மானிடவியலின் தந்தை
போக்குவரத்து வசதியற்ற தொடக்ககாலத்தில் கால்நடையாகப் பயணம் மேற்கொண்டு அக்காலத்தில் வாழ்ந்த மக்களை நேரில் கண்டு வாழ்க்கை முறைகளைப் பதிவு செய்தனர் அறிஞர்கள். இவர்களில் முதன்மையானவர் யார் என்று கூற முடியாத நிலையில் மக்களது வாழ்வியலை வகைப்படுத்தியுள்ள கோட்பாட்டின் அடிப்படையில் ஹெர்டர், ஆர்.ஜி.காலிங்வுட், டார்வின், ரூசோ. போன்றோரை மானிடவியலின் தந்தையாக முன்மொழிகின்றனர் அறிஞர்கள். ஹெர்டர் என்பவர் "மனித வரலாற்றைப் பற்றிய தத்துவத்தின் கருத்துக்கள் (Ideas for the Philosophy of Human History 1784-1791) என்ற தலைப்பில் நான்கு தொகுதிகளை வெளியிட்டார். அந்நூல் வரிசையில் ஹெர்டர் உலகத்தின் தோற்றம் குறித்தும்.
மனிதனின் தோற்றம் குறித்தும், வரலாற்றுக் காலத்தினூடே மனிதனின் செயல்கள் எவ்வாறிருந்தன என்பன குறித்தும், மனிதனோடு தொடர்புடைய பிற கருத்துக்கள் குறித்தும் விவரிக்கிறார்.
ஆர்.ஜி.காலிங்வுட் எழுதிய வரலாற்றின் கருத்துகள் (Ideas of History, 1946) என்னும் நூலில் மானுடவியல் என்பது தனிப்பட்ட உடலமைப்பையும். உளப்பாங்கினையும் கொண்ட ஒவ்வோர் இனத்தவரின் பண்பாட்டை அறியும் அறிவியல் என்று கூறப்படுமானால், இத்துறையின் தந்தையாகப் போற்றப்பட வேண்டியவர் ஹெர்டரே என்பார்.
மனிதனின் வளர்ச்சி' (அறிவொளிக் காலத்தில் படிமலர்ச்சி என்பதற்கு ஈடாகப் பயன்படுத்தப்பட்ட சொல்) குறித்து நிலவி வந்த ஊகக்கருத்துகளுக்கு உயிரியல் அடிப்படையில் தார்வின் ஏற்படுத்திய படிமலர்ச்சிக் கொள்கையானது (Evolutionism) மனித அறிவியலில் என்றும் அழியாத உண்மையான திறவுகோலாய் அமைந்ததால் தார்வினை மானுடவியலின் தந்தை எனக் கொள்ளலாம் என்பர் அமைப்பியலின் தந்தையான லெவிஸ்ட்ராஸ். 1963-இல் எழுதிய ரூசோ மானுடவியலின் தந்தை (Rousseau father of Anthropology) என்னும் கட்டுரையில் ரூசோவை மிக உயரிய நிலையில் வைத்துப் போற்றுகிறார். மனிதன் தன்னைப் பற்றி தன் நிலையில் அறிந்து கொள்வதற்கு முன்னர் தன்னையே ஓர் அயலார் என்ற நிலையில் முதலில் ஆராய வேண்டுமென கூறியவரும் ரூசோ. ஆகவே ரூசோவை மானிடவியலின் தந்தை எனக் கூறுவதே சிறப்பானது என்பார் லெவிஸ்ட்ராஸ்" (1992: ப.34) என்று சுட்டிக்காட்டுகிறார் தேவ நேய பாவாணர். இவர்கள் அனைவருமே மக்களை நேரில் சந்தித்து அவர்களது வாழ்வியல் முறைகளை கண்ட பின்பே தங்களது கருத்துக்களைக் கூறினர். இவர்கள் கூறிய கோட்பாடுகளே பிற்கால மானிடவியல் வளர்ச்சிக்குத் திறவுகோலாய் அமைந்தது.
