ஏவல் வினை (Evil Verb)

 ஏவல் வினை என்றால் என்ன?

ஏவல் வினை

ஏவல் வினை என்பது முன்னிலையில் உள்ள ஒருவரையோ அல்லது பலரையோ ஒரு செயலை நிகழ்த்துமாறு ஏவுவதற்கு பயன்படும் வினை ஆகும். பெரும்பாலான விளைகள் (வினையடிகள்) ஏவல் பொருளில் வருகின்றன. ஏவல் வினைகளை ஏவல் ஒருமை, ஏவல் பன்மை என இரு வகைப்படுத்தலாம் ஓடு, பார் என்னும் சொற்கள் ஏவல் ஒருமை வினைமுற்றுகளாகும்.

பொதுவாக வினையடிகள் ஏவலி வினைமுற்றுகளாக உள்ளன. வினையடியுடன் ஏவல் பன்மை விகுதிகள் இணைத்து ஏவல் பன்மை வினைமுற்றுகள் உருவாக்கப்படுகின்றன.

உதாரணம்

போ +ங்கள் = போங்கள்

பார் +உங்கள் = பாருங்கள்


ஏவல் ஒருமை வினை மற்றும் ஏவல் பன்மை வினை வடிவங்கள் எதிர்மறை வடிவிலும் வருகின்றன. 


எதிர்மறை ஏவல் ஒருமை

செய் + ஆத் +ஏ = செய்யாதே

போ + ஆத் + ஏ =போகாதே


எதிர்மறை ஏவல் பன்மை

செய்+ ஆத்+ஈர்கள் = செய்யாதீர்கள்

ஒரு +ஆத் +ஈர்கள் - ஓடாதீர்கள்


தற்காலத்தில் ஏவல் வினைகளின் மாற்றங்களும் பயன்பாடுகளும்

ஏவல் வினை பற்றித் தொல்காப்பியர் தனியாக எடுத்துக் கூறவில்லையாயினும், முன்னிலை வினையையே ஏவல் வினையாகக் கொள்கின்றார். 'முன்னிலை வினைச் சொல்லாவது எதிர்முகமாய் நின்றான் தொழிலுணர்த்துவது' என்கின்றார். முன்னிலை வினை ஏவல் பொருளில் வருகின்றது. 'செய்யாய்' என்பதில் 'செய்' என்பது ஏவல் பொருளில் வரும். வந்தாய், போனாய், போனீர் என்பன முன்னிலை வினைச் சொற்கள் ஆகும். ஆனால் இவை ஏவல் பொருளில் வரவில்லை. 'செய்யாய்' முன்னிலை வினையாகவும், ஏவல் வினையாகவும் வரும். ஏவல் வினை எப்போதும் முன்னிலையில் எதிர்காலத்தில் மட்டும் வரும். முன்னிலை வினை வந்தாய், வருகின்றாய், வருவாய் என மூன்று காலங்களிலும் வரும்.

பழந்தமிழில் ஏவல் வினை 'ஆய்' விகுதி பெற்று அமைந்துள்ளன.

உதாரணம்

செய்யாய்

உண்ணாய்


இவை உடன்பாடு, எதிர்மறை, ஏவல் ஒருமை ஆகிய பொருள்களைக் குறித்து நிற்கின்றன.

தொல்காப்பியர் உண்டி, உண்டனை, உண்டாய் என்பவற்றை முன்னிலை வினையாகக் கொள்கின்றார். நன்னூலாரும் உண்டி, உண்டனை, உண்டாய் என்பவற்றையே கொள்கின்றார். உண்ணல், உண்ணேல் என்பன எதிர்மறை வடிவங்களாகும். முன்பழந்தமிழில் 'ஆய்' என்பது உடன்பாடாகவும், பின்பழந்தமிழில் எதிர்மறையாகவும் வந்துள்ளது.

செல்லாய், வாராய் - உடன்பாடு

நோவாய் (நோகாதே) - எதிர்மறை


சங்க இலக்கியங்களில் விடாஅல், தொடாஅல் என்பனவும் கண்டிசின், கேட்டிசின் சென்மதி நல்குமதி செய்மோ, சென்மோ என்பனவும் ஏவல் வினைகளாக உள்ளன.

உதாரணம்

சென்மோ பாடினி நன்கலம் வரைகுவை


காணீர், வருவீர், கண்டனிர், ஆடினிர் முதலியன ஏவல் பன்மைகளாகப் பழந்தமிழிலும் வந்துள்ளன. அறிவிப்பாய், உரையாதி முதலியனவும் வாரும், காட்டும். கொடும் முதலியனவும் சங்கமருவியகாலத் தமிழில் வழக்கில் இருந்தன. பல்லவர்காலத் தமிழில் தருவாய், வருவாய் என எதிர்காலத்தை உணர்த்தும் ஏவல் வினைகள் பயன்படுத்தப்பட்டன. காணும், வாரும் என்பன இக்காலத்தில் இருந்து தற்காலம் வரைக்கும் உள்ளன. அஞ்சேல். அலையேன்மின் முதலியனவும் ஏவல் வினைகளே. திருவாசகத்தில் பாடிற்றிலேன் (பாடவில்லை) எதிர்மறை ஏவல் வினையாகும். இருப்பீர். பேசீர், பேசுதீர் என்பன பன்மை வடிவங்களாகும். பல்லவர். சோழர்காலப் பகுதியான இடைக்காலத் தமிழில் ஈர்கள், மின்கள் எனும் இரட்டைப் பன்மை விகுதி பெற்ற ஏவல் வினைகள் இருந்துள்ளன.

உதாரணம்

உரையீர்கள்

கேண்மின்கள்


மேலும் 'செய்யாதே' எனும் வாய்பாட்டு ஏவல் வினைகளும் உள்ளன.

உதாரணம்

செய்யாதே

தகர்த்தாதே


ஏவல் வினைப் பன்மைக்கு 'கொள்' எனும் விகுதி சேர்க்கப்படுகின்றது.

உதாரணம்

கொல்லும் - கொள் = கொல்லுங்கொள்


பகரத்துடன் இணைந்த ஏவல் வினைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

உதாரணம்

காண்பாய்

உண்பாய்


தற்காலத் தமிழில் வினையடிகள் ஏவல் ஒருமையாகப் பயன்படுத்தப்படுகின்றன. உயர்வற்ற ஏவல் வடிவங்களாகும். ஏவல் ஒருமை வடிவங்களுடன் இவை (விளையடிகளுடன்) ங்கள். உங்கள் ஆகிய விகுதிகளைச் சேர்க்கும்போது ஏவல் பன்மை வடிவம் உருவாக்கப்படுகின்றது. இவ்வடிவங்கள் பன்மையாகவும் மரியாதை ஒருமையாகவும் வரும் தற்காலத் தமிழில் எதிர்மறை ஏவல் பன்மை வடிவமானது பன்மைப் பொருளிலும் மரியாதை ஒருமையிலும் பயன்படுத்தப்படுகின்றன. 

உதாரணம்

நீங்கள் செய்யாதீர்கள் - பன்மைப் பொருள் / மரியாதை ஒருமைப் பொருள்

தம்பி நிற்காதீர்கள் - மரியாதை ஒருமைப் பொருள்


வாரும். இரும் படியும் முதலிய ஏவல் வடிவங்களும் சம வயதினரைச் சுட்டும்வகையில் தற்காலத்தில் பயன்படுத்தப்படுகின்றது.

ஏவல் வினையைக் கடப்பாட்டு ஏவல். விருப்பு ஏவல் எனவும் வகைப்படுத்தலாம். நட, வா நடவுங்கள், வாருங்கள், நடக்காதே, வராதே, நடக்காதீர்கள், வராதீர்கள், நடவும், வாரும் முதலியன கடப்பாட்டு ஏவல் வடிவங்களாகும். கேட்பவர் இவற்றுக்கு ஏற்ப செயற்பட வேண்டும். என எதிர்பார்க்கப்படுகின்றார். கேட்போர் இவற்றுக்கேற்ப செயற்படாது இருக்கலாம். ஆனால் ஏவுவோர் அதைக் கட்டாயம் எதிர்பார்க்கின்றார். ஆகையினால் இவ்வகை ஏவல்கள் கடப்பாட்டு ஏவல் எனப்படுகின்றன.

விருப்பு அல்லது வேண்டல் ஏவல் என்பது ஏவுவோரின் கட்டளையாக அல்லாமல் விருப்பத்தை அல்லது வேண்டுதலை உணர்த்துவதாக உள்ளது. வாவேன், செய்யேன், வாருங்களேன், செய்யுங்களேன் என்பன போன்று 'ஏன்' விகுதி பெற்ற ஏவல்கள் விருப்பு ஏவல் எனப்படும். நீங்களும் வாருங்களேன். நாளைக்கு வீட்டுக்கு வாவேன் முதலியன பேசுவோனின் கட்டளையாக அன்றி விருப்பத்தை வெளிப்படுத்துபவையாக அமைகின்றன.

இவ்வாறு ஏவல் வினைகள் ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு முறைகளில் மாற்றங்களுக்குள்ளாகி வந்துள்ளமையை அவதானிக்கலாம்.




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments