தேயிலைப் பயிர்ச்செய்கை (Tea cultivation)

இலங்கையில் தேயிலைப் பயிர்ச்செய்கை

தேயிலைப் பயிர்ச்செய்கை (Tea cultivation)

கோப்பியின் விலை உலகச் சந்தையில் அடிக்கடி கூடிக் குறைந்தமையால் மலையகப் பிரதேசத்தில் பயிரிடுவதற்கு உகந்த வேறு பயிர்கள் பரீட்சார்த்தமாக மேற்கொள்ளப் பட்டன. தேயிலையும் அவ்வாறு பரீட்சார்த்தமாகப் பயிரிடப்பட்டது. 1867ஆம் ஆண்டு பெருந்தோட்ட உற்பத்தியாளர் சங்கம், சிலரை அசாமிற்கு அனுப்பித் தேயிலை தொடர்பான மேலதிக விபரங்களைப் பெறுவதற்கு ஏற்பாடு செய்தது. இதற்கிடையில் ஜேம்ஸ் டெய்லர் என்பவர் லுல் கந்துர என்னும் இடத்தில் சில ஏக்கர் பரப்பில் தேயிலைச் செய்கையை மேற்கொண்டார். அதன் பயனாக 1875 ஆம் ஆண்டில் 500 எக்கர் பரப்பில் தேயிலைப் பயிர்ச் செய்கை வளர்ச்சியடைந்தது. 

கோப்பிப் பயிர்ச் செய்கையின் வீழ்ச்சி காரணமாக அப்பயிர்ச் செய்கையாளர்கள் தேயிலையைப் பயிரிட்டமையால் அது விரைவாகப் பரவியது. 1894 ஆம் ஆண்டாகும்போது தேயிலை 400000 ஏக்கரில் பயிரிடப்பட்டமையைக் கொண்டு தேயிலைப் பயிச்செய்கை விருத்தியை நாம் புரிந்து கொள்ள முடியும். இலங்கையின் உலர் வலயம் தவிர்ந்த 6000 அடி வரை உயரமான எல்லாப் பகுதிகளிலும் தேயிலையைப் பயிரிட முடிந்தமையால் மத்திய, ஊவா, சபரகமுவ மாகாணங்களில் தேயிலைப் பயிர்ச் செய்கை பரவியது. பின்னர் தென் மாகாணத்திலும் மேல் மாகாணத்திலும் தேயிலை பயிரிடப்பட்டது. 1930 ஆம் ஆண்டாகும்போது மத்திய அளவினதும் பாரியளவினதுமான 1200 தேயிலைத் தோட்டங்கள் இலங்கையில் காணப்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன.

தேயிலைப் பயிர்ச்செய்கையின் வளர்ச்சி காரணமாக அது இலங்கையின் பிரதான ஏற்றுமதிப் பயிராக மாறியது. முதலாம் உலகப் போரின் பின்னர் பாரியளவில் தேயிலை உலகச் சந்தையில் நிரம்பல் செய்யப்பட்டது. 1929 உலகப் பொருளாதார வீழ்ச்சி காரணமாக தேயிலையின் விலை இடைக்கிடை குறைவடைந்த போதிலும் அது தற்காலிகமானதாக இருந்தது. பின்னர் மீண்டும் இயல்பு நிலையை அடைந்தது.

தேயிலைப் பயிர்ச்செய்கை இலங்கைக்கு வர காரணம்

தேயிலைப் பயிர்ச்செய்கை, இலங்கையில் கிட்டத்தட்ட 200 ஆண்டு வரலாற்றைக் கொண்டது. 1824 ஆம் ஆண்டு பிரித்தானிய காலனித்துவ காலப்பகுதியில், முதன் முதலாக சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்டதாக பல வரலாற்றுச் சான்றுகள் குறிப்பிடுகின்றன. ஆரம்ப காலத்தில் இவை பேராதனை தாவரவியல் பூங்காவில் கண்காட்சிக்காக வரவழைக்கப்பட்டதாகவும், 1839 ஆம் ஆண்டில் இந்தியாவின் அஸ்ஸாம் மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களிலிருந்து கொண்டு வந்த தேயிலை வகை, எமது நாட்டில் விளையக்கூடியவையா என்ற பரிசோதனையின் நிமித்தம் பயிரிடப்பட்டதாகவும் பல சுவாரஸ்யமான பின்னணி கதைகள் உண்டு.

