அது ஓர் கார் காலம் Athu Oru Kaar Kaalam

கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)

தமிழ் கவிதை அது ஓர் கார் காலம்

தமிழ் கவிதை அது ஓர் கார் காலம்

ஆதவனுக்கும்  இன்று  அலுப்புக்  காய்ச்சலோ!

அதனால்தான்  இன்னும் வரவில்லையோ!

எந்திரித்து  வந்து  மெல்ல எட்டிப்  பார்க்க!


இடிகள் இடித்துக் கொள்ளும்

இரைச்சல் எதுவும் இல்லை!

ஒளிவாள் கொண்டு வானைப்

பிளக்கும் மின்னல்கள் இல்லை!


அழகிய மேகங்களின் வேகத் தேரோட்டம்

அதன்பின் பூமிநோக்கி வந்தடையும் மாலையாய்

தொடுக்க முடியாத தண்ணீர் பூக்களின் அர்ச்சனை!

 

இனம்புரியா ஈர்ப்புவிசை ஒன்று உள்ளிருந்து

வீட்டின்வாசல் நோக்கித் தள்ளிட, எதிர்வீட்டு

மாடியில் நனைந்தபடி மெல்லிய நாட்டியம்

காட்டும் அழகிய புறாக்களின் தரிசனம்!


மேகம் தான்கொண்டிருந்த வார்த்தைகள்

யாவையும் கொட்டித் தீர்த்திட, அதன்பின்

மௌன மொழியில் குளிர்ந்த காற்று வந்து

இதமாய் தலைக்கோத, கடிகாரத்தில் மணியோ

நண்பகலைக் காட்ட, ஆதவனின் அமைதிப் பிரவேசம்!


மெல்ல மெல்ல எழுந்து ஒளிப்பார்வை பூமியெங்கும்

பரவி படர்ந்து வர, மாலை பொழுதுக்குமுன்

அங்கு ஓர் அழகிய போர் ஒப்பந்தம்!


மேகக்க்கூட்டங்களின் அசுர அணிவகுப்பு

அதன்பின் நடந்தேறும் ஒளியும் ஒலியும்

இம்முறை மேகத்திடம் இருந்து கொஞ்சம்

வன்மையான வார்த்தைகளும் வந்து விழுகின்றன!


காற்று  கொஞ்சம்  கத்தி  பேசினால்

காதை  கொஞ்சம்  கட்டிக் கொள்ளலாம்!


ஆனால்  ஆர்பரிக்கும் அர்த்தம்புரியா  வேகஇசைக்கு

ஆடுகிறது  வீட்டின்  மேற்கூரையும் நிலைகுலைந்தபடி!


வீசிய சூறாவளியும் காணாது அடங்கி விட்டது!

பெய்த மழையும் இங்கு தணிந்து விட்டது!

வீதியில் குடைகள் எல்லாம் மடங்கி விட்டது!

சுட்ட வெயிலும் பனியால் குளிர்ந்து விட்டது!

சூரியனும் மேற்கில் போய் மறைந்து விட்டது!

அந்தியும் இரவின் வருகைக்காக ஒதுங்கி விட்டது!

வானமும் தன்மேல் கருப்பு போர்வை விரித்து விட்டது!

அம்புலியும் அதன்மேல் அழகாய் ஒட்டி விட்டது!

ஆறுவால் மின்மினியும் விட்டு விட்டு ஒளிர்ந்து விட்டது!

போன மின்சாரம் மட்டும் எங்கோ போய் நின்று விட்டது!

நன்றி - நா. ஜெயபாலமுருகன் 

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும். 

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்


போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்


இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம் 



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments