நவராத்திரி விழாவின் சிறப்பும், மகத்துவமும்
கல்வி,செல்வம்,வீரம் என மூன்று சக்திகளை கொண்ட தேவியர்களை நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் ஒன்றுதான் நவராத்திரி விரதம். மனிதனுக்கு அவசியமான இம் மூன்று ஆற்றல்களின் அதிதேவதைகளான, துர்க்கை,லட்சுமி,சரஸ்வதி என முன்று சக்திகளை போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் அனுட்டிக்கப்படுகிறது.
நவராத்திரி விரதம் புரட்டாதி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை தேவியைக் குறித்து நோற்கப்படும் விரதமாகும்.
இது தட்சணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயண காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூஜிக்கச் சிறந்த காலமாகும். இவை இரண்டிலும் புரட்டாதி மாதத்தில் நோற்கப்படும் சாரதா நவராத்திரியே நவராத்திரி விரதமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.
புரட்டாதி மாதத்தில் வளர்ப்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் அனுட்டிக்கப்படும் விரதம் சாரதா நவராத்திரி விரதமாகும்.
நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் வீரசக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க அருள்கின்றான்.
நடுவில் உள்ள மூன்று நாட்களும் செல்வசக்தியின் தோற்றமான லட்சுமியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன போகங்களைக் கொடுக்கும் முறையை அருள்கின்றான்.
இறுதி மூன்று நாட்களும் கல்விசக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன் அறிந்தவாறு அருள் வழங்குகின்றான் என்பது சிவாகமத்தின் உள்ளுறையாகும்.
துர்க்கை,லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவிர்களை கும்பங்களில் ஆவாகனம் செய்து ,ஆலயங்களிலும் இல்லங்களிலும் பிம்பம் (உருவம்) இவைகளால் ஒன்பது நாட்களிலும் வழிபடுபவர்கள், நவராத்திரிக்கு பூஜைக்குத்தேவையான பொருட்களை அமாவாசையன்றே சேகரித்துக் கொண்டு அன்று ஒரு வேளை உணவு உண்டு பிரதமையில் பூஜை தொடங்கவேண்டும். நறுமணமுள்ள சந்தனம், மலர்கள், இவைகளுடன் மா,பலா,வாழை போன்ற முக்கனிகளுடன், நெய் சேர்த்த அன்னம், வடை, பாயாசம் முதலியவைகளை நிவேதித்தல் வேண்டும்.
உலக வாழ் அனைத்து இந்துக்களால் இவ்விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்தியாவில் வடநாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
ஆலயங்களில் விஜயதசமி அன்று வன்னி மரத்துடன் கூடிய வாழை வெட்டுவது வழமை. பண்டாசுரனுடன் தேவி போர் செய்து அவனை அழிக்கமுடியாமல் சிவபிரானை வழிபட்டு விஜயதசமியில் போர் செய்யும் போது அவன் வன்னி மரத்தில் ஒளிந்தான். தேவி வன்னி மரத்தை சங்கரித்து அசுரனைச் சங்காரம் செய்தாள் என்பர்.
இதுவே நாளடைவில் கன்னிவாழை வெட்டு என்று மருவி வழங்கலாயிற்று. அசுரனைச் சங்கரித்த நேரம் மாலைப் பொழுதில் இதனை ஞாபகப்படுத்தும் முகமாக வாழை வெட்டுவது வழக்கம்.
நவராத்திரி விரத நியதிகள் (Navratri Fasting Rules)
புரட்டாதி மாத வளர்பிறை பிரதமைத் திதியில் கும்பம் வைத்து நவமி வரை பூசை செய்தல் வேண்டும். வீடுகளிலும் ஆலயங்களிலும் கொலுவைத்தல் வேண்டும். விரதம் கைக்கொள்ளுவோர் அமாவாசையில் ஒரு வேளை உணவு உண்டு பிரதமை தொடக்கம் முதல் எட்டு நாட்களும் பகல் உணவின்றி இரவு பூஜை முடிந்தபின் பால் பழம் அல்லது பலகாரம் உண்பது நல்லது.
ஒன்பதாவது நாளாகிய மகாநவமி அன்று உபவாசம் இருந்து மறுநாள் விஜயதசமியன்று விரதம் விட வேண்டும். விஜயதசமி அன்று காலையில் சுவையுள்ள உணவுப்பதார்தங்கள் தயார் செய்து சக்திக்கு நிவேதித்து நவமியில் வைத்துள்ள புத்தகம் இசைக்கருவிகளைப் பாராயணம் செய்து குடும்ப அங்கத்தவர்களுடன் பாறணையைப் பூர்த்தி செய்யலாம்.
முப்பெரும் தேவியர்களின் பூரண திருவருள் இந்நவராத்திரி நந்நாட்களில் இப்பூலகில் அனைவருக்கும் கிட்டுவதாக.
நவராத்திரி கும்பம் வைத்தல் (Keeping Navratri Kumbha)
நறுமணமுள்ள சந்தனம், பூ (மலர்), இவைகளுடன் மாதுளை, வாழை, பலா, மா முதலியவற்றின் கனிகளை மிகுதியாக வைத்து நெய் சேர்த்த அன்னம், வடை, பாயாசம் முதலியவைகளை நிவேதித்தல் வேண்டும். புனுகு, கோரோசனை, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, சந்தனம், அகிற்பட்டை பன்னீர் இவைகளுடன் கூடிய அஷ்ட கந்தகம் சாத்தித் துதித்துப் பலவித ஆடல் பாடல்களால் தேவியை மகிழச் செய்யவேண்டும்.
நவராத்திரி குமாரி பூஜை (Navratri Kumari Puja)
குமாரி பூசை நவராத்திரி காலத்தில் இன்றியமையாததாகும். இரண்டு வயதிற்கு மேல் பத்து வயதிற்கு உட்பட்ட குமாரிகளே பூசைக்கு உரியவர்கள் முதல் நாள் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஒரு குமாரியாக முறையே குமாரி, திருமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளி, சாண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்திரா என்ற பெயர்களால் பூசிக்கப்படவேண்டும். பூசிக்கப்படும் குமாரிகள் நோயற்றவர்களாகவும் அழகுள்ளவர்களாகவும் இருக்கவேண்டும். குமாரிகளுக்கு ஆடை, அணி, பழம், தாம்பூலம், மலர், சீப்பு, கண்ணாடி முதலிய மங்களப் பொருட்கள் மஞசள் குங்கும, தட்சணை கொடுத்து உபசரித்து அறுவகை சுவைகளுடன் அமுது செய்வித்தல் வேண்டும்.
நவராத்திரி விஜயதசமி (Navratri Vijayadashami)
நவராத்திரியில் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள் போரின்போது மகிஷாசுரனை வதம் செய்தாள் என்றும் இது நவமியில் நிகழ்ந்ததாகவும் மறுநாள் தசமியில் தேவர்கள் வெற்றியை ஆயுத பூசை செய்து கொண்டாடியபடியால், விஜயதசமி என்றும் வழங்கலாயிற்று என்று சொல்வது உண்டு. இவ்விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும்.
நவராத்திரி கன்னி வாழை வெட்டல் (Navratri virgin banana cutting)
ஆலயங்களில் விஜயதசமி அன்று வன்னி மரத்துடன் கூடிய வாழை வெட்டுவது வழமை. பண்டாசுரனுடன் தேவி போர் செய்து அவனை அழிக்கமுடியாமல் சிவபிரானை வழிபட்டு விஜயதசமியில் போர் செய்யும் போது அவன் வன்னி மரத்தில் ஒளிந்தான். தேவி வன்னி மரத்தை சங்கரித்து அசுரனைச் சங்காரம் செய்தாள் என்பர். இதுவே நாளடைவில் கன்னிவாழை வெட்டு என்று மருவி வழங்கலாயிற்று. அசுரனைச் சங்கரித்த நேரம் மாலை வேளை, செங்கட் பொழுதில் இதனை ஞாபகப்படுத்தும் முகமாக வாழை வெட்டுவது வழக்கம்.
நவராத்திரி 9 நாள் வழிபாடு எவ்வாறு செய்ய வேண்டும் (How to perform Navratri 9 day worship)
நவராத்திரிக்கு துர்க்கையான பார்வதியை முதல் 3 நாட்களும், அடுத்து லட்சுமியை 3 நாட்களும், இறுதி 3 நாட்கள் சரஸ்வதியையும் 10-வது நாள் விஜய சாமுண்டீஸ்வரியாக வணங்க வேண்டும்
நவராத்திரி பண்டிகையின் முக்கிய நோக்கமே, நாம் எல்லோரும் ஒன்றே, அனைத்தும் இறைசக்தியின் வடிவமே என்று உணர்த்துவதுதான். துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று இறைசக்திகளும் ஒன்று சேர்ந்து மகிஷாசுர மர்த்தினியாக அவதாரம் எடுத்து, மகிஷன் எனும் அரக்கனை அழிப்பதையே நவராத்திரி வரலாறு என்கிறார்கள்.
