோர் தன்னினும் பெருஞ் செயலரே" (புறம்.262)
போர் வெற்றிக்கு பின் வீரர்களுக்கு நடத்தப்பட்ட உண்டாட்டு நிகழ்வை, மதுரை பேராலவாயனாரின் பாடல் காட்சிப்படுத்துகிறது.
நிறைவாக...
தொல்காப்பியர் கூறும், 'ஆநிரைக் கவர்ந்து வந்து உண்டு மகிழ்தல்' எனும் உண்டாட்டு நிகழ்விற்கு பொருத்தமாக மதுரைப் பேராலவாயர் பாடல் (புறம்.262) உள்ளது. புறப்பொருள் வெண்பாமாலை கூறும் 'ஆநிரை கவர்ந்து வந்து கள்ளுண்டு மகிழ்தல்' என்பதற்குப் பொருத்தமாக புறம்.259, 269 பாடல்கள் உள்ளன. 257வது புறநானூற்றுப் பாடல், தலைவன் கவர்ந்து வந்த ஆநிரைகளை பகிர்ந்து வழங்கும் முறை இருந்தமையை குறிப்பால் உணர்த்துகிறது. 297வது பாடல் பன்னாடையில் (சல்லடை) வடிகட்டப்பட்ட கள்ளை வாழ்த்தி, சீறூரை வென்று கள் உண்பதைவிட மருதநிலமாகிய தண்ணடையை வென்று கள் உண்ண விரும்பும் மறவனின் விருப்பத்தை எடுத்துரைக்கிறது. கள்ளுண்டு மகிழ விரும்பல் எனும் அடிப்படையில் இப்பாடல் உண்டாட்டு துறையாக சுட்ட பெறுகிறது
சங்ககாலச் சமூகத்தில் கள் உடல்வலிமையை மீட்டெடுக்கும் பானமாக பயன்படுத்தப்பட்டது. போரில் வெற்றியடைந்த வீரர்களின் களைப்பைப் போக்கி புத்துணர்வு தரும் பானமாக கருதப்பட்டது. அருந்துவதற்கு ஆயினும் அதை கள் உண்ணுதல் என்று குறிப்பிட்டனர். கள்ளுடன் ஊன் உணவும் சேர்த்து உண்ண பட்டதால் 'கள் உண்ணுதல்' என்றே சுட்டப்படுகிறது. ஆற்றுப்படை இலக்கியங்களிலும் பரிசில் பெற வரும் கலைஞர்களுக்கு களைப்பைப் போக்க முதலில் கள் வழங்ப்பட்டு பின், ஆட்டின் இறைச்சி வழங்கப்படுதல் நோக்கத்தக்கதாகும்.
'உண்டாட்டு' வீரர்கள் தாங்கள் பெற்ற வெற்றிக்கு கள்ளை உண்டு மகிழும் நிகழ்வாக இனக்குழு வாழ்க்கையில் இருந்தது எனலாம்.
நன்றி - முனைவர் கு.சக்திலீலா





0 Comments