நவீன அரசியல் மற்றும் சமூக சிந்தனையில் கோட்பாடு என்ற எண்ணக்கரு பொதுவாக சமூகத்தில் நடைபெறும் தோற்றப்பாடுகள் எவ்வாறு ஏற்படுகின்றது என்பதை தெளிவுபடுத்தவும் விவரிக்கவும் கல்வியியலாளர்கள் பயன்படுத்தும் விதி முறைகளுக்கான கருவி ஒன்றாகவே பயன்படுத்தப் பட்டுள்ளது. கீழ் குறிப்பிடப்பட்டுள்ள உதாரணங்களின் மூலம் இதனை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
விஞ்ஞானத்தில் “கோட்பாடு” எனப்படுவது சிறு எண்ணக்கருவாக சூத்திரப் படுத்தக்கூடிய ஒரு காரணகாரிய தொடர்புகளின் அடிப்படையில் கட்டியெழுப்பப் படும் விஞ்ஞான ரீதியான ஒரு வெளிப்பாடாகும். உலகில் இயற்கையாகவோ அல்லது சமூக அல்லது அரசியல் ரீதியாகவோ உலகத்தில் நாம் கண்காணிக்கும் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் பற்றியல்லாமல் அவை உள்ளடக்கப்பட பல பிரிவுகள் பற்றிய விவரிப்புகள் பலவற்றின் அதாவது ஒட்டுமொத்த தோற்றப்பாடுகள் பற்றிய விவரிப்பு மற்றும் வெளிப்படுத்துவதே விஞ்ஞான ரீதியான கோட்பாடாகும். பொதுவாக மேற்கொள்ளும் செயற்பாடாகும் இதன்படி கோட்பாடு என்பது உலகில் ஏற்படும் பொது தோற்றப்பாடுகள் பற்றிய தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ள விஞ்ஞானிகள் பயன்படுத்தும் கற்றல் கருவியாகும். கோட்பாடு உருவாக்கப்படல் இயல்பானதும் சமூகவியலாளர்களின் ஒரு முக்கிய விடயமாகும்.
அரசியல் கோட்பாடு என்பதற்கு இரு விளக்கங்கள் உள்ளன.
இலட்சியக் கோட்பாடு.
விஞ்ஞான (தர்க்க) ரீதியான கோட்பாடு.
இலட்சிய கோட்பாடு என்பது அரசியல் தத்துவம் அரசியல் சிந்தனையுடன் ஒன்றிணைக்கப்பட்ட கோட்பாடாகும். இது பிளேட்டோ முதல் இன்று வரை காணப்படும் அரசியல் தத்துவங்கள் சம்பிரதாயங்களுடன் தொடர்பு பட்டுள்ளது. இந்த சம்பிரதாயங்கள் பிரதானமாக அரசியல் அரசு, அரசியல் அதிகாரம் ஆட்சி செய்தல் மற்றும் சமூகக் கொள்கைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை முன்வைக்கும் சித்தாந்த மூல கொள்கைகளே அரசியல் கோட்பாடுகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.
அரசு தொடர்பான அரிஸ்டோட்டிலின் கோட்பாடு, சமூக ஒப்பந்தம் தொடர்பான கொப்ஸ் மற்றும் லொக் என்போரின் கோட்பாடு, அதிகாரம் தொடர்பான லிபரல் வாதிகளின் கோட்பாடு போன்றன இலட்சியவாத கோட்பாடு தொடர்பாக தோற்றம் பெறும் உதாரணங்களாகும்.
அரசறிவியலில் விஞ்ஞான ரீதியான கோட்பாடு தொடர்பான கருத்துகள் 1930-களில் இணைந்தது. அது “சமூகவியலாளர்களின் விஞ்ஞான ரீதியான பார்வை” என்ற பின்புலத்திலாகும். இந்த விஞ்ஞான ரீதியான சமூகவியல் சம்பிரதாயத்தினுள் கோட்பாடு என்பது இயற்கை விஞ்ஞான சம்பிரதாயத்தினுள் கோட்பாடு எண்ணக்கருவாக்கப்பட்ட முறையிலேயே விளக்கப்பட்டது
தற்கால அரசறிவியலில் நாம் மேற்குறிப்பிட்ட இலட்சியவாத மற்றும் விஞ்ஞான பூர்வம் என்ற அணுகுமுறைகளும் பயன்படுத்தப்படும். இதற்கிடையில் இருபதாம் நூற்றாண்டு மற்றும் சமகால அரசறிவியல் கோட்பாட்டுத் துறையானது அணுகுமுறைகள் பலவற்றை உள்ளடக்கி உள்ளது, என்பதை எங்களால் அவதானிக்க முடிகின்றது. இவ்வாறான பிரதான கோட்பாட்டுப் பிரிவுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன அவையாவன
தாராண்மைவாத அரசியல் கோட்பாடு
குடியரசு வாத அரசியல் கோட்பாடு
மாக்ஸ்வாத அரசியல் கோட்பாடு
பின் மாக்ஸ்வாத அரசியல் கோட்பாடு
அரசியல் நவீனமயமாதல் கோட்பாடு
பெண்ணியல் வாத அரசியல் கோட்பாடு
பின் நவீனத்துவ அரசியல் கோட்பாடு
பின் காலனித்துவ அரசியல் கோட்பாடு
என்பன அடங்குகின்றன எனலாம்.
