கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை நட்சத்திரங்களின் ஞாபகக் குறிப்புகள்
நரையோடிய அந்திம பொழுதின் இரவு
ஒளிரும் விண்மீன்களை உற்றுப் பார்க்கிறேன்
பெரிதாய் விரிந்து பரவசமூட்டும் விண்மீன்கள்
அதன் ஒளிவட்டத்தில் விரியும் காட்சி
அன்னையின் இடுப்பில் ஆனந்தமாய் நான்
அடுத்த படலத்தில் தந்தையின் தோளில்
படிக்கும் வயதில் பால்ய நண்பர்களுடன்
பதின்ம வயதில் பிடித்த தோழியுடன்
நான் வானில் இரசித்த தாரகைகள்
இன்னமும் மங்காத ஒளியோடு நினைவலைகளை
சுமந்தபடி உற்றுப் பார்க்கிறது என்னை
தனிமையின் தவிப்பில் கண்களில் கண்ணீர்
என்னில் பாதியவள் மரணத்தை முத்தமிட
என்னுதிரத்தின் எச்சங்கள் புலம்பெயர்ந்து சென்றிட
ஊன்றுகோலின் உதவியோடு ஆறிய தேநீராய்
எஞ்சிய வாழ்க்கையை சலிப்புடன் நகர்த்துகிறேன்
உதிரும் இலையாய் சலனமற்று இரு
மண்ணில் விழுந்தால் மட்கி உரமாவாய்
விண்ணில் கலந்தாலும் என்னுள் ஒளியாவாய்
பஞ்சித கூட்டங்கள் வாவென அழைக்க
உடலை விட்டு விலகுகிறேன் மகிழ்வோடு...
நன்றி - கி.இலட்சுமி
வணக்கம் நண்பர்களே!
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..
0 تعليقات