துர்க்கையான பார்வதியை முதல் 3 நாட்களும், அடுத்து லட்சுமியை 3 நாட்களும், இறுதி 3 நாட்கள் சரஸ்வதியையும் 10-வது நாள் விஜய சாமுண்டீஸ்வரியாக வணங்க வேண்டும்.
துர்க்கையை வணங்கினால் தீய எண்ணங்கள் வேரோடு அழிந்து மன உறுதி கிடைக்கும். லட்சுமியை வணங்கினால் பொன், பொருள், நல்ல ஒழுக்கம், உயர்ந்த பண்பாடுகள், கருணை, மனிதநேயம், நல்ல சிந்தனைகள் கிடைக்கும். சரசுவதியை வழிபட்டால் ஞானம், உயர்ந்த கல்வி, கலைகளில் தேர்ச்சி கிடைக்கும்.
இந்த மூன்று சக்திகளும் நவராத்திரியின் 9 நாட்களும் எந்தெந்த வடிவில் நமக்கு காட்சித் தருகிறார்கள்? அவர்களை எப்படி வணங்க வேண்டும்? என்ன நைவேத்தியம் செய்ய வேண்டும்? அதனால் என்ன பலன் கிடைக்கும்? என்பன போன்றவற்றை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். 9 நாட்களும் இதன்படி பூஜைகள் செய்தால் அளவற்ற பலன்களை பெறலாம்.
நவராத்திரி முதல் நாள் (First day of Navratri)
வடிவம் : மகேஸ்வரி (மது கைடவர் என்ற அசுரனை அழித்தவள்)
பூஜை: 2 வயது சிறுமியை குமாரி அவதாரத்தில் வணங்க வேண்டும்.
திதி: பிரதமை
கோலம் : அரிசி மாவால் பொட்டுக் கோலம் போட வேண்டும்.
பூக்கள் : மல்லிகை, சிவப்புநிற அரளி, வில்வ பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நைவேத்தியம் : வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, சுண்டை, பருப்பு வடை.
ராகம் : தோடி ராகத்தில் பாட வேண்டும்.
பலன் : வறுமை நீங்கும், வாழ்நாள் பெருகும்.
நவராத்திரி இரண்டாம் நாள் (Navratri is the second day)
வடிவம் : ராஜராஜேஸ்வரி (மகிஷனை வதம் செய்ய புறப்படுபவள்)
பூஜை : 3 வயது சிறுமியை கவுமாரி வடிவமாக வணங்க வேண்டும்.
திதி : துவிதியை
பூக்கள் : முல்லை, துளசி, மஞ்சள்நிற கொன்றை, சாமந்தி, நீல சம்பங்கி பூக்களால் பூஜிக்க வேண்டும்.
நைவேத்தியம் : புளியோதரை, எள் பாயாசம், தயிர்வடை, வேர்க்கடலை சுண்டல், எள் சாதம்.
ராகம் : கல்யாணி ராகத்தில் கீர்த்தனைகள் பாடலாம்.
கோலம் : மாவினால் கோலம் போட வேண்டும்.
பலன் : நோய்கள் நீங்கும், உடல் ஆரோக்கியம் பெருகும்.
நவராத்திரி மூன்றாம் நாள் (Navratri is the third day)
வடிவம் : வாராகி (மக்கிஷனை அழித்தவள்)
பூஜை : 4 வயது சிறுமியை கல்யாணி வேடத்தில் பூஜித்து வணங்க வேண்டும்.
திதி : திருதியை
கோலம் : மலர் கோலம் போட வேண்டும்.
பூக்கள் : செண்பக மொட்டு, குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நைவேத்தியம் : கோதுமை சர்க்கரைப் பொங்கல், காராமணி சுண்டல்.
ராகம் : பாட வேண்டிய ராகம் காம்போதி.
பலன் : தணதானியம் பெருகும் வாழ்வு சிறப்பாக அமையும்.
நவராத்திரி நான்காம் நாள் (Navratri is the fourth day)
வடிவம் : மகாலட்சுமி (சிங்காசனத்தில் வெற்றி திருக்கோலம்)
பூஜை : 5 வயது சிறுமிக்கு ரோகிணி வேடத்தில் பூஜிக்க வேண்டும்.
திதி : சதுர்த்தி.
கோலம் : அட்சதை கொண்டு படிக்கட்டு போல கோலமிட வேண்டும்.
பூக்கள் : செந்தாமரை, ரோஜா மற்றும் ஜாதி பூக்களால் அர்ச்சிக்க வேண்டும்.
நைவேத்தியம் : தயிர் சாதம், அவல் கேசரி, பால் பாயாசம், கற்கண்டு பொங்கல், கதம்ப சாதம், உளுந்துவடை, பட்டாணி சுண்டல்.
ராகம் : பைரவி ராகத்தில் பாடலாம்.
மாலை : கஸ்தூரி மஞ்சள், முத்து போன்றவற்றால் மாலை செய்து போடலாம்.
பலன் : கடன் தொல்லை தீரும்.
நவராத்திரி ஐந்தாம் நாள் (Navratri is the fifth day)
வடிவம் : மோகினி (சும்ப நிசும்பனின் தூதர்கள் தூது போன நாள்)
பூஜை : 6 வயது சிறுமியை வைஷ்ணவி வேடத்தில் பூஜிக்க வேண்டும்.
திதி : பஞ்சமி.
கோலம் : கடலை மாவால் பறவை கோலம் போட வேண்டும். வாசனை தைலத்தால் அலங்கரிக்க வேண்டும்.
பூக்கள் : கதம்பம், மனோரஞ்சிதம் பூக்களால் பூஜிக்க வேண்டும்.
நைவேத்தியம் : சர்க்கரை பொங்கல், கடலை பருப்பு வடை, பாயாசம், தயிர் சாதம், பால் சாதம், பூம்பருப்பு சுண்டல்.
ராகம் : பஞ்சமாவரணை கீர்த்தனைகள் பாட வேண்டும். பந்துவராளி ராகமும் பாடலாம்.
பலன் : நாம் விரும்பும் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.
நவராத்திரி ஆறாம் நாள் (Navratri is the sixth day)
வடிவம் : சண்டிகாதேவி (சர்பராஜ ஆசனத்தில் அமர்ந்திருக்கும் கோலம்)
பூஜை : 7 வயது சிறுமியை இந்திராணி, காளிகாவாக நினைத்து பூஜிக்க வேண்டும்.
திதி : சஷ்டி.
கோலம் : கடலை மாவினால் தேவி நாமத்தை கோலமிட வேண்டும்.
பூக்கள் : பாரிஜாதம், விபூதிப் பச்சை, செம்பருத்தி, சம்பங்கி, கொங்கம்.
நைவேத்தியம் : தேங்காய் சாதம், தேங்காய் பால்பாயாசம், ஆரஞ்சு பழம், மாதூளை, பச்சைப்பயறு சுண்டல், கதம்ப சாதம்.
ராகம் : நீலாம்பரி ராகத்தில் பாடலாம்.
பலன் : வழக்குகளில் வெற்றி உண்டாகும். கவலைகள் நீங்கி பொருட்கள் சேரும்.
நவராத்திரி ஏழாம் நாள் (Navratri is the seventh day)
வடிவம் : சாம்பவித் துர்க்கை (பொற் பீடத்தில் ஒரு பாதம் தாமரை மலரில் இருக்க வீணை வாசிக்கும் தோற்றம்)
பூஜை : 8 வயது சிறுமியை பிராக்மி மகா சரஸ்வதி, சுமங்கலியாக கருதி பூஜிக்க வேண்டும்.
திதி : சப்தமி
கோலம் : நறுமண மலர்களால் கோலமிட வேண்டும்.
பூக்கள் : தாழம்பு, தும்பை, மல்லிகை, முல்லை.
நைவேத்தியம் : எலுமிச்சம் பழசாதம், பழ வகைகள், வெண்பொங்கல், கொண்டக்கடலை சுண்டல், பாதாம் முந்திரி பாயாசம், புட்டு.
ராகம் : பிலஹரி ராகத்தில் பாடி பூஜிக்க வேண்டும்.
பலன் : வேண்டும் வரம் அனைத்தும் கிடைக்கும்.
நவராத்திரி எட்டாவது நாள் (Navratri is the eighth day)
வடிவம் : நரசிம்ம தாரினி (கரும்பு வில்லுடன் சுற்றிலும் அணிமா முதலிய அஷ்ட சக்திகளுடன் ரக்த பீஜனை சம்காரம் செய்த வடிவம்)
பூஜை : 9 வயது சிறுமியை மகா கவுரியாக பூஜிக்க வேண்டும்.
திதி : அஷ்டமி.
கோலம் : பத்ம கோலம்
பூக்கள் : மருதோன்றி, சம்பங்கி பூக்கள், வெண்தாமரை, குருவாட்சி.
நைவேத்தியம் : பால்சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை சுண்டல்.
ராகம் : புன்னகை வராளி ராகத்தில் பாடி பூஜிக்கலாம்.
பலன் : நமக்கு இஷ்ட சித்தி உண்டாகும்.
நவராத்திரி ஒன்பதாம் நாள் (Navratri is the ninth day)
வடிவம் : பரமேஸ்வரி, சுபத்ராதேவி (கையில் வில, பாணம், அங்குசம், சூலத்துடன் தோற்றம்)
பூஜை : 10 வயது சிறுமியை சாமுண்டி வடிவில் வழிபட வேண்டும்.
திதி : நவமி
கோலம் : வாசனைப் பொடிகளால் ஆயுதம் போன்ற கோலம் போட வேண்டும்.
பூக்கள் : தாமரை, மருக்கொழுந்து, துளசி, வெள்ளை மலர்கள்.
நைவேத்தியம் : சர்க்கரை பொங்கல், உளுந்து வடை, வேர்க்கடலை, சுண்டல், கடலை, எள் பாயாசம், கேசரி, பொட்டுக்கடலை, எள் உருண்டை.
ராகம் : வசந்த ராக கீர்த்தனம் பாடி தேவியை மகிழ்விக்க வேண்டும்.
பலன் : ஆயுள், ஆரோக்கியம் பெருகும். சந்ததிகள் சவுக்கியமாக இருப்பார்கள்.
நவராத்திரி பத்தாவது நாள் (Navratri is the tenth day)
வடிவம் : அம்பிகை. இவளுக்கு விஜயா என்ற பெயரும் உண்டு (ஸ்தூல வடிவம்)
திதி : தசமி
பலன் : புரட்டாசி மாதம் சுக்ல பட்சமியே விஜயதசமி. மூன்று சக்திகளும், தீய சக்தியை அழித்து, வெற்றி கொண்டு அனைவருக்கும் நன்மைகளை அள்ளித்தந்து அருள் பாலிக்கும் சுபநாள். இன்று தொடங்கும் எல்லா காரியங்களும் வெற்றி மீது வெற்றி பெறும்.
நைவேத்தியம் : பால் பாயாசம், காராமணி சுண்டல், இனிப்பு வகைகள். பூக்கள் : வாசனைப் பூக்கள்.
நவராத்திரி சுண்டல் நிவேதனம் (Navratri Sundal Nivedanam)
நவராத்திரியில், அம்பாளுக்கு விதவிதமான சுண்டல், பாயாச வகைகள் நிவேதனம் செய்யப்படுகிறது. அறிவியல் ரீதியாகவும் இதற்கு காரணம் உண்டு.. தேவர்களுக்கு சிவன், விஷ்ணு அமிர்தம் தந்து, அவர்களை காத்தது போல, பூமி உயிர்வாழ “மழை என்னும் அமிர்தத்தைத் தருகிறார்கள்.
இதனால் பூமி “சக்தி பெறுகிறது. அந்த சக்தி எனும் பெண்ணுக்கு, பூமியில் விளைந்த விதவிதமான தானியங்கள் பக்குவப்படுத்தப்பட்டு நிவேதனம் செய்யப்பட்டது. அதில் சுண்டல் பிரதான இடம் பெற்றது. நவராத்திரி காலமான புரட்டாசி, ஐப்பசியில் அடைமழை ஏற்படும். இதனால் தோல்நோய் போன்றவை அதிகமாகும். இதைப் போக்கும் சக்தி சுண்டலுக்கு உண்டு.
விரதகாலங்களில் ஓதத்தக்க தோத்திரப்பாடல்கள்
- தேவி மகாத்மியம்
- அபிராமி அந்தாதி
- துர்க்கா அஷ்டகம்
- இலட்சுமி தோத்திரம்
- 👉சகலகலாவல்லி
- சரஸ்வதி அந்தாதி
- மஹிஷாசுரமர்த்தினி தோத்திரம்
- ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்
0 تعليقات