அரசறிவியலில் மாக்சிஸ கோட்பாடானது முதன்மையானதாகக் காணப்படு கின்றது. கார்ல்மாக்ஸ் 1818 ஆம் ஆண்டு ஜேர்மனியில் பிறந்தார். அவர் ஆரம்ப காலங்களில் வரலாறு, சட்டவியல், தத்துவம் போன்ற துறைகளில் கல்விசார் முயற்சிகளில் ஈடுபட்டு வந்ததுடன் சோசலிச கருத்துகளில் அதிக ஆர்வம் கொண்டிருந்த மாக்ஸ் நடைமுறை ஐரோப்பிய பொருளாதார முறையை குறித்து கடுமையான விமர்சனங்களை உடையவராய் இருந்தார். 1843 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்ற அவர் தனது இறுதி நாட்கள் வரையிலும் 30 ஆண்டுகள் அளவிற்கு இங்கிலாந்திலேயே தங்கியிருந்து கல்வி ஆய்வுகளிலும் எழுத்துப் பணிகளிலும் ஈடுபட்டார். இம்முயற்சியில் தனது இங்கிலாந்து நண்பரான பிரட்;றிக் ஏங்கல்ஸ் உடன் இணைந்து முன்வைத்த கோட்பாடானது கம்யூனிசம் என்று அழைக்கப்படலாயிற்று. சோசலிசத்தின் தந்தை என அழைக்கப்படும் கால்மாக்ஸ் வெளியிட்ட கருத்துக்கள் “கம்யூனிசம்” என ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட போதும் பிற்காலத்தில் அது மாக்சிஸம் என மாற்றப்பட்டது
01) வரலாற்றுப் பொருள் முதல்வாதம்
மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகிய இருவரும் அரசு பற்றிய சமதர்மக் கோட்பாட்டை முன்வைக்கையில், குறிப்பாக 19ம் நூற்றாண்டில் பிரித்தானிய பொருளாதாரம், ஜேர்மனிய தத்துவம், முதலாம் பிரான்சிய புரட்சி என்பவற்றின் செல்வாக்கிற்கு உட்படுத்தப்பட்டு அதனை மேற்கொண்டதுடன், தமது கோட்பாட்டை “முதலாவது விஞ்ஞான சோசலிசம்” எனப் பிரகடனப்படுத்தினார். இக் கோட்பாட்டின் அடிப்படை அம்சமாக பொருளாதாரம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பொருளாதார காரணிகளின் அடிப்படையில் வரலாற்று மாற்றங்களையும் அரசின் தோற்றத்தையும் விளக்க முற்பட்ட மாக்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் ஆகிய இருவரும் மாற்றங்கள் தனித்து பொருளாதாரக் காரணிகளினாலே நிர்ணயிக்கப்படும் என வலியுறுத்தினார். பொருளாதாரத்தினை அடிப்படையாகக் கொண்ட தமது கோட்பாட்டில் உற்பத்தி முறையினை முக்கிய அம்சமாக கருதிய மாக்ஸ் உற்பத்தி முறைகளே மனிதர்களுக்கு இடையிலான உறவுகளை நிர்ணயிப்பதாகவும் உற்பத்தி முறைகளில் அல்லது தொழிநுட்பத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் உற்பத்தி உறவுகளிலும வலிமைமிக்கவை எனவும் வலியுறுத்தினார்.
மார்க்ஸ் தனது “Misery of Philosophy”எனும் நூலில் உற்பத்தி முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் மனித இனம் தமது எல்லா சமூக உறவுகளையும் மாற்றிக் கொள்கிறது. சிறு கைத்தொழிற்சாலை கைத்தொழில் நிலப்பிரபுவுடன் கூடிய சமூகத்தை உருவாக்க நீராவி தொழிற்சாலை கைத்தொழில் முதலாளியுடன் கூடிய சமூகத்தை உருவாக்கியுள்ளது எனவும் கூறியதுடன், சமூக
அடிப்படையை நிர்ணயிப்பதில் உற்பத்தி முறைமையும் அதன் வழி பொருளாதாரமும் பெரும் பங்கு வகிக்கின்றன என கருதினார்.
ஏங்கல்ஸின் கருத்து பொருளாதார முறைமையே அரசியல், சட்ட, நீதி, அறிவியல் முறைமைகளின் அடிப்படையை வழங்குகின்றது என்பதாக இருந்தது எனலாம். இவ்விதம் சமூக உறவு, வரலாற்று வளர்ச்சி என்பவற்றின் பொருளாதார அடிப்படையை வலியுறுத்தும் மார்க்சிஸம் இவை வர்க்க முரண்பாடுகளின் மூலம் வரலாற்றுப் போக்கை நிர்ணயிக்கின்றன என விளக்குகின்றது. மார்க்ஸ் தனது கம்யூனிச கட்சி அறிக்கையில் வர்க்க முரண்பாட்டினை விளக்குகின்ற போது எல்லா சமூகங்களின் வரலாறும் வர்க்க முரண்பாட்டின் வரலாறே எனக் கூறுவதுடன் அதனை ஆதாரங்களுடன் நிரூபிக்க முற்படும் போது அவர் தற்கால முதலாளித்துவ சமுதாயத்தில் முதலாளி களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் வர்க்க முரண்பாட்டு வரலாற்றின் வளர்ச்சி கட்டமே எனக் சுட்டினார் எனக் கூறலாம்.
02) இயக்கவியல் எண்ணக்கரு
மாக்சிஸக் கோட்பாட்டை விளக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட எண்ணக்கருக்களுள் முக்கியத்துவம் வாய்ந்தது இயக்கவியல் எண்ணக்கருவாகும். இதனை மார்க்ஸ் ஹெகலிடமிருந்து பெற்றுக் கொண்டார். மார்க்ஸ், ஹெகல் இருவரும் இயக்கவியல் கோட்பாட்டை தமது எண்ணக்கருவுக்கு சார்பாக பயன்படுத்தும் போதும் மார்க்ஸ் ஹெகலின் இயக்கவியல் கருத்துகளை பூரணமாக ஏற்றுக் கொண்டிருந்தார், எனக் கூறுவதற்கில்லை. அவர் ஹெகலின் இயக்கவியல் அடிப்படையினால் மட்டுமே கவரப்பட்டிருந்தார். ஹெகல் தனது இயக்கவியல் கருத்துக்களில் இறையியலுக்கு முக்கியத்துவம் கொடுத்ததுடன் இறைவன் என்பதனையும் பயன்படுத்தினார். ஆயினும் மார்க்ஸ் ஹெகலின் ஆன்மீகக் கருத்துக்களை நிராகரித்து பொருளியல் அம்சங்களை பிரயோகிக்க முற்பட்டார். இயக்கவியலின் தோற்றம் பண்டைய கிரேக்க அரசுகளில் அடையாளம் காணப்படுகின்றது. இங்கு கேள்விகள் அவற்றின் பதில்கள் என்பவற்றின் மூலம் உண்மையை அடைந்து கொள்ளும் வரை இத்தகைய செயல் முறை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளமை அவதானிக்கப்படுகின்றது. இம்முறையினை பிளேட்டோ தனது நூலான குடியரசில் பயன்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இயக்கவியலை மார்க்ஸ் தனது பொருளியல் கோட்பாடுகளில் பயன்படுத்தியுள்ளமையினால் அது இயக்கவியல் பொருள்முதல் வாதம் எனவும் அழைக்கப்படுகின்றது.
03) வரலாற்று வளர்ச்சி
இயக்கவியல் பொருள்முதல் வாதத்தின் அடிப்படையில் வரலாற்று வளர்ச்சியை விளக்கும் மார்க்ஸ் உலக வரலாற்றின் முக்கியமான ஐந்து கட்டங்களை அடையாளம் காணுகிறார். தனது கருத்தின் படி இயக்கவியல் பொருள்முதல் வாதத்தின் மூலம் எல்லா வரலாறுகளுக்கும் விளக்கம் அளிக்க முடியும் என உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருந்த அவர் அவ்வடிப்படையில் வரலாற்றின் எதிர்கால வளர்ச்சி போக்கினையும் முன்வைக்க முடியும் என கருதினார். அதாவது அடிப்படை வேறுபாடுகள் ஏற்படாதிருப்பின் வரலாற்று வளர்ச்சி ஒரே போக்கையே கொண்டிருக்கும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்திருந்தது.
வரலாற்று ஆதாரங்களுடன் தனது கோட்பாட்டை முன் வைக்கின்ற மார்க்ஸ் கடந்த காலத்தையும் அதனடிப்படையில் எதிர்காலத்தையும் விளக்குகின்ற போது
புராதன கம்யூனிச சமுதாயம்
அடிமை உடைமை சமுதாயம்
நிலமானிய சமுதாயம்
முதலாளித்துவ சமுதாயம்
சோசலிச சமுதாயம்
இலட்சிய கம்யூனிச சமூகம் என்பவற்றை குறிப்பிடலாம்
புராதன கம்யூனிச சமுதாயம்
மார்க்ஸின் வரலாற்று வளர்ச்சியில் முதலாவதாக அதன் காலகட்டத்தை நோக்குவோமானால் பழமை வாய்ந்த காலப்பகுதியாகும். நாகரிகம் வளர்ச்சி அடைந்திராத மனித இனத்தின் மிக ஆரம்ப காலத்தை குறிக்கும் இது அதன் தன்மை நிலை காரணமாக அமைதியானதாகவும் அரசற்றதாகவும் விளங்கி இருந்தது. இங்கு வர்க்க வேறுபாடுகளோ சுரண்டல் முறைகளோ காணப்பட வில்லை. புராதன கம்யூனிச சமுதாயத்தை விளக்கும் மார்க்ஸ் புராதன மனிதன் நிலையாக ஓரிடத்தில் வாழாது நாடோடியாகத் தனது குழுவுடன் வாழ்ந்த காலம் என வர்ணித்துள்ளார்.
இங்கு உற்பத்திச் சாதனங்கள் வளர்ச்சியடையாத ஒரு நிலையில் பழவகைகளை சேகரித்தல், வன விலங்குகளை வேட்டையாடுதல், மீன்பிடித்தல் போன்ற வற்றின் மூலம் மனிதர்கள் தமது வாழ்க்கைக்கு தேவையானவற்றை பெற்று வந்தனர். இம்முயற்சியில் அவரவர்கள் தனித்தனியாக அன்;றி கூட்டங்களாக இயங்க வேண்டிய நிலை
காணப்பட்டது. தனது உணவுக்கும் அத்தியாவசிய தேவைகளுக்குமான கூட்டு உழைப்பு மூலம் அடையப்பட்ட உற்பத்தி அவர்களுக்கிடையில் சமமாகப் பகிரப்பட்டமையினால் அது தொடர்ந்தும் கூட்டு முயற்சியையும் கூட்டு வாழ்க்கையையும் உத்தரவாதப் படுத்துவதாக அமைந்திருந்தது. இத்தகைய முறை அவர்களுக்கிடையில் சுரண்டல் முறைகளுக்கோ அன்றி வர்க்கவேறுபாடுகளுக்கோ இடமளிக்கவில்லை எனலாம். ஆரம்பகால மெதுவான வளர்ச்சி வேகம் இம்முறையை ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்திருக்க உதவியது. மக்கள் சமத்துவத்துடனும் முரண்பாடுகள் இன்றியும் வாழ்ந்தமையினால் இங்கு அரசு என்ற நிறுவனத்தின் தேவையும் ஏற்படவில்லை எனவே இச்சமுதாயம் அரசற்ற சமுதாயமாகவே இருந்தது என்பது மார்க்ஸின் கருத்தாகும்.
அடிமை உடைமை சமுதாயம்
ஆதிக் கம்யூனிச சமுதாயம் அவ்விதமே நீண்ட காலம் நிலைத்திருக்க முடியவில்லை. தமது தேவைகளுக்காக மட்டுமே உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆதிகுடிகள் இயற்கை சாதக நிலை போன்ற வேறுபட்ட காரணிகளின் அடிப்படையில் உற்பத்தியைப் பெருக்கி கொள்ளக்கூடிய நிலை காணப்பட்ட அதேவேளை ஆரம்பத்தில் தமது உற்பத்திகளுக்கான ஆயுதங்களை பயன்படுத்திய நிலை மாற்றமடைந்து இரும்பு, வெண்கலம் போன்ற ஆயுதங்களை பயன்படுத்த முற்பட்டமை உற்பத்தி இயலுமையை அதிகரிக்க கூடிய அதிகரித்த சூழ்நிலையை ஏற்படுத்தி இருந்தது. விவசாய உற்பத்தி முறைகளிலான அபிவிருத்தியும் ஏற்பட்டிருந்தமையால் உணவுப் பொருட்களுக்கான மூலங்களும் அதேசமயம் சேமிப்பும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உடையனவாகக் காணப்பட்டன.
இவ்வாறு பல்வேறு வகையிலும் உற்பத்தி அளவு அதிகரித்தமையினால் வேறுபட்ட அமைப்புக்களிலான சேமிப்பும் சொத்துடமையும் ஏற்பட்டமை முக்கியமாக சமத்துவமின்மை, சுரண்டல் எனும் இரு காரணிகளின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. அதிகரித்த உற்பத்தி முறைகள் சேமிக்கவும் வைத்திருக்கவும் பின் பங்கீடு செய்யவும் வழி ஏற்படுத்தியதுடன் சிலர் ஏனையவர்களின் விலங்குகளையும் ஆயுதங்களையும் கைப்பற்றவும் முனைந்த மையினால் பொருளாதாரக் காரணிகளில் சமத்துவமின்மையை ஏற்படுத்திய அதேசமயம், ஆரம்பத்தில் மக்கள் தமக்குத் தேவையானதை தாமே உற்பத்தி செய்தமையினால் ஒருவரின் உழைப்புச் சக்தியை இன்னொருவர் சுரண்டுவது இயலாததாக இருந்த நிலைமாறி அதிகரித்த சுரண்டல் முறை ஒன்றுக்கு வழிவகுத்தது. இவ்வடிப்படையில் சமூகம் இருவேறு வர்க்கங்களாகப் பிரிவு படலாயிற்று.
ஆதி கம்யூனிச சமுதாயம் மிக விரைவாக புதிய சமூக முறை ஒன்றிற்கு வழிவிடலாயிற்று. இப் புதிய சமுதாயத்தில் சொத்துடமை உள்ளவர், சொத்துடமை இல்லாதவர் என இரு வேறு வர்க்கங்கள் காணப்பட்டனர். இச்சமுதாயத்தில் வர்க்கங்களின் தோற்றத்தின் போது சொத்துடைய வர்க்கத்தினர் சொத்துடமை அற்ற வர்க்கத்தினரின் உழைப்பு சக்தியில் தமது செயற்பாடுகளை நிலை நிறுத்த முயன்றமையினால் இரு வர்க்கங்களும் அமைதியான சமுதாயம் ஒன்றைத் தோற்றுவிக்க கூடியதாக இருக்கவில்லை. புதிய சமுதாய ஒழுங்கமைப்பில் சுரண்டல் முறைமையின் காரணமாக பழைய சமுதாயத்தின் பண்புகள் நிராகரிக்கப்பட்டு வர்க்க முரண்பாடுகள் பிரதியீடு செய்யப்பட்டன.
மோதல்களும் முரண்பாடுகளும் இச்சமுதாயத்தில் நிரந்தரமான அம்சங்களாகவே மாற்றமுறலாயின. அடிமை உடைமை சமுதாய முறைக்கான வரலாற்று ஆதாரங்கள் பண்டைய கிரேக்க காலம் அளவிற்கு வளர்ச்சியடைந்தனவாகும்.
இங்கு சுரண்டல் மிக மோசமானதாக காணப்பட்டமையினால் அடிமைகள் அடிமை உடைமையாளர்களின் தனிப்பட்ட சொத்து போன்றே கருதப்பட்டனர் அடிமைகள் எவ்வித சொத்துக்களையும் வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை. அவ்வாறே அவர்களுக்கு குடும்பங்களோ, இருப்பிடங்களோ இருக்கவில்லை. இத்தகைய அடிமைகள் அடிமை உடைமையாளர்களின் தோட்டங்களில் நிரந்தர வேலையாட்களாக பணிக்கப்பட்டிருந்தனர்.
இத்தகைய செயல் முறைகளில் அடிமைகள் எண்ணிக்கையில் அதிகளவினராகவும் உடைமையாளர்கள் சிறு தொகையினராகவும் காணப்பட்டமையினால் இவ்விரண்டு வர்க்கங்களுக்கும் இடையிலான மோதலில் சொத்துடைய வர்க்கத்தின் சார்பாக சொத்தற்ற வர்க்கத்தை அடக்குவதற்காகவே அரசு தோற்றம் பெற்றது, என்பது மாக்சிஸ விளக்கமாகும். அரசு மட்டுமன்றி சட்டம் ராணுவம் என்பவை கூட சொத்தற்றவர்களுக்கு எதிராக சொத்துள்ளவர்களினால் தோற்று விக்கப்பட்டதே என்பது மாக்சிஸத்தின் கோட்பாடாகும்.
நிலமானிய சமுதாயம்
நிலமானிய சமுதாயம் அடிமையுடைமைச் சமுதாயத்தின்; அடுத்த வளர்ச்சி கட்டமாகும். இது மார்க்ஸ் அடையாளம் காணும் மூன்றாவது கட்டம். கோட்பாட்டின் படி நிலமானிய சமுதாயமானது அடிமை உடைமை சமுதாயத்தில் இருந்து வேறுபட்டு இருந்தது. இச்சமுதாயம் அடிப்படையில் விவசாய முறைமைகளின் அபிவிருத்தியின் விளைவாகவே ஏற்பட்டது. ஆயினும் இவ்விரு சமுதாயங்களுக்கும் இடையிலான முக்கிய
ஒற்றுமை யாதெனில் தவிர்க்க முடியாதபடி இரண்டும் வர்க்க முரண்பாடுகளை உடைய சமுதாயமாகவே காண பட்டவையாகும். மார்க்ஸினால் காட்டும் நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் நில உடைமையை பெற்ற நிலப்பிரபுக்களும் நில உடைமை அற்ற குடியானவர் களும் காணப்படுகின்றனர்.
இங்கு அரசு நிலப்பிரபுக்களின் நலன்களை பேணுகின்றது. நிலபிரபுத்துவ சமூகத்தை அமைத்து முதலாளி, தொழிலாளி என்ற வர்க்க வேறுபாட்டுடன் முதலாளித்துவ சமூகம் உருவாகின்றது. இங்கு அரசு முதலாளிகளின் நலன்களைப் பேணுகின்றதாகும் இவ்வாறாக நிலமானிய சமுதாயம் அமையப் பெற்றுள்ளது.
முதலாளித்துவ சமுதாயம்
நிலமானிய சமுதாயத்தில் உற்பத்தி நடவடிக்கையின் முக்கிய அம்சமாக இருந்த விவசாயம் குடியானவர் கைத்தொழில் வளர்ச்சியின் காரணமாக தனது முக்கியத்துவத்தை இழக்கத் தொடங்கியது உற்பத்தி கருவிகள் கைவினைப் பொருட்களில் இருந்து இயந்திர கருவியாக மாற்றமடைந்து.
18ம் நூற்றாண்டின் மத்திய காலப்பகுதி அளவிலிருந்து இங்கிலாந்தில் கைத்தொழில் அபிவிருத்தி, கைத்தொழில் புரட்சி நிலமானிய சமுதாயத்தை முதலாளித்துவ சமுதாயமாக மாற்றி யமைத்தது. புதிய கண்டுபிடிப்புகளும் நவீன தொழிநுட்பங்களும் தொழிலாளர்களின் தேவைகளை அதிகம் வேண்டி நின்றமையால் விவசாயிகள் தொழிலாளர்களாக மாற்றமடைந்த அதேசமயம் சொத்துடைய பிரபுக்கள் வர்க்கம், கைத்தொழில் ஆலைகளுக்கு உடமையாளர்களாகிய முதலாளிகளாக மாற்றமடைந்ததனர். இச்சமுதாயம் முதலாளித்துவ சமுதாயம் என மார்க்சிஸவாதிகள் அடையாளம் காணப்படுகின்றது.
சோசலிச சமூகம் ஃ இலட்சிய கம்யூனிச சமூகம்
சோசலிச சமூகத்தில் மிக நீண்ட காலமாக பாதிப்படைந்து இருந்த எண்ணிக்கையில் அதிகமாக காணப்பட்ட பாட்டாளி வர்க்கம் பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை உருவாக்கி கொள்ளும் எனவும் இவ் அரசு முதலாளித்துவ சமூகத்தை முற்றாக இல்லாது ஒழித்தலும் வர்க்கங்கள் அற்ற வர்க்க முரண்பாடுகள் அற்ற அரசற்ற நவீன கம்யூனிச சமூகம் (இலட்சிய கம்யூனிசம்) உருவாகும் என மார்க்ஸ் குறிப்பிடுகின்றார்.
வர்க்க முரண்பாடு
மாக்சிஸக் கோட்பாட்டின் அடிப்படை எண்ணக்கருக்களில் ஒன்று வர்க்க முரண்பாடு என்பதாகும். உண்மையில் மாக்சிஸமே வர்க்க முரண்பாட்டின் அடிப்படையிலேயே தன்னை கட்டியெழுப்ப முற்பட்டுள்ளது என வர்ணிக்கப் படலாம்.
சொத்துடைமையின் தோற்றம் ஆரம்ப காலத்திலிருந்தே சமூகத்தில் இரண்டு வர்க்கங்களை தெளிவாக வேறுபடுத்துவதில் வெற்றியடைந்துள்ளது. இவ் வர்க்கங்களின் நலன்கள் ஒன்றுடனொன்று பொருத்தம் உடையனவாகக் காணப்படுவதில்லை. எனவே அவற்றுக்கிடையில் முரண்பாடுகளும் மோதல்களும் பொதுவானவையாக இருந்தன. அடிமை உடைமை சமுதாயத்தில் இரண்டு தெளிவான வர்க்கங்களாக மார்க்ஸ் அடிமைகளையும் அடிமை உடைமையாளர் களையும் சுட்டிக்காட்டுகின்றார்.
நிலமானிய சமுதாயத்தில் இருவேறு வர்க்கங்களாக குடியானவரும் பிரபுக்களும் காணப்பட்டனர். முதலாளித்துவ சமுதாயத்தின் இரு வர்க்கங்கள் தொழிலாளிகளும் முதலாளிகளுமாவர். இவ் வர்க்கங்கள் ஒன்றுடன் ஒன்று சாதகமான உறவைக் கொண்டிருக்க வில்லை இரு வர்க்கங்களும் உற்பத்தி காரணிகளை தத்தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவர முனைகின்ற போது அவற்றுக்கிடையே முரண்பாடுகள் ஏற்படுகின்றன.
ஏனெனில் பூர்சுவாக்கள் பாட்டாளிகளின் உழைப்புச் சக்தியின் மூலம் அதிக இலாபத்தினை அடைந்து கொள்கின்றமையினால் பாட்டாளிகள் இயல்பாகவே சுரண்டலுக்கு உட்படுகின்றனர்.
மாக்சிஸ கருத்துக்களின் படி இரு வர்க்கங்களிலும் முக்கியமான, அவசியமான வர்க்கம் பாட்டாளிகளே அன்றி பூர்சுவாக்கள் அல்ல அத்துடன் இங்கு பாட்டாளிகள் பெரும் தொகையினராகவும் பூர்சுவாக்கள் சிறுபான்மையினராகவும் காணப்படுகின்றமையினால் போராட்டத்தின் இறுதியில் பாட்டாளி வர்க்கமே வெற்றி பெறும்.
அரசும் அதன் வேறாக்கமும்
மாக்சிஸ கோட்பாடு அரசு பற்றி விளக்குகின்ற போது அது வரலாற்று வளர்ச்சியின் விளைவு என்கின்றது. ஆரம்பத்தில் அரசு என்ற நிறுவனம் காணப்படவில்லை. இங்கு சமூகங்களே காணப்பட்டன. அன்றி சமூகங்கள் அரசுடன் எத்தகைய தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. எனினும் வரலாற்று வளர்ச்சியில் பொருளியல் வளங்களின் தோற்றத்தினால் ஏற்பட்ட வர்க்க வேறுபாடுகளில் சொத்துடைய
வர்க்கத்தின் சார்பாக அதனை பாதுகாப்பதற்காகவே அரசு தோன்றியது என்பது மார்க்சிஸத்தின் கருத்தாகும்.
அரசின் நோக்கம்
அரசு வர்க்க நலன் பேணும் கருவி என்பது இக் கோட்பாட்டின்படி அரசின் நோக்கமாகும். ஏனெனில் அரசு தோன்றிய ஆண்டான் அடிமை சமூகக் காலம் தொடக்கம் அது செல்வம் படைத்த வர்க்கத்தினரின் நலன்களையே பேணி வருகின்றது. அதாவது ஆண்டான் அடிமைச் சமூகத்தில் ஆண்டான்களினதும் அதன் பின்னரான காலத்தில் நிலமானிய சமூகத்தில் நிலப்பிரபுக்களினதும் அதனை அடுத்து கைத்தொழில் சமூகத்தில் முதலாளிகளினதும் நலன்களை அரசு பேணி வந்துள்ளது. எனவே இங்கு அரசு வர்க்க நலன் பேணிவருகின்ற கருவியாக செயல்படுகின்றது என கோட்பாடு குறிப்பிடுகின்றது.
அரசின் எதிர்காலம்
இக் கோட்பாட்டின்படி அரசுக்கு எதிர்காலமில்லை. வர்க்க முரண்பாடுகளின் விளைவாகத் தோன்றிய அரசு சமூகத்தில் வர்க்க முரண்பாடுகளை இல்லாது ஒழிப்பதன் மூலம் அழிந்து விடும் என கூறுகின்றது. இதுபற்றி மார்க்ஸ் குறிப்பிடுகையில் வர்க்க முரண்பாடுகள் அற்ற இலட்சிய கம்யூனிச சமூகத்தில் “மரத்தில் இருந்து மலர் வாடி உதிர்வது போல் அரசும் உதிர்ந்து விடும்” எனக் குறிப்பிடுகின்றார்.
அரசின் கீழ் வாழும் பிரஜைகளின் நிலை
சோசலிச அரசின் கீழ் வாழும் பிரஜைகளின் நிலையானது தாராண்மைவாத அரசுடன் ஒப்பிடுகையில் முதன்மை தன்மை குறைந்ததாகும். இதற்கான காரணம் சோசலிச அரசில் பிரஜைகளின் சில உரிமைகளின் மீது வரையறைகளும் (கருத்து வெளிப்பாட்டு உரிமை, சொத்துரிமை) சில உரிமைகள் மறுக்கப்பட்டும் (அரசியல் கட்சிகளை அமைக்கும் உரிமை) மறுக்கப்பட்டும் உள்ளன இதனால் பிரஜைகளின் நிலையானது முக்கியத்துவம் குறைந்ததாகக் காணப்படுகின்றது.
பொருளாதாரத்தின் நிலை
இக் கோட்பாட்டின் படி பொருளாதாரமானது மூடப்பட்டதாகவும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளடக்கப்படுவதாகும். இலாப நோக்கம் மிகக் குறைந்ததாகக் காணப்படும் உற்பத்திகள் யாவும் சமூக நோக்கத்தினை உடையதாகவும் இலாப நோக்கு மிக குறைந்ததாகவும் இருக்கும்.
ஆகவே இது ஒரு திட்டமிடப்பட்ட பொருளாதாரம் ஆகும். இங்கு பொருட்கள் சேவைகளின் விலைகள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கப்படும் இங்கு நுகர்வோரும் தொழிலாளர்களும் அதிக நன்மை பெறுவராகும்.
மாக்சிஸ கோட்பாடானது பிற்காலத்தில் அபிவிருத்தியடைந்த ஒன்றாக காணப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு,
இது புதிய வடிவங்களையும் எடுத்துக் கொண்டதுடன் சில சந்தர்ப்பங்களில் மார்க்சிஸத்தின் அடிப்படை கருத்துக்களிலே மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய சோசலிஸ இயக்கத்தின் தலைவரான லெனின் மாக்சிஸத்தில் மேற்கொண்ட அபிவிருத்திகள் சிறப்பானவையாகும்.
உதாரணம் : முதலாளித்துவத்தின் பிந்திய வளர்ச்சி பற்றி அதாவது ஏகாதிபத்திய முதலாளித்துவம் பற்றி அவர் குறித்து மேற்கொண்ட ஆய்வுகள்
ஸ்டாலின், ட்ரொஸ்கியு ஆகியோரின் அபிவிருத்திப் பணிகள் போன்றவை முக்கியமானவையாகும்.
மாக்சிச கோட்பாடானது பொருளாதாரத்தை முதன் முதலாக விஞ்ஞான பூர்வமாக ஆய்வு செய்ய முற்பட்ட ஒன்றாக இருந்தபோதும் அதன் நடைமுறைச் சாத்தியம் 1917ம் ஆண்டு ஆகும்.
இவ்வாண்டின் பின்னர் நிரூபிக்கப்பட்ட போதும் கோட்பாட்டின் படி ஒவ்வொரு அம்சமும் விமர்சிக்கப்படுவதாகவும் கண்டிக்கப்படுவதாகவும் அரசியல் அறிஞர்களினால் கருத்துக்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ன. அந்தவகையில் பெருமளவான அறிஞர்கள் மார்க்சின் பொருளியல் அடிப்படையை ஏற்றுக்கொள்கின்றனர். ஆயினும் சில விடயங்கள் குறைபாடுகளாகச் சுட்டிக் காட்டப்படுகின்றன அவையாவன,
மார்க்ஸ் தனித்த பொருளாதார காரணிகளுக்கே முக்கியத்துவம் அளித்ததன் மூலம் வரலாற்று நிகழ்வுகளை பாதிக்க கூடிய காரணிகளை புறக்கணித்தமை.
மாக்சிஸம் அரசு தனித்து சுரண்டல் முறைமையினால் தோற்று விக்கப்பட்டது, என இக்கோட்பாடு கூறுகின்றது. இக்கோட்பாட்டை பொருத்தவரை சுரண்டல் இன்றி அரசு தோன்றுவதற்கான காரணி ஒன்று இருக்கவில்லை என்ற கருத்தும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படடது.
மார்க்ஸ் அரசுடன் இணைந்த வகையில் பலாத்காரத்தை விளக்கி இருப்பதும் விமர்சிக்கப்பட்டது.
மார்க்ஸ் தனது கோட்பாட்டில் வர்க்கங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்ததால் புதிதாக தோற்றம் பெறக்கூடியதாக இருந்த தேசியவாத அம்சங்களையிட்டு அதிக கவனம் செலுத்தவில்லை.
மாக்ஸின் அரசு பற்றிய எண்ணங்கள் அவர் வாழ்ந்த கால சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. ஆயினும் இன்றைய முதலாளித்துவம் மார்க்ஸ் வர்ணித்த முதலாளித்துவமாகக் காணப்படவில்லை.
போன்றவை மாக்சிஸ கோட்பாட்டில் காணப்பட்ட குறைபாடுகளாகும்.
கம்யூனிசத்தின் கீழான அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகளின் இறுக்கமான கட்டுப்பாடுகளில் சில நிகழ்ச்சிகளை மேற்கொள்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சியின் விளைவாகவே சோஷலிச நாடுகளில் அரசாங்கங்கள் வீழ்ச்சியுறும் செயன் முறைகளில் இறுதியாக சோவியத் யூனியன் சிதைந்து போனமை மார்க்சிஸ வரலாற்றின் முக்கியமான தொன்றாகும்.
இவ்வகையில் முதலாளித்துவம் முழுமையாக வீழ்த்தப்படும் என்ற மார்க்ஸின் கனவு அனுபவ ரீதியாக பொய்யாக்கப்பட்டுள்ளதுடன் அவரின் எண்ணத்திற்கு மாறாக அது மேலும் மேலும் பலமடைந்து செல்லும் ஒன்றாகவே அபிவிருத்தி அடைகிறது.
புதிய உலக ஒழுங்கமைப்பு முதலாளித்துவமே என்பது கம்யூனிசத்துக்கு எதிரான முதலாளித்துவத்தின் வெற்றி என வர்ணிக்கப்படலாம் இதன் காரணமாக கம்யூனிஸம் வெற்றிகரமான செயற்பாட்டு வடிவம் என்பதையும் சிலர் நிராகரிக்க முற்படுகின்றனர். இவர்களைப் பொறுத்தவரை அனுபவம் மீண்டும் கம்யூனிஸம் நடைமுறையில் சாத்தியமற்ற “ஒரு கல்வியல் கோட்பாடு” ஆக மட்டுமே
தொடர்ந்திருக்க முடியும் என வர்ணிக்கின்ற போதும் எதிர்கால அரசியல் நிலைமைகளின் அபிவிருத்தி தெளிவாக அடையாளம் காணப்பட முடியாத தாகவே உள்ளது. இவ்வாறாக மாக்சிஸ கோட்பாடானது அரசியல் கோட்பாடுகளில் ஒன்றாக திகழ்கின்றது என்பதை அறியலாம்.
0 تعليقات