ஆன்மீகமும் அறிவியலும்
பழங்கால மனிதனின் இறை வழிபாடு இயற்கையைச் சார்ந்தே இருந்தது. தன்னைச் சுற்றி இருந்த இயற்கையை உற்றுநோக்கி அதில் இருந்து தனக்கு கிடைத்த நன்மை தீமைகளை அடிப்படையாகக் கொண்டு வழிபாட்டு முறைகளை உருவாக்கினான். அவற்றில் சில அறிவியலோடு தொடர்புடையதாக இருந்தது.
கடவுளுக்கு அவன் கொடுத்த தோற்றத்திலும் அறிவியல் உண்மை மறைக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவில் அர்த்தநாரீஸ்வரர், தட்சணாமூர்த்தியின் சிலை அமைப்பு மற்றும் திருமாலின் தசாவதாரம் போன்றவற்றோடு தொடர்புடைய அறிவியல் செய்திகளைக் காண்போம்.
அர்த்தநாரீஸ்வரர் - Ardhanareeswarar
ஆணும் பெண்ணும் இணைந்த வடிவம். இது மனித உடலின் அமைப்போடு தொடர்புடையது. வலது பக்கம் இருக்கும் சிவனின் உருவம். சிவன் நெருப்பின் வடிவமாகக் கருதப்படுகிறார். இடது பக்கம் உமையம்மையின் உருவம். குளிர்ச்சியின் வடிவமாக கருதப்படுகிறார். உடலின் வலது பக்கம் இடது பக்கத்தைவிட சற்று வெம்மைத் தன்மை நிறைந்தது. வெப்பமும் குளிர்ச்சியும் சமநிலையில் இருந்தால்தான் உடலின் இயக்கம் சீராக இருக்கும். வெப்பம் அதிகமானால் பித்தம் அதிகரித்து வயிற்றுக்கு ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளும் குளிர்ச்சி அதிகமானால் காய்ச்சல்,சளி போன்ற பிரச்சனைகளும் உருவாகும். ஆகையால் வெப்பமும் குளிர்ச்சியும் சமநிலையில் இருக்க வேண்டும் என்பதன் குறியீடு அர்த்தநாஸ்வரரின் வடிவமாகும்.
உறங்கும் போது இடதுபுறம் திரும்பி உறங்க வேண்டும். ஆகாயம் பார்த்தது போல் (மல்லாந்து),உறங்கக் கூடாது என்பது இந்த சமநிலையோடு தொடர்புடையதாகும். இடதுபுறமாக உறங்கும் போது உடலுக்குத் தேவையான வெப்பம் சீராக இருக்கும். உணவு செரிமானம் சீராகும். மேலும், ஆகாயம் பார்த்ததும் பூமி பார்த்தும் உறங்கக் கூடாது. ஒரு பக்கமாக உறங்குவதால் சுவாசம் சீராக இருக்கும்.
தட்சணாமூர்த்தியின் சிலை - Datsanamurthy
சிவனின் அம்சமாக தென்திசைக்கு உரியவராக கல்விக்கு உரியவராக கூறப்படுபவர் தட்சணாமூர்த்தி. தென்திசை நோக்கி கல் ஆலமரத்தின் கீழ் இருக்கும் இவரின் காலடியில் நான்கு சீடர்கள் ஞானம் பெற வடதிசை நோக்கி அமர்ந்திருப்பர். கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் தென்திசை நோக்கியும் கற்கும் மாணவன் வடதிசை நோக்கியும் அமர்ந்திருக்க வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது. தென்திசையை விட வடதிசையில் ஈர்ப்புவிசை அதிகம். அதனால் தான் உண்ணும் உணவு செரிமான ஆகாமல் போகும் என்பதால் அத்திசை நோக்கி உண்ணக்கூடாது. அத்திசையில் தலை வைத்து உறங்கவும் கூடாது. பூமி சுழற்சி மற்றும் ஈர்ப்புவிசை காரணமாக மூளையின் செயல்பாடு பாதிக்கப்படும். ஆனால் வடதிசை நோக்கி அமர்ந்து படிப்பதால் நினைவாற்றல் அதிகரிக்கும் அதைத்தான் தட்சணாமூர்த்தியின் பாதத்தின் கீழிருக்கும் சீடர் சிலை காட்டுகிறது. ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருப்பதன் பின்னணி என்னவென்றால், ஆலமரம் பிராணவாயு எனும் ஆக்ஸிசனை அதிகம் வெளியிடும். இதனால் மூளை நரம்புகளின் செயல்பாடு தூண்டிவிடப்பட்டு விரைவில் ஞானம் பெறலாம் என்பதாகும்.
திருமாலின் தசாவதாரம் - Dasavathara
அனைத்து சமய மக்களும் உயிர்கள் அனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டவை என நம்பினர். 1859 ஆம் ஆண்டு சார்லஸ் டார்வின் உயிர்களின் தோற்றம் குறித்த தனது புத்தகத்தை வெளியிட்டார். அதன்பின் உயிர்கள் அனைத்தும் பரிணாம வளர்ச்சியால் உருவானது என்பதை ஏற்றுக்கொண்டனர். சார்லஸ் டார்வின் 20 ஆண்டுகள் முயன்று செய்த ஆய்வை நம் முன்னோர்கள் இறைவனின் தசாவதார வடிவத்தில் குறியீடாக அமைத்திருக்கிறார்கள். ஆரம்பகாலத்தில் பூமியின் பெரும்பகுதியை நீர் அட்கொண்டிருந்தது அந்தகாலகட்டத்தில் நீர்வாழ் உயிரினமே முதலில் தோன்றின. நீர்வாழ் உயிரியின் முழுமையான வளர்ச்சியின் குறியீடு 'மச்சாவதாரம்' ஆகும்.
நீர்வாழ் உயிரியை அடுத்து நிலத்திலும் நீரிலும் வாழும் உயிரினங்கள் தோன்றின. இதையே 'கூர்மாவதாரம்' குறிக்கிறது.
பூமியில் பல இயற்கை மாற்றங்கள் ஏற்பட்டு நிலப்பரப்புகள் உருவானது. அதன்காரணமாக நிலத்தில் மட்டும் வாழும் உயிரினங்கள் தோன்றின. அதைத்தான் 'வராக அவதாரம்' சுட்டுகிறது. மேலும் இது பூதேவியை அதாவது பூமியை கடலுக்குள்ளிருந்து மீட்டெடுத்தது போன்ற தோற்றத்தை உடையது. இதை உற்றுநோக்கும் போது பூமியை ஆட்கொண்டிருந்த கடல்பரப்புளவில் மாற்றம் ஏற்பட்டு, பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் உருவான காலம் என்பதும் புலனாகிறது.
'நரசிம்மாவதாரம்' பாதி விலங்கு பாதி மனிதன் என்ற தோற்ற அமைப்பை உடைய அவதாரம். விலங்கில் இருந்து மனிதன் தோற்றம் பெறத் தொடங்கிய காலத்தை இந்த வடிவம் குறிக்கிறது.
விலங்கு நிலையில் இருந்து தோற்றம் பெற்ற மனிதன் குறள் வடிவில் அதாவது உயரம் குறைந்தவனாக இருந்ததை 'வாமனவதாரம்' குறிக்கிறது.
'பரசுராமவதாரம்' மனிதன் உடல் அளவில் முழுமையான வளர்ச்சி அடைந்து தன்னைக் காத்துக்கொள்வும் தன்னுடைய உணவு சார்ந்த தேவைகளை நிறைவு செய்துகொள்ள கோடரி போன்ற ஆயுதங்களை உருவாக்கி வாழ்ந்தமையைக் குறிக்கிறது. மேலும், தன்னுடைய தந்தையின் மரணத்திற்காக ஆயிரம் (சத்திரியர்களை) அரசர்களைக் கொன்று ஈமச்சடங்கு செய்ததாகக் கூறுவது மனிதனின் மூர்க்கத்தனமான காட்டுமிராண்டி வாழ்க்கையைக் குறிப்பதாகும்.
கையில் வில் அம்புடன் வேட்டைச் சமூகத்தின் அடையாளமாக, ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பட்ட மனித வாழ்க்கையின் வளர்ச்சியைக் குறிப்பது 'இராமவதாரம்' ஆகும்.
வேட்டையாடி உணவு உண்டு நாடோடியாக வாழ்ந்த மனிதன் ஆற்றங்கரைகளில் விவசாயம் செய்து, கால்நடைகளை மேய்த்து ஒரு நிலையான வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டதன் அடையாளம் 'பலராமவதாரம் மற்றும் கிருஷ்ணாவதாரம்' ஆகும்.
இறுதியாக, உலகை அழிக்க இறைவன் எடுக்கப்போகும் அவதாரமாகக் கூறப்படுவது 'கல்கி அவதாரம்' ஆகும். இது வெள்ளைக்குதிரையின் மேல் ஒரு கையில் கேடயம் மற்றொரு கையில் வாளும் ஏந்தி, போர்வீரனின் தோற்றம். மனிதன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள உருவாக்கிய (கேடயம்) அனைத்தும் மனித இனத்தை அழிக்கும் ஆயுதமாக (வாள்) மாற்றம் பெறும் அழிவின் அடையாளத்தைக் குறிப்பதாகும்.
நிறைவாக.
இறைவனுக்கு நம் முன்னோர்கள் கொடுத்த வடிவங்களில் அறிவியல் சார்ந்த உண்மைகளும் உள்ளன. இறைவனின் அவதாரம் தொடர்பான கதையில் கற்பனை கலந்திருந்தாலும், திருமாலின் தசாவதாரத் தோற்றத்தில் உயிர்களின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடும் உள்ளடங்கியுள்ளது. நடராஜர் சிலை அண்டவியல் தத்துவங்களை உள்ளடக்கியது என்பர். நம் முன்னோர்கள் உருவாக்கிய ஆன்மீகத்தோடு அறிவியலும் கலந்திருத்தலை மறுக்க இயலாது.
நன்றி - முனைவர் கு.சக்திலீலா
0 Comments