மானிடவியலின் தோற்றம்
மானிடவியல் சார்ந்த சிந்தனை எந்தக் காலகட்டத்தில் தோன்றியது என்று மிகவும் துல்லியமாகக் கூறமுடியாது. மனிதன் தோன்றியபோதே மானிடவியல் சிந்தனைகள் தோற்றம் பெற்றன என்பர். கிறிஸ்து பிறப்பிற்கு முன்னே மானிடவியல் சிந்தனைகள் தோற்றம் பெற்றன. தொடக்க காலத் தத்துவ வாதிகள் மனித சமூகங்களை அறியத் தொடங்கியதிலிருந்து மனித இனம், சமூகம், பண்பாடு பற்றிய ஆய்வுகள் தொடங்கியது. மானிடவியல் ஆய்வாளர்களுள் "செனோபேன்ஸ் (கிமு. 570-475) ஹெரோடாட்டஸ் (கி.மு. 484 425) டெமோகிரிட்டஸ் (கி.மு.460 - 370) புரோட்டோகோரஸ் (கி.மு.480-410) சாக்ரட்டீஸ் (கி.மு. 470 399) பிளேட்டோ (கி.மு. 427-437) அரிஸ்டாட்டில் (கி.மு.384-322) எப்பிக்கூரஸ் (கி.மு. 341-270) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்" (1999: ப. 20) என்று பக்தவத்சலபாரதி சுட்டிக்காட்டுகின்றார். 19-ஆம் நூற்றாண்டு மனிடவியலில் பெரும் மாற்றத்தைப் பெற்றதாகக் கூறுகின்றனர்.
அறிஞர்கள். "19-ஆம் நூற்றாண்டு மானிடவியல் ஆய்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய ஆண்டாகும். 1859-இல் டார்வின் பரிணாமக்கொள்கையின் வழி மனிதனைப் பார்த்தார். காரல்மார்க்சும், ஏங்கெல்சும் பொருளாதார அடிப்படையில் சமுதாய வளர்ச்சியைப் பார்த்தனர். கிரிகர் ஜோகன் மெண்டன் 1865 இல் மரபு வழிப்பட்ட விதிகளின் வழி மனிதனைப் பார்த்துப் பாராட்டுப் பெற்றனர். மனித இரத்தத்தை ஏ.பி.சி. என்று பகுத்துப் பார்த்தனர். பிராய்டு பாலியல் உறவுகளின் வழி மனிதர்களைப் பார்த்தார். மார்கன் பழைய சமுதாயத்தை ஆராய்ந்தார்.
இவையெல்லாம் மானிடவியல் ஆய்வில் செழுமை ஏற்படத்துணை நின்றன" (2007: ப. 199) என்று ஆய்வுக்கட்டுரைக் கூறுகின்றது. மேலை நாடுகளில், அமெரிக்க மானிடவியல், ஆங்கிலேய மானிடவியல் என்னும் இருபிரிவுகள் இருந்தது. "ஆங்கில நாட்டைச் சேர்ந்த தார்வின் உயிரினங்களின் தோற்றம் என்ற நூலை கி.பி.1859-ஆம் ஆண்டு வெளியிட்டார். அவ்வாண்டே மானிடவியல் தோற்றமாகக் கருதப்படுகிறது" (2009: ப.334) என வாழ்வியற் களஞ்சியம் விளக்கமளிக்கிறது. மானிடவியல் தோன்றியது முதல் இன்றைய நிலை வரை நான்கு காலகட்டங்களாக வளர்ச்சி அடைந்ததாகக் கூறுகிறார் பென்னிமேன்.
அவையாவன,
கருவுற்ற காலம் (கி.பி. 1835 க்கு முன்னர்)
ஒருமுகப்படுத்தப்பட்ட காலம் (கி.பி. 1835 முதல் 1859 வரை)
ஆக்கநிலைக் காலம் (கி.பி. 1859 முதல் 1900 வரை
வளர்ச்சியுற்ற காலம் (கி.பி. 1900 முதல் 1935 வரை)










0 Comments