ஜேம்ஸ் டெய்லர் என்ற ஸ்கொட்லாந்து நாட்டவர், தேயிலைப் பயிர்ச்செய்கையை மற்றொரு பரிமாணத்திற்கு ஈட்டிச்சென்றார். அதுவரை சிறியளவில் மேற்கொள்ளப்பட்ட தேயிலைப் பயிர்ச்செய்கை, இவரது காலத்தில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையாக உருவெடுத்து வணிகமயமானது. மேலும் இதனை விருத்தி செய்யும் நோக்கத்தில் 1866 ஆம் ஆண்டளவில் தேயிலை பயிர்ச்செய்கையின் நுட்பங்களை அறிந்துகொள்வதற்காக இந்தியா சென்று வந்த இவர், கண்டிக்கு அருகேயுள்ள ‘லூல்கந்துரை’ என்ற இடத்தில், 19 ஏக்கர் விசாலமான தேயிலைத்தோட்டம் ஒன்றை முதன்முதலில் நிறுவினார். காலப்போக்கில் அவ் இடத்திலே, 1872 ஆம் ஆண்டு முதலாவது தேயிலைத் தொழிற்சாலை நிர்மாணிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 1875 ஆம் ஆண்டளவில் லண்டனில் நடைபெற்ற தேயிலை கொள்வனவு ஏலத்திற்கு இலங்கையில் இருந்து முதன் முதலாக தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது.

1867களில் கண்டியில் 19 ஏக்கரில் ஆரம்பிக்கப்பட்ட இப் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை, நுவரெலியா, டிம்புள, உடபுஸ்ஸெல்லாவ மற்றும் ஊவா முதல் தென்மாகாணம் வரை வளர்ச்சி கண்டது. இதன் விளைவாக இலங்கை உலகின் 19% தேயிலைக் கிராக்கியை நிவர்த்தி செய்ததுடன், உலகில் அதிகம் தேயிலை ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில் 4ம் இடத்தை பிடித்தது. 2019 ஆம் ஆண்டில், அண்ணளவாக 300,000 மெற்றிக் டொன் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன் பெருமதி 1.5 $ பில்லியனுக்கும் அதிகமாக விளங்குவதோடு, GDP என்று கூறப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% பங்கை வகிக்கின்றது. மேலும் இப் பயிர்ச்செய்கை மூலம் கிட்டத்தட்ட 10 இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் துறையாக இது விளங்குகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

குளிரான காலநிலை, மழை வீழ்ச்சி போன்ற காரணிகள் தேயிலையின் தரம், சுவை மற்றும் வாசனைக்கு அதிகம் தாக்கம் செலுத்தும் அம்சங்களாக விளங்குகின்றன. பொதுவாக ஊவா மாகாணங்களில் விளையும் தேயிலை, வித்தியாசமான பருவகால காரணிகள் கொண்டடங்குவதுடன், இவை ஜேர்மனி மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அதிகம் பகிரப்படுகின்றன. கடின நிறம் மிகுந்த தேயிலை வகைககள் ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளிலும், தாழ் மலைப்பிரதேசங்களில் பெறப்படும் தேயிலை வகைகள் அதிகமாக மேற்காசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையும் ஏற்றமதி செய்யப்படுவதுடன், இத் தேயிலை வகைகளுக்கே உலகளாவிய ரீதியில் அதிக கிராக்கி உள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தேயிலையின் கனவளவிற்கு அமைய Dust, BOP, BOPF மற்றும் OP என, தர நிர்ணயம் செய்யப்படுகிறது. இதில் குறைவான தரமாக கருதப்படும் Dust என்று அழைக்கப்படும் தேயிலையே இலங்கையில் அதிகமானோர் நுகர்வதாகும். அப்படிப் பார்த்தால், எமது நாட்டிலே விளையும் தரமான தேயிலையின் உண்மையான சுவை, இலங்கையர்களுக்கு தெரியாது என்பதே கசப்பான உண்மை. தேயிலை இவ்வாறாக தர நிர்ணயம் செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதனால்தான், நம் நாட்டு தேயிலைக்கு உலகளவில் இன்றும் கிராக்கி உண்டு. மேலும் இலங்கையில் விளையும் அனைத்து தேயிலைகளிலும் மெதெய்ல் ப்ரோமைட் என்ற சேதன பதார்த்தம் நீக்கப்படுவதனால், ‘Ozon free tea’ என்று உலகளவில் போற்றப்படுகின்றது.

தேயிலைப் பயிரின் விருத்தியில் பங்களிப்புச் செய்த காரணிகள்

  • இலங்கைத் தேயிலைக்கு உலசு சந்தையில் சிறந்த கேள்வி நிலவியமை.
  • உலர் வலயம் தவிர இலங்கையின் ஏனைய பிரதேசங்கள் தேயிலைப் பயிர்ச் செய்கைக்கு உசுந்ததாகக் காணப்பட்டமை.
  • நவீன இயந்திர சாதனங்களுடனான தொழிற்சாலைகள் காரணமாக தரமானதேயிலை உற்பத்தி செய்யப்பட்டமை. 
  • பெருந்தெருக்கள், புகையிரத வீதிகள் காரணமாக போக்குவரத்து வசதிகள் மேலும் முன்னேற்றமடைந்தமை.
  • தென்னிந்தியாவில் இருந்து தொழிலாளர்கள் கொண்டுவரப்பட்டு குறைந்த கூலிக்கு உழைப்பு பெற்றுக் கொள்ளப்பட்டமை.



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments