கோப்பிப் பயிர்ச் செய்கை (Koffee Cultivation)

இலங்கையில் கோப்பிப் பயிர்ச் செய்கை

கோப்பிப் பயிர்ச் செய்கை (Koffee Cultivation)

இலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கரையோரப் பிரதேசத்தில் சிறியளவில் கோப்பிப் பயிர்ச் செய்கை ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அக்காலத்தில் கறுலாப் பயிர்ச் செய்கை முதலிடம் பெற்ற காரணத்தால் கோப்பிச் செய்கை வளர்ச்சியடையவில்லை.

ஆங்கிலேயர் கண்டியைக் கைப்பற்றும்போது சில இடங்களில் வீட்டுத் தோட்டப் பயிராக கோப்பி காணப்பட்டது. ஆங்கிலேயராட்சிக் காலத்தில் அது பெருந்தோட்டப் பயிராக வளர்ச்சி அடைந்தது. 19 ஆம் நூற்றாண்டு கோப்பிச் செய்கையின் வளர்ச்சியில் பல காரணிகள் பங்களிப்புச் செய்துள்ளன.


கோப்பிச் செய்கையின் விருத்தியில் செல்வாக்கு செலுத்திய காரணிகள்

  • 1833 ஆம் ஆண்டு கோல்புறூக் சீர்திருத்தங்களின் பின்னர் வெளிநாட்டு முதலீட்டா ளர்கள் அதிகளவில் கோப்பித் தோட்டங்களில் முதலீடு செய்தமை.
  • ஐரோப்பிய சந்தையில் கோப்பிக்கான கேள்வி அதிகரித்தமை. 
  • கோப்பிச் செய்கை மூலம் அதிசு இலாபம் அடைய முடிந்தமை.
  • தென்னிந்திய ஊழியர்கள் மூலம் குறைந்த கூலிக்கு உழைப்பு பெற்றுக் கொள்ளப் பட்டமை. 

ஆளுனர் எட்வர்ட் பான்ஸ் (1824-1831) காலத்தில் கோப்பிக்கான ஏற்றுமதி வரி குறைக்கப்பட்டதும், கோப்பித் தோட்டத் தொழிலாளர்கள் கட்டாய அரச சேவையிலிருந்து விடுவிக்கப்பட்டதும் கோப்பிச் செய்கை விருத்திக்குக் காரணங்களாய் அமைந்தன.

1837-1847 காலப் பகுதியில் மலையகப் பிரதேசத்தில் கோப்பிச் செய்கை வேகமாக விருத்தியடைந்தது. இக்காலப்பகுதியில் கோப்பி மூலம் கிடைத்த அதிக இலாபம் காரணமாக அரசாங்க அதிகாரிகளின் கோப்பித் தோட்டங்கள் 500 அளவில் காணப்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன. எனவே தும்பறை, கம்பளை, பேராதனை மாத்தளை முதலிய மத்திய மாகாணப் பிரதேசங்களிலும் பதுளை மாவட்டத்திலும் வெற்றிகரமான முறையில் கோப்பிச் செய்கை மேற்கொள்ளப்பட்டது. 

1834 ஆம் ஆண்டு ஏற்றுமதி செய்யப்பட்ட கோப்பியின் அளவை விட ஐந்து மடங்கு அதிகமாக 1844 ஆம் ஆண்டு ஏற்றுமதி செய்யப்பட்டது. 1844 ஆம் ஆண்டின் பின்னர் பிரித்தானியா பின்பற்றிய சுதந்திர வர்த்தகக் கொள்கை காரணமாக பிரித்தானிய சந்தையில் இலங்கைக் கோப்பி கடும் முகங்கொடுக்க நேரிட்டது. அதேபோல் 1848 ஆம் ஆண்டளவில் ஏற்பட்ட உலகப் பொருளாதார வீழ்ச்சியும் இலங்கையின் கோப்பிச் செய்கையைப் பாதித்தது. மேற்படி காரணங்களால் கோப்பிக் கான கேள்வி குறைவடைந்ததால் 1847ஆம் ஆண்டளவில் கோப்பித் தோட்டங்களின் பெறுமதி வீழ்ச்சியடைந்தது. ஆயினும் 1850 களின் பின்னர் வெற்றிகரமான தோட்ட முகாமைத்துவம் காரணமாக உற்பத்திச் செலவு குறைந்தமையாலும் ஐரோப்பாவில் கோப்பிக்கான கேள்வி அதிகரித்ததாலும் கோப்பிச் செய்கை இயல்பு நிலையை அடைந்தது, ஆயினும் 1859 ஆம் ஆண்டில் கோப்பிப் பயிருக்கு ஏற்பட்ட ஹெமீலியா வெஸ்டாக்ஸ் (Hemilia Vestatrix) என்னும் இலை வெளிறல் நோய் வேகமாகப் பரவிய காரணத்தால் கோப்பிச் செய்கை முற்றாக வீழ்ச்சியடைந்தது.


சிங்கோனா மற்றும் கொக்கோ பயிர் செய்கை

கோப்பிச் செய்கையின் வீழ்ச்சியைத் தொடர்ந்து சில முயற்சியாளர்கள் சிங்கோனா பயிர்ச் செய்கையில் ஈடுபட்டனர். ஆயினும் சிங்கோனா அதியுயர்ந்த பிரதேசங்களில் மட்டுமே வெற்றியளித்ததுடன் அது குவினைன் என்னும் மருந்திற்கான மூலிகைப் பயிராக விளங்கியமையால் அதற்கான கேள்வியும் குறைவானதாகவே காணப்பட்டது. எனவே கோப்பிக்கான மாற்றுப் பயிர் என்னும் வகையில் சிங்கோனா பயிர்ச் செய்கை வெற்றியளிக்கவில்லை.

கோப்பிச் செய்கையின் வீழ்ச்சியைத் தொடர்ந்து கொக்கோ பயிர்ச் செய்கைக்கு அரச அனுசரணை கிடைத்தது. கொக்கோப் பயிருக்கு நிழல் தேவைப்பட்ட காரணத்தால் உற்பத்தியாளர் அதற்கு மேலதிகமாக செலவு செய்ய நேர்ந்தது. அத்துடன் மாத்தளை மாவட்டத்தில் மாத்திரமே கொக்கோ பயிர்ச் செய்கை வெற்றியளித்தது. இது மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட காலகட்டத்திலும் 12 000 ஏக்கர் பரப்பளவை அது தாண்டவில்லை. எனவே கோப்பிச் செய்கைக்கு பதிலீடாக கொக்கோ பயிரும் வெற்றியளிக்கவில்லை.




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments