கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை - ஆசிரியர்
பறவைகளே, உம்மொழி எம்பெருவிருப்பு
புலரும்போதில் புதுமொழி புகல்வீரே
புரியாதாயினும் புத்துணர்வு பெருகுதே
கீச்சொலியெலாம் கீதமாய் விரியுதே
பயிற்றுவீரோ எமக்கும் உம்மொழி
சலிப்புற்றேன் மாந்தரோடு பேசியே
ஆலமரத்தடி அமர்ந்து பயில்வேன்
மாமரத்தடி மகிழ்ந்து கற்பேன்
தென்னந்தோப்பில் திரிந்து படிப்பேன்
குயில்காள் கானமொழி கற்பிப்பீர்
கிளிகாள் கொஞ்சுமொழி பயிற்றுவீர்
குருவிகாள் குறுமொழி உணர்த்துவீர்
குருவாசனம் கிளைதனில் அமைப்பேன்
குந்தியிருந்து நிழல்தனில் சீடனாவேன்
கற்றுத் தேர்ந்த காலைதனில்
கானகம் போற்றிட ஒருபாட்டு
கலந்து களித்திட ஒருபாட்டு
களைப்பு நீங்கிட ஒருபாட்டு
குஞ்சுகள் கொஞ்சிட ஒருபாட்டு
கூடும் சுற்றத்திற்கு ஒருபாட்டு
குறையாது தருவேன் நும்மொழியில்
குருவிற்கு தட்சணையாய் எம்வழியில்
நாளையென நாள் குறித்தேன்
நற்பள்ளி நான் சேர்ந்திடவே
சாக்குப்போக்கு சொல்லாதீர்
சங்கடம் ஏதும் கொள்ளாதீர்!
நன்றி - சபா வடிவேலு
0